Thursday, August 31, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

சிவாஜி நிலவரம் (நகைச்சுவை) !
சரவணன் : சூப்பர் சார்... ! எப்படி சொல்றதுன்னு தெரியலை, இருந்தாலும் உங்களை விட்டால் யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை

சூப்பர் : என்ன சொல்ல வர்றீங்க, வழக்கமா எனக்கு தான் சொல்லவே வராது

சரவணன் : இதுவரைக்குக் 40 கோடி அள்ளிவிட்டாச்சி

சூப்பர் : தெரிஞ்சது தானே, 40க்கு 100 கிடைக்க போவதே

சரவணன் : கிடைக்காது போலிருக்கு

சூப்பர் : என்ன சார் சொல்றிங்க

சரவணன் : படத்தோட சீனு எல்லாம் இன்டர் நெட்டுல வந்துடுச்சின்னு சொல்லி...

சூப்பர் : அதுவும் தெரிஞ்ச விசயம் தானே !

சரவணன் : அதே தான், அதச் சொல்லி டைரக்டர் என்ன சொல்றாரு தெரியுமா?

சூப்பர் : சார் ... நீங்க புரோடியூசர், அவரு டைரக்டர் எனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்

சரவணன் : இப்ப என்ன ஆச்சு தெரியுமா, சுவிட்சர்லாந்தில எடுத்த சீன் எல்லாம்
எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சின்னு, டைரக்டர் அதிர்ச்சி ஆயிட்டாராம்

சூப்பர் : நான் கூட கேள்விப் பட்டேன் மிஸ்டர் சரவணன், இதெல்லாம் இன்டெர்நெட் இருக்கிறதால ஒடனே பரவிடுது

சரவணன் : ஆமாம், நானும் அதைத்தான் சொன்னேன். ஒன்னும், குடிமுழுகல இருக்கிறதையே காட்டலாம் என்றேன் டைரக்டர் கோபப்படுகிறார்

சூப்பர் : என்னவாம்

சரவணன் : எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, நான் எடுக்கிற படம் என்றால் அதை தனிக்கை குழுகூட ரிலிஸ் பண்ணறத்துக்கு முன்னால பார்க்கக் கூடாதுங்கிறார்.

சூப்பர் : ம்.. அப்பறம் தனிக்கை சர்டிபிகேட் இல்லாமல் எப்டி ரிலிஸ் செய்கிறதாம் ?


சரவணன் : அவரு இங்க இருக்கிற தணிக்கை குழுக்கிட்ட போறது இல்ல, நேர மும்பை இல்லாட்டி டெல்லி போய் வாங்கிக்கலாம்னு சொல்றார். போன படத்திலும் அப்படித்தான் செய்தாரம்.

சூப்பர் : சரி எதோ செய்யுங்க இதான் பிரச்சனையா ?

சரவணன் : சூப்பர் சார் அது பிரச்சனை இல்லை

சூப்பர் : வேறு எதுதான் பிரச்சனை. நம்ம கலிஞர் ஐயாதானே இப்ப முதல்வராக இருக்கிறார்

சரவணன் : இது அரசியல் விவகாரம் இல்லை, விவகாரம் டைரக்டரால

சூப்பர் : கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

சரவணன் : தெளிவா சொல்றத்துகுள்ள எதாவது யோசனை செஞ்சிக்கிட்டே இமயமலைப் பக்கம் போய்டுவிங்கலேன்னு...

சூப்பர் : சார்.. அதெல்லாம் ஒன்னுமில்லை கண்டிப்பா படம் முடியறவரைக்கு வேறு எங்கும் போக மாட்டேன்.. நா ஒருதரம் சொன்னா..

சரவணன் : போதும் நம்பிக்கை வந்துடுச்சி. நம்ப டைரக்டர் ஒங்கள வச்சி எடுத்தப்படக் காட்சிகள் வெளியில வந்ததால, வேறு காட்சிகள் வைத்து யாருமே செல்லாத அமேசன் காட்டுகுள்ள போய் எடுக்கப் போறாராம்.

சூப்பர் : என்ன சரவணன் சார் பயமுறுத்துறிங்க

சரவணன் : நானே பயந்து தான் போயிருக்கிறேன். இது வரைக்கும் செலவு செஞ்ச பணமே
அனகோண்டா மாதிரி கழுத்தைப் பிடிக்குது

சூப்பர் : அது சரி அமேசன் சூட்டிங்க் போன அனகோண்டாவே கழுததை பிடிச்சுடுமே

சரவணன் : இதைத்தான் நான் சொன்னேன்

சூப்பர் : அவரு அதுக்கு என்ன சொன்னார் ?

சரவணன் : இங்கேயே செட்டு போட்டு எடுத்திடலாம் என்கிறார்

சூப்பர் : நல்ல யோசனை தானே, சோழவரம் ஏரியோ, பிச்சாவரம் ஏரியோ அதுல ஒன்னுல செட்டுப் போட்டு எடுத்திடலாமே சரவணன் சார்

சரவணன் : அதுலயும் சிக்கல், சுற்றுச் சூழல் நிர்வாகத்தினர் அனுமதி கொடுக்க மாட்டாங்களாம் !

சூப்பர் : அதுவும் சரிதான், இதைத் தெரிஞ்சுமா டைரக்டர் பிடிவாதமாக இருக்கிறார்

சரவணன் : அவரு சொல்றார் 'இந்த ஒரு சீனுதான் படத்தில் முக்கியம், அதை வெச்சுதான் 200 நாள் ஓட்டலாம் என்று இருக்கிறேன் படத்தில் அமேசான் காடுகள் கண்டிப்பாக வரனும், கதைப்படி வில்லன் சுமன் படம் எடுக்கிறத்துக்காக ஹீரோயினியை அமேசான் காட்டுகுள்ள கடத்திட்டு போய்விடுவாராம்... அதை தெரிஞ்சிக்கிட்ட ஹீரோ, அனகோண்டாவுக்கு மத்தியில் வில்லனை அனகோண்டாவை வச்சே பின்னி எடுக்கிறார்.. அந்த சமயத்தில் ஒரு அனகோண்டா ஹீரோயினையை லபக்க முயற்ச்சிப் பண்ணுது... ஹீரோ ஹீரோயினை அனகோண்டா கிட்டேர்ந்து காப்பாத்துறார்.

அதனால சோழவரம் ஏரிகிடைக்க வில்லை என்றால், சோழாவரம் ரேஸ் மைதானம் இப்ப சும்மாதான் இருக்கு, அதை 60 நாளைக்கு லீசுக்கு எடுத்து, அமேசான் காடு மாதிரி செட்டு போட்டிடலாம், செயற்கையா வேண்டுமானால் பத்தாயிரம் அனகோண்டா செஞ்சிடலாம் ஒரு முப்பது கோடிதான் செலவு ஆகும்' என்று கூலாக சொல்கிறார்.

சூப்பர் : என்னது மூன்று நிமிச சீனுக்கு 30 கோடியா ? டைரக்டர் அப்படியா சொன்னார் ?

சரவணன் : ஆமாம் ! இதுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் படம் 2010 தீபவளிக்குதான் ரிலிஸ் ஆகும் என்னை கோவிச்சிக்காதிங்க என்று கறாராக சொல்கிறார். இதை உங்கள விட்டா நான் யாருகிட்ட சொல்றது.

சூப்பர் : எனக்கு கொழப்பமாக இருக்கு சரவணன் சார், மருமகனை தேற்றிவிட அடுத்த படத்தை அவரைவச்சி
டைரக்ட் பண்ணச் சொல்லலாம் என்று இருந்தேன் ... இப்ப யோசிக்கனும் போல இருக்கு.

சரவணன் : சூப்பர் சார், எதுக்கும் நம்ம படம் முடியட்டம் அதுக்குள்ள அவசரப்பட்டு அவருக்கு வாக்கு கொடுத்திடாதிங்க. உங்களுக்கு ஒன்னு தெரியுமா ?

சூப்பர் : சொல்லுங்க சரவணன் சார்

சரவணன் : ஏற்கனவே போட்ட பட்ஜட்டைவிட இரண்டு மடங்கு இதுவரைக்கும் எகிறிடிச்சு, கண்ணாடி முன்னால போயி என் முகத்தைப் பார்த்தால் ஏ.எம் ரத்தினமும். கே.டி.குஞ்சுமோனும் என்னைப் பார்த்து பழிச்சிக்காட்டி சிரிக்கிறமாதிரி இருக்கு 1

சூப்பர் : என்ன கொடுமை சரவணன் சார் !!! இது

பின்குறிப்பு : இது ஒரு லக்க லக்கவுக்கு .... சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி கல கலப்புக்காக எழுதிய கற்பணை உரையாடல்.

Wednesday, August 30, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

இடப்பெயற்சி [கவிதை] !களித்து இன்புற்று இனப்பெருக்க
கண்டம் விட்டு கண்டம் செல்லும்
பறவைகள் !

கடல்கடந்து காசு தேடி அலைந்து
கட்டியவளையும், குடும்பத்தையும் மகிழ்வுடன் காணவரும்
ஆண்கள் !

காடு மேடுகளில் மேய்ந்துவிட்டு மகிழ்வுடன்
சாயுங்கால நேரம் கொட்டில் தேடிவரும்
ஆடுமாடுகள் !

கர்பமுற்றதும் ஈன்றெடுக்க, மனக்
களிப்புடன் ஈன்ற தாய்வீடு செல்லும்
பெண்கள் !

இடப் பெயற்சியினால்
இவர்களுக்கெல்லாம் கிடைக்கும் அதே மகிழ்ச்சி,
ஈழத்திலிருந்து தாயகம் நோக்கி தளர்வுடன் வரும் நம்
ஈழ சகோதரர்களுக்கும் கிடைக்க இருகரம் நீட்டுவோம் !
தமிழ்மணம் கருவிபட்டை

ஓ.பன்னீர் செல்வத்துக்கு 'ஓ' போட்ட முதல்வர் !!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சூது, வாது தெரியாத சாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில், இன்று (நேற்று) நடந்த காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு கருணாநிதி பதில் அளித்துப் பேசுகையில், அதிமுக ஆட்சியில் தான் காவல்துறை உன்னத நிலையை அடைந்ததாக எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பனனீர் செல்வம் பேசினார்.

அதில் நான் குறுக்கிட்டுப் பேச விரும்பவில்லை. அப்படி பேசினால் அவர் நோகக்கூடும் என்பதால் அப்போது பேசவில்லை. எனக்கு சிறு வயதிலிருந்தே பன்னீர்செல்வம் என்ற பெயர் பிடித்தமானதாகும்.
மூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது கட்டாய இந்தியைக் கொண்டுவந்தார்.

அப்போது இதே அவையில் ஏ.டி.பன்னீர் செல்வம் அதை எதிர்ததார். நீங்களும், சோம சுந்தர பாரதியும் தான் இதை எதிர்க்கிறீர்கள் என்றார் ராஜாஜி. அதற்கு பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், நீங்கள் ஒருவர் மட்டும் தான் இந்தியை கொண்டு வருகிறீர்கள். எதிர்ப்பு இருவராக இருப்பதால் நாங்கள் தான் மெஜாரிட்டி என்று சாதுரியமாக கூறினார்.

ஏ.டி.பன்னீர் செல்வம் அளவுக்கு ஓ.பன்னீர் செல்வம் சாதுர்யமானவர் என்று சொல்ல மாட்டேன். அவர் சாது, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். ஆனால் இவரோ, சூது வாது தெரியாத சாது என்றார் முதல்வர்.

செய்தி தட்ஸ்தமிழ் - இணையப்பக்கம் நன்றி

Tuesday, August 29, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பின்னூட்ட ரிப்பீட்டு !!!

சில நேரங்களில் தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் இப்படியும் வருகிறது. கவனித்திருக்கிறீகளா ? !!!


செம்மறி ஆடே ! செம்மறி ஆடே !
செய்வது சரியா சொல் !

Monday, August 28, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

விளையாடுபவர்களை வேட்டையாடு !

முன்பே எழுத நினைத்த ஒன்றை தலைப்பு பிரபலம் ஆகிவிட்டதால் அதே தலைப்பில் எழுதகிறேன். கிரிக்கெட் விளையாட்டு பற்றி கொஞ்சம் விளையாடலாம். சச்சின் டெண்டுல்கர் ரசிகர்கள், மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கம்.

கிரிக்கெட் என்பது இந்திய விளையாட்டில் முதன்மைப் பெற்று 25 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதில் 1983 உலக கோப்பையை மட்டுமே உலககோப்பை வரலாற்றில் இந்தியா வென்றிருக்கிறது. சச்சின் டெண்டுலகர் 1992 உலக கோப்பை முதலாக 4 உலக கோப்பைப் போட்டியில் விளையாடியிருக்கிறார். அடுத்துவரும் உலக கோப்பை போட்டியிலும் விளையாடப் போவதாக சொல்கிறார்கள்.

சச்சின் ஒரு நட்சத்திர ஆட்டக்கரார் என்பதை அவ்வப்போது நிறுபித்துவருகிறார். அணி வெற்றிப் பெறுகிறதோ இல்லையோ, அவரது தனிப்பட்ட சாதனை தொடர்ந்தது ஏறுமுகத்தில் இருகிறது. அதாவது ஒரு நாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர், அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர், அதிக டெஸ்போட்டிகளில் விளையாடியவர் என்று தனிப்பட்ட சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அவருக்கு வழங்கப்படும் தொடர்ந்த வாய்ப்புகளின் காரணமாக, ஒரு நாள் போட்டியில் சில வற்றில் சோபிக்காவிட்டாலும், வேறு போட்டிகளில் பவுலிங்கில் நன்றாக திறமையை நிறுபித்து தனக்கு ஏற்பட்ட சரிவை ஒருவாறு சரிசெய்கிறார். மற்ற வீரர்களுக்கு அவ்வாறு வாய்ப்புகள் வழங்கப்படுவதும் குறைவே.

அவருக்கு கொடுக்கப்பட்ட அணித் தலைவர் பதவி தனது தனிப்பட்ட சாதனைக்கு இடையூறாக இருக்கும் என்றே சில போட்டிகளில் விளையாடி முடிவு தெரிந்ததும் அணித் தலைவர் பதவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

ஆயிரக்கனக்கான இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வத்துடன் பயிற்ச்சி எடுத்துக் கொண்டு காத்திருக்கும் போது சச்சின் டெண்டுல்கருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது ஏன். கிரிக்கெட்டுக்கு தேவை புது ரத்தம். ஏற்கனவே தற்போதைய சச்சின் வயதில் முன்பு விளையான்ட வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்ட வரிசையில் கபில்தேவ், கவஸ்கர் மற்றும் பல முன்னனிவீரர்கள் அடங்குவர். அவர்களுக்கெல்லாம் இல்லாத சிறப்புத் தகுதியை ஏன் சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய கிரிக்கெட் வழங்க வேண்டும்.

அவரது சுண்டுவிரலில் அட்ப்பட்டதற்காக கோடிக்கணக்கில் செலவளித்து அவரை மீண்டும் அணியில் வைத்திருப்பதில் கிரிக்கெட் வாரியத்துக்கு என்ன லாபம் ? சச்சின் இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் அஸ்தமித்துவிடுமா என்ன ? சச்ச்சின் தான் இந்திய கிரிக்கெட்டின் நாயகன் என்றால் இந்தியா அவர் விளையாடிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் ஒரு உலககோப்பையிலாவது வென்றிருக்க வேண்டும். அவ்வாறு இதுவரை நடக்கவில்லையே!

அவரது வயதையும், வாய்ப்புக்காக காத்திருக்கும் பல்வேறு மானிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கனக்கான இளைஞர்களை மனதில் கொண்டும் சச்சினுக்கு ஓய்வு கொடுத்தால் என்ன ? சச்சின் தானாகவே வெளியேற வேண்டும் என்று ஒருமுறை கபில்தேவ் மறைமுகமாக குறிப்பிட்டதையும் இங்கு நினைவுகொள்ளலாம். இந்திய கிரிக்கெட் அடுத்த உலக கோப்பையை சந்திக்க இருக்கும் நேரத்தில் இதுபற்றி தெளிவுபடுத்தினால் நல்லது. கிரிக்கெட் ரசிகர்கள் இதுபற்றி என்ன கருத்துச் சொல்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக இருக்கிறேன். நானும் சச்சின் ரசிகனே என்பதையும் பெருமையாக கூறிக் கொள்கிறேன்.

Sunday, August 27, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

எனக்கில்லை !

தேன் கூடு போட்டி முடிவுகள் வந்துவிட்டது! சரியான போட்டி, நிறைவான படைப்புகள். எனக்கு தெரிந்து மிக நல்ல படைப்புகள் வெளிவந்தது இந்த தலைப்பில் தான் என்று நினைக்கிறேன். இந்த போட்டியை வழி நடத்திய தேன்கூடு மற்றும் தமிழோவியம் நிறுவனத்தாருக்கு நன்றி. ஆக்கங்களை நன்கு படித்து ஆராய்ந்து மதிப்பீடு செய்த திரு பாஸ்டன் பாலா அவர்களுக்கும் நன்றி

முதல் மூன்று இடங்கள் பெற்ற ஆக்கங்கள் பின்வருமாறு:


வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கு கிடைத்தது 15 வது இடம் வாக்களித்தவர் என்னையும் சேர்த்து 20 பேர்
போட்டி ஆர்வத்தையும், ஆக்கத்தையும் தூண்டுவதால், தொடர்ந்து கலந்துகொள்வதில் சோர்வு அடையப்போவதில்லை. அடுத்தத் தலைப்பிற்கான ஆக்கத்தை தயார் செய்வதற்கு ஆவலுடன் தலைப்பிற்க்காக காத்திருக்கும் இவ்வேளையில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது,

பொன்னியின் செல்லம்மா ...! (சிறுகதை) - எனற என் ஆக்கத்தைப் படித்தும்,

வாக்களித்தும் மற்றும் படித்தும் பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

Saturday, August 26, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மகா கணபதி !

ஆண்டுக்கு ஆண்டு சூடாகி அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது ஐஸ் துருவ பிரதேசங்கள் மட்டுமல்ல, நம்ம சென்னை ஐஸ் ஹவுஸ் ஏரியாவும் தான். விநாயகர் சதுர்த்தீயைத் தொடர்ந்து நடக்கும் விநாய ஊர்வலங்கள் அந்தப் பகுதி மக்களின் இரத்த அழுத்தத்தை எகிற வைப்பதும், ஆட்சியாளர்கள் கையை பிசைந்து கொண்டு, அந்த பக்கமாக செல்லும் அப்பாவி பொதுமக்களுக்கு தடியடியால் கொழுக்கட்டைப் படைப்பதும் நடந்து வரும் அவலங்கள்.

விநாயகரை விக்ன விநாயகர் என்று சொல்வது உண்டு. அதாவது தடைகளை நீக்குபவர் என்று சொல்கிறார்கள். ஆனால் விநாயக் ஊர்வலங்களில் பாதுகாப்பு தடுப்பு தடைகள் இல்லையென்றால் ஊர்வலத்தால் வரிசையாக வரும் பல்வேறு வடிவ விநாயகர்களின் தீவிர பக்த கண்மணிகளால் அமைத்திக்கே அது தடையாவதும் உண்டு.

யானை முகத்தவரை சரியாகவே மத' வெறிக்கு பயன்படுத்துகிறார்கள் மதவெறியாளர்கள். ஆணடவன் பெயரில் நடக்கும் இத்தகைய ஊர்வலங்களினால் பக்தி வளர்ந்து விடுமா என்ன ? மாறாக மத துவேசங்கள் வளர்ந்து, மத நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்பட, யானை முக விநாயகர் வரும் முன்னே மணி அடித்துவிடும் ஊர்வலம் தான் விநாயக ஊர்வலம்.

அவரவர் நம்பிக்கை அவரவர்கே. உண்மையான விநாயக பக்திமான்கள் எலோருமே விநாயகரை கடலில் கிரேனில் தூக்கி தூக்கு தண்டனை நிறைவேற்றி கடலில் கரைப்பதை கண்டு மனம் வருந்துகிறார்கள, அபசகுனமாக கருதுகிறார்கள். அதை மெய்பிக்கும் விதமாக சுனாமி சீரழிவுகள் அதே கடற்கரையில் நட்ந்தேறுகிறது. மெய்ஞானக் காரணத்தைத் தவிர கடலில் கரைபடும் அந்த சிலைகளில் உள்ள வண்ணங்கள், மற்றும் வேதிப் பொருள்கள் சுற்றுச் சூழலை ஆச்சுறுத்துவதாக சுற்றுப் புர ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

இவற்றை எல்லாம் காதில் வாங்கமால் நடத்தியே தீருவேன் என்று கூறும் அமைப்புகள் தங்களின் நோக்கமாக ஊர்வலத்தை மட்டும் நடத்தினால் நல்லது என்று எலோரும் கருதுகிறார்கள். அதே போல் இத்தகைய ஊர்வலங்கள் தங்களை சீண்டுவதாக மாற்றுமத அன்பர்கள் நினைக்காமல் அவரவர் வேலையை அவரவர் பார்த்தால் பொதுமக்களுக்கு எந்த பங்கமும் வந்துவிடப் போவதில்லை.

கடைசியாக விநாயகர் பற்றி ஒரு தகவல். தென் இந்தியாவில் மட்டும் தான் விநாயகர் பிரம்மச்சாரி, வட இந்தியாவில் திருமணம் ஆனவர். இதற்கு மாறாக முருகன் வட இந்தியாவில் சரவண, சுப்ரமண்ய என்று அழைக்கப்பட்டு பிரம்மச்சாரியாக காட்டப்படுகிறார், முருகன் தென் இந்தியாவில் இரு மனைவிகளை உடையவர். பிற்காலச் சோழர்கள் காலத்தில் தான் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாடு பரவ ஆரம்பித்தது.


அன்பர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!!

Thursday, August 24, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தையல் சொல் கேளேல் !

பெண்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டால் பித்தம் பிடிக்குமா? பெண்களின் அறிவு ஆண்களின் அறிவைவிட எந்த விதத்தில் குறைந்தது?. பெரும்பாலானோருக்கு தெரிந்ததும், ஒப்புக்கொள்ளும் ஆண் பெண் வேறுபாடு என்பது உடல் சார்ந்த வேறுபாடே அன்றி. வேறு எந்த விதத்திலும் வேறுபாடு கிடையாது. உடல் பலம் சார்ந்த ஒரு சில வேலைகளை பெண்களால் செய்யமுடியாமல் இருக்கலாம். ஆனால் அதைச் செய்வது பற்றிய அறிவும், தெளிவும் பெண்களுக்கு நிச்சயம் இருக்கும்.

இதெல்லாம் அந்த மூதாட்டி ஒளவைக்குத் தெரியாதா ? ஒரு பெண்னாக இருந்து கொண்டு அதுவும் ஆத்திச் சூடி என்ற ஒரு அறிவுறை நூலை எழுதியவர் ஏன் 'தையல் சொல் கேளேல்' என்றார் ? அவர் தான் சொன்னதை அவருக்கே பொருத்திப் பார்க்காமல் சொன்னாரா ?

அதாவது பெண்களின் பருவத்தை 5 வயது முதல் 40 வயது வரை 7 பருவங்களாக அந்த காலத்தில் பிரித்து வைத்திருந்தனர்.

1. பேதை (வயது 5 - 7)
2. பெதும்பை (வயது 8 -11)
3. மங்கை (வயது 12-13)
4. மடந்தை (வயது 14-19)
5. அரிவை (வயது 20-25)
6. தெரிவை (வயது 26-31)
7. பேரிளம் (வயது 32-40)

இவற்றுள் 5 வயது முதல் 11 வயதுக்குள்ளான பருவத்தை (பேதை மற்றும் பெதும்பை) 'தையல்' என்று கூறுவர். தையல் பருவத்தில் பெண்கள் சிறுமி என்ற அளவில் கருதப்பட்டனர். அந்த வயதில் பொது அறிவு என்பது அவ்வளவாக வளர்ந்திருக்காது என்று கருதியே. அத்தகைய சிறிய பருவத்து பெண்கள் அதாவது சிறுமிகளால் சொல்லப்படுவதை ஆராயமல் கேட்க்கக் கூடாது என்பதற்காகவே ஒளவை பாட்டி அவ்வாறு சொன்னாள். 12 வயதுக்கு மேல் அறிவு ஓரளவுக்கு நன்கு வளர்ந்திருக்கும் என்பதால் பெண்களுக்கு மங்கை பருவத்தில் (வயது 12-13) திருமணம் செய்து கொடுக்கப்பட்டது.

அறிவில் சிறந்த மூதாட்டி உளறுவாரா என்ன ? அரைகுறையாக புரிந்து கொண்டு விளங்கிக் கொண்டு விளக்கம் சொல்பவர்களே... பெண்களை அந்த சொல் அதாவது 'தையல் சொல் கேளேல்' கேவலப் படுத்துவதாக உளறுகிறார்கள். ஒளவையின் சொல் அமுதமொழி என்பதற்கு இதுவே நற்சான்று !

தகவல் குறிப்புதவி நூல்: சித்தர் தத்துவம்
ஆசிரியர் : பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம்

Wednesday, August 23, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தமிழ்மண நிர்வாகத்தின் பார்வைக்கு !

முதலில் சில நடைமுறைகள் மூலம் தமிழ்மணம் திரட்டியில் பதிவர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளை அகற்றுவதற்காக ஏற்பாடு செய்திருக்கும் தமிழ்மணத்திற்கு பாராட்டுகள். இது ஒரு புதிய நிர்வாகத்தின் நல்லதொரு ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு தெரிந்த சில யோசனைகளை முன் வைக்கிறேன்.

1. தனிமனித தாக்குதல் என்றால் அது ஒவ்வாத ஆபாச வார்த்தைகள், குடும்பத்தை இழுத்து கேவலப்படுத்துவது என்ற அளவில் இருப்பதை தனிமனித தாக்குதலாக எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி திராவிட - ஆரிய அரசியல், கட்சி அரசியல் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இருபக்கமும் சளைத்தவர்கள் இல்லை.

2. மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாட்டைக் கவனிக்க - என்பது போல் 'தனிமனித தாக்குதல்களை தெரிவிக்க' என்று ஒரு பக்கத்தை ஆரம்பித்து புகார்களை வாங்கலாம். அதை எல்லோருடைய பார்வைக்கும் வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பதிவர்கள் அடிக்கடி சென்று தன் பதிவு பற்றிய புகார் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு தமிழ்மணம் எச்சரிக்கை செய்யும் முன், அவர்களாகவே தங்கள் குறிப்பிட்ட பதிவையோ, பதிவின் ஒரு பகுதியையோ, குறிப்பிட்ட பின்னூட்டத்தையோ நீக்கிக் கொள்ள ஏதுவாக அமையும். புகார் சரி என்று தெரியும் பட்சத்தில் தமிழ்மணம் குறிப்பிட்ட பதிவருக்கு எச்சரிக்கை அனுப்பலாம்.

3. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பதிவர் விடுப்பில் சென்றிருக்கலாம், ஒரு நாள் அவகாசமோ, குறிப்பிட்ட கால அவகாசமோ அந்த பதிவர்களுக்கு தெரியாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய சமயத்தில், அந்த குறிப்பிட்ட பதிவரின் பதிவு பின்னூட்ட இடுகையில் மறுபடி தெரியும் போது அவர் விடுமுறையில் இருந்து வந்துவிட்டார் என்று கருதி அவருக்கு மறு எச்சரிக்கை அனுப்பினால் அது நல்லது. இது மட்டுறுத்தல் ஏற்பாடு செய்த பதிவர்களுக்கு மட்டுமே. மட்டுறுத்தல் செய்யாத பதிவர்களை குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீக்கலாம்.

4. ஏற்கனவே எழுதப்பட்டு பின்னூட்ட இடுகையில் மட்டும் மீண்டும் வரும் அத்தகைய பதிவுகளுக்கும் இந்த விதி பொருந்த வேண்டும். அதாவது அங்கே புதிய ஆபாச பின்னூட்டங்கள் வரும்போது மட்டும் விதியை கவனத்தில் வைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே இருக்கும் பின்னூட்டங்கள் எல்லோருக்கும் தெரிந்தது என்பதால் விட்டுவிடலாம்.

'தனிமனித தாக்குதல்களை தெரிவிக்க' என்ற ஏற்பாட்டில் புகார் செய்யும் போது பதிவர்களும் பள்ளிக் கூட பையன் போன்று சிறு சிறு விசயங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பது நலம். அவ்வாறு செய்தால் அந்தப் பதிவர்களின் செயல் சிறுபிள்ளைத் தனமாக பார்க்கப்படும். பொறுப்பு உணர்ந்து நடக்கவேண்டும்

மேலும் சில நல்ல யோசனைகளை சக பதிவர்கள் தெரிவிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

Tuesday, August 22, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ரகசியம் ... பரமரகசியம்...!

எங்கே காதை கொடுங்கள்... உங்களுக்கு மட்டும் ரகசியமாக ஒன்று சொல்ல வேண்டும். தமிழ் பதிவர் உலகில் தற்போதைய ட்ரென்ட் கிசு கிசு. அடுத்தவர் பற்றிய விசயம். அடுத்தவர் பற்றிய செய்தி என்று இருக்க வேண்டும் - விசயம் என்று சொன்னதற்காக திரு குமரன் மற்றும் திரு ஜிராவும் சேர்ந்து 'நாங்கள் எழுதி எழுதி சொன்னாலும் (சொல் ஒரு சொல்) இந்த ஆளு படிக்க மாட்டேன்' என்கிறார் என்று கோவித்துக் 'கொல்லப்'போகிறார்கள்!.

அதாவது அடுத்தவர் பற்றிய விசயம் என்றால் அசடு வழிந்து படிப்பதில் யாருக்குத்தான் சுகம் இருக்காது. கிசு கிசுக்களை கேட்பதையே 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று பலரும் உணருகிறோம்.

இன்றைய தமிழ்பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்களில் கிசு கிசு இல்லையென்றால் பத்திரிக்கை வியாபாரம் பிசு பிசுத்துவிடும். அந்த அளவிற்கு பொதுமக்களிடம் மதிப்பு பெற்றவர்கள், அறிமுகம் ஆனாவர்களான நடிகர் நடிகைகள், மற்றும் அரசியல் வாதிகளின் அந்தரங்கங்களை தெரிந்து கொள்வதில் பொதுமக்களுக்கு ஆர்வம் இருப்பதை பத்திரிக்கை உலகு நன்கு புரிந்து வைத்திருக்கிறது.

அதாவது ரகசியங்கள் பிசு பிசுத்தால் அது கிசு கிசு எனப்படுகிறது. தாங்கள் புகழடைய வேண்டும் என்று சிலர் தாங்களாகவே தங்களைப் பற்றிய கிசு கிசுக்களை வெளியிடுவார்களாம். அந்த ரகசியமமும் தெரியவரும் போது அது கிசு கிசு பற்றிய ஒரு மாபெரும் கிசு கிசுவாக அது மீண்டும் ரசித்துக் கேட்கப்படும் !

இதுவல்ல செய்தி. ரகசியங்கள் பற்றியது. ரகசியம் என்பது ஒரு தனிப்பட்ட ஒருவரின் சொந்த அனுபவமாகவோ, அல்லது ஒரு குழுக்கள், கட்சிகள், சங்கங்கள் ஆகியவற்றின் கொள்கையாகக் கூட இருக்கும். தம்பதிகளின், நண்பர்களின் அந்தரங்கம் பற்றியதாகக் கூட ரகசியம் இருக்கும். தனிநபர் ரகசியமாக இருந்தால் அவர் பிரச்சனையில் இருந்து விடுபட அல்லது மனபாரம் குறைய அந்த ரகசியத்தை தனக்கு நெருக்கமானவரிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஒரு வேளை அந்த ரகசியம் பற்றிய செய்தி நினைக்கும் போதெல்லாம் அவருக்கு மகிழ்வை தருவதாக இருந்தால் அதையும் நெருக்கமானவர்களிடம் தெரிவிப்பர். நட்பு, உறவு உன்னதங்களை உடையாமல் வைத்திருப்பதில் ரகசியத்தித்தை பாதுகாக்கும் நம்பகத்தன்மை பெரும் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு ரகசியமும் இருவருக்கு மட்டுமே தெரியும் வரைதான் அது ரகசியம் எனப்படும் என்று எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோம்.

தனக்கு தெரியவந்த அல்லது தன் ரகசியத்தை தான் மட்டுமே வைத்திருக்கும் வரை ரகசியம் ரகசியமாக இருக்கும். ஒருவர் ரகசியம் செல்லும் போது ரகசியத்தை கேட்பவர்தான் அந்த ரகசியத்தை கட்டிக் காட்கவேண்டும். சொல்லுபவர் கேட்பவர் மீது நல்ல நம்புக்கை கொண்டிருந்தால் போதும், ஆனால் கேட்பவர் கேட்டுவிட்டு அந்த ரகசியத்தின் மீது சத்தியம் என்ற ஒரு போர்வையை போட்டு மறைத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் ரகசியத்தைசொன்னவர் வெளியில் சொல்லும் முன் வெளியில் சொல்லிவிடக் கூடாது. ஒரு ரகசியம் மற்ற ஒருவரிடம் செல்லும் போது ரகசியம் என்ற ஒன்றுடன் சத்தியமும் நம்பகத் தனமையும் சேர்ந்தே செல்கிறது.

அதே போல் ஒருவர் ஒரு ரகசியத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தால் தன் மனபாரத்தை இறக்கி வைப்பதற்கோ அல்லது மகிழ்ச்சியை பெருக்குவதற்கோ வாய்ப்பு இருந்தால் மட்டுமே சொல்லலாம், அதுவும் கேட்பவர் தன் முழு நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்றால் மட்டுமே சொல்லவேண்டும். அப்படி இல்லாது போனால் ரகசியம் கசிய ஆரம்பித்துவிடும். மற்றபடி தனிப்பட்ட ஒருவரின் ரகசியத்தினால் யாருக்கும் தற்போதோ, எதிர்காலத்திலோ எந்த பாதிப்பும் வரப்போவதில்லை என்று அவரே உணர்ந்திருந்தால் அதை வெளியில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.

பதிவின் நீளம் கருதி செய்திகளை சுருக்கிவிட்டேன்.

கட்டுரை ஏமாற்றம் அளித்தால், கிசு கிசு செய்திகளுக்கு இங்கே செல்லுங்கள்
சாம்பு, சங்கம்
தமிழ்மணம் கருவிபட்டை

விரைவில் வருகிறது ...பாலியல் அறிவுத் தொடர் !

அறிந்தும் அறியாமலும் விரும்பிச் செய்யும் தவறுகளைப் பற்றி அதாவது பாலியல் பற்றிய ஒரு தெளிவை எல்லோரும் அறிய செய்வதற்காக ... தான் எப்போதும் பேசாத ஒரு பொருள் பற்றிப் பேச வருகிறார் ஒருவர்.

ஆம்... ! பாலியல் அறிவு பற்றிய ஒரு தொடர் கட்டுரை எழுதப் போவதாக நம் அருமை நண்பர் டாக்டர்
எஸ்கே ஐயா அவர்கள் என்னிடம் தெறிவித்தார்.

'நல்ல விசயம்' என்று கூறிவிட்டு,


நான் அவரிடம் கேட்டேன்,

'கட்டுரை ஆக்கம்...டாக்டர் நாராயண ரெட்டி மற்றும் டாக்டர் மாத்துரு பூதம் ரேஞ்சிக்கு இருக்குமா?' என்று

சிரித்துக் கொண்டே ...!

'ஆம் அதே போன்றுதான் கொஞ்சம் கிளு கிளு, சுட சுட சமாச்சாரங்களுடன் இருக்கும், இன்றோ நாளையோ எழுதுவேன்' என்றார்.

அருமை பதிவர் சகோதர சகோதரிகளே ... ! படித்து தெளிந்து கொள்ள தயாராகுங்கள் !


உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நாகரீகமாக அவரிடம் அந்த தொடரின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.


அவர் எழுதும் இந்த தொடரிலும் அவருக்கு வழக்கம் போல் முருகன் அருள் முன்நிற்கும் !
வாழ்த்துகிறேன் !!

தொடர் வந்துவிட்டது :

பாலியல் கல்வி -- பெற்றோருக்கு! [1]
தமிழ்மணம் கருவிபட்டை

மரம் பேசிய மெளன மொழி-1 [கவிதை]

Monday, August 21, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பெருச்சாளிகள் ...! [கவிதை]


இரவின் நிசப்பத்தத்தில் இரையெடுக்க
வருவது ஆந்தைகள் மட்டுமல்ல, இருட்டில்
பூனைகள் கண்ணிலும் மண்ணைத் தூவும்
பெருச்சாளிகளும் தான் !

நாய்களைப் போல் கூட்டமாக இருந்தாலும்
பெருச்சாளிகள் அடித்துக் கொள்வதில்லை
கொள்ளை அடிப்பதில்,அதுவும் எவருக்கும்
தெரியாமல் கொள்ளையடிப்பதில்
பெருச்சாளிகளுக்கு நிகர் பெருச்சாளிகளே !

பெருச்சாளிகளைப் பார்த்து நான்
ஆச்சரியப்படுவது ஒன்றுதான் !
எந்த நல்ல குணமே இல்லாத இந்த
பெருச்சாளிகள் எப்படி
பிள்ளையாருக்கு வாகனம் ஆனாது ?

பிள்ளையாருக்கு அருகிலோ, எலிக் கோவிலிலோ
இருந்தாலும் புனிதம் அறியாமல், பெரும்பாலும்
இந்த பெருச்சாளிகள் எப்போதும்
சாக்கடை பொந்தில் மறைவாக
இருந்து கொண்டு ஏமாற்றி உண்பதையும்,
தன் இனத்தை பெருக்குவதை மட்டுமே
தெரிந்து வைத்துக் கொண்டுள்ளன !

Sunday, August 20, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பிடா ப்ளாக்கர் (beta.blogger) போட்ட தூண்டில் !

நெருப்பு சுடும் என்றால் எத்தனை பேர் கைவைத்துப் பார்ப்பார்கள் ? அப்படி ஒரு நெருப்பை தொட்டுவிட்டேன். http://blogger.com நுழைந்தவுடன் ஒரு அதாவது http://beta.blogger.com க்கு முயற்சிக்கும் படி தூண்டில் இருந்தது. http://blogger.com விட நிறைய வசதிகள் இருப்பதாகவும் சொல்லிவிட்டிருந்தது. ஆசை யாரை விட்டது? சரி முயற்சிக்கலாமே என்று எனது காலம் http://blogger.com லிருந்து http://beta.blogger.com மாற்றினேன்.


போச்சு ... ! தமிழ் மணம் இணைப்பு துண்டிப்பாக ஆகிவிட்டது. வலைப்பதிவு தமிழ்மணம் திரட்டியில் ஏற்ற முடியவில்லை. தமிழ்மணம் நிரல் பட்டையும் பதிவில் தெரியவில்லை. பழைய பதிவுகளில் ஏற்கனவே பின்னூட்டம் இட்டவர் தமிழில் பெயர் வைத்திருந்தால் அது பூச்சி பூச்சியாக தெரிந்தது.

தேன் கூட்டில் பதிவின் புதிய இடுகை ஏற்கப்பட்டது. தமிழ் மணம் http://beta.blogger.com ஐ திரட்டுவதில் ஏதாவது குறை இருக்கும் என்று நினைக்கிறேன்.

நல்ல வேலை மற்றொரு ப்ளாக்கர் காலங்கள் அக்வண்ட் இருந்ததால் பெரிய மூச்சு வந்தது.

http://beta.blogger.com/ சாதகங்களை (advantages) அடுத்து எழுதுகிறேன்.

தமிழ் மணத்தில் பதிந்துள்ளவர்கள் அவசரப் பட்டு http://beta.blogger.com உடனடியாக மாறவேண்டாம்.

Thursday, August 17, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

லிவிங் ஸ்மைல்ஸ் !

லிவிங் ஸ்மைல் பற்றி விவாதங்கள் வருவது கொஞ்சம் கசப்பானதாக இருந்தாலும், அவர் விரும்புவது போல் ... எல்லோரைப் போலவே அவரை எல்லோரும் சமமாக நினைப்பதால் (நினைப்பது அல்ல சமம் தான் !) அவர் விவாதத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல எனவே ஆரோக்கியமான விவாதமாக அவர் எடுத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவருக்கு அந்த பக்குவம் இருக்கிறது. ஸ்மைல் ப்ளீஸ் :))எனக்கு நன்கு அறிமுகமான லிவிங் ஸ்மைல்ஸ் - அதாவது பூக்களுடன் ஆன ஒரு பேட்டி இங்கே !

லிவிங் ஸ்மைல்ஸ் !!!

சிரிக்கும் பூவே ! உன் சிறப்பில் சிறந்தது எது,
மனமயக்கும் மணமா, நெஞ்சள்ளும் வண்ணமா?
இரண்டும் சேர்ந்திருப்பது தான் தன் சிறப்பென்றது மலர் !

ஆங்கில முத்தம் தந்து உன் இனிப்பு எச்சிலை
அள்ளிச் செல்லும் வண்ணத்து பூச்சி உனக்கென்ன உறவு?
தேனுக்கு மகரந்தம் விற்கும் பண்ட மாற்று வணிக உறவு !

வண்ணப் பூவே ! நீ விரும்பிச் சேருமிடம் அர்சனையா ? பஞ்சணையா?
அன்பை பறிமாரும் கைகள் தன் அன்பை சொல்லும்,
அன்பு பரிசு பூச்சென்டாய் செல்வதே என் விருப்பம் !

மனம் கொள்ளை கொள்ளும் வண்ணத்தில், உன்
நெஞ்சை அள்ளும் வண்ணமெதுவோ? அனைத்து வண்ணமும்
தன்னுள் பொதித்த அமைதி வெள்ளை வண்ணம் !


கரம் கொய்து கிள்ளி எடுக்கும் போது, உன்
கழுத்தை திருகியதாக கதறி அழுவாயா?
பிறவிப் பயனடைவதில், வலியென்பதும் வாழ்த்தும் வரம் தான்!

தெவிட்டாத தேன் தரும் பூவே, நீ கேட்கும்
தெவிட்டாத தேனிசை எது? தென்றல் வந்து தீண்டும் நேரம்,
தேனெடுக்க வண்டுகள் சுற்றி சுற்றி பாடும் அந்த இசை !

மணக்கும் பூவே உன்னை மயக்கும்
மணம் எதுவோ ? மகிழ்சியாய் குளிர்ச்சி தர, மாலை நேர
மல்லிகை வாசமே என்னை சிலிர்க்க வைக்கும் மணம் !

வாசப் பூவே நீ பேசும் மொழி எதுவோ?
நேசக் கரங்கள் மென்மையாய் தொட்டு பேச, நான்
வாசம் தந்து பேசும் மௌன மொழி !

கொடியில் ஆடும் மலரே ! நீ மகிழ்ந்து ஆடும்,
ஆட்டம் எப்போது? மங்கையர் தம் மனமகிழ, கூந்தலெனும்
ஊஞ்சலில் கொண்டாடமாய் ஆடுவேன் அப்போது !

சிலிர்க்கும் பூவே நீ சிரித்து மகிழ்வது எப்போது ?
மொட்டுக்குள் பூத்த புன்னகையை மூடிவைக்க முடியாமல்
சட்டென்று இதழ்விறித்து சிந்தாமல் சிரித்து வைப்பேனே அப்போது !தமிழ்மணம் கருவிபட்டை

அறிவுரையும் அக்கரையும் !

இரண்டும் ஒன்றுபோல் பொருள் தந்தாலும். புரிந்துகொள்ளுதல் என்ற நிலையில் பொருள் மாறுபடுகிறது. அறிவுரை சொல்வது அல்வா சாப்பிடுவது போல் எல்லோருக்கும் எளிது. தம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கே அறிவுரையை பெரும்பாலோர் கையில் எடுக்கின்றனர். இரு காதுடன் யாராவது வாய் பேசாதவர்கள் எக்கு தப்பாக மாட்டிவிட்டால் போதும், 'இந்த பிடி அட்வைஸ்' என்று நம் முழுத்திறமையையும் கேட்பவர் காது இரத்தம் வழியும் வரை நாம் விடுவதில்லை.
சரி அறிவுரை எங்கு செல்லுபடியாகிறது. நம்மை யாராவது மதித்தால், அப்படி நம்மை மதிப்பவர் விரும்பிக் கேட்டுக் கொண்டால் மட்டுமே அறிவுரை அறிவுரையாக கேட்கப்படும். அப்படி இல்லாமல் வழியே சென்று அறிவுரை சொல்கிற பேர்வழியாக நம்மை நினைத்துக் கொண்டு 'இதை நீ செய்வதைக் காட்டிலும் உருப்படியாக வேறு ஏதாவது செய்' என்று சொன்னால் அது அறிவுரையாகப் பார்க்கப்படுமா ? இல்லவே இல்லை அது அகம்பாவ உரை என்று புறந்தள்ளிவிடுவர். நாம் பிறருக்கு அறிவுரை சொல்லும் முன் நாம்மை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மற்றவர்கள் அறிவுறுத்தலை நாம் ஏற்றுக் கொள்கிறோமா, அறிவுரை சொல்வதற்கான சூழல் இருக்கிறதா, எல்லாவற்றையும் விட நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று. அப்படி சீர்தூக்கிப் பார்க்காதவர் ஏதோ பொது நல விரும்பி போல் அவதாரம் எடுக்க முயன்றால் அவருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் மட்டுமே மிஞ்சும். நாம் அறிவுரை சொல்லப் போக நமக்கு போகிற வருகிறவர் எல்லாம் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

அறிவுரை சொல்பவர் ஆசானாக இருக்கவேண்டும், இல்லை என்றால் அனுபவப் பாடம் படித்தவரோ, உணர்ந்தவராக இருக்கவேண்டும், அத்தகையவரை யாராவது இனம் கண்டு 'இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு ?' என்று கேட்டால் மட்டுமே அறிவுரை சொல்லலாம். இல்லை என்றால் ஆபத்தில் இவர் சிக்கப் போகிறார், இதனால் இவருக்கு பெரும் துன்பமோ கேடோ நிகழப் போகிறது என்று முன் கூட்டியோ நாம் உணர்ந்திருந்தால் அந்த நபருக்கு அறிவுரை சொல்லலாம். அல்லது இதைச் செய்வதால் நீங்கள் போற்றப்படுவீர்கள் என்று அவரே உணராததை ஒரு வேளை நாம் நன்கு உணர்ந்திருந்தால் அறிவுறுத்தலாம். செல்லுபடியாகாது என்று தெரிந்தே அறிவுரை சொல்லப் போனால் பெரும்பாலும் அவமானமே மிஞ்சும்.

அக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு, இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நமக்கு வேண்டியவர்கள் நமக்கு அறிவுரை சொன்னால், உடனே என்ன சொல்லுகிறார் எனக் கவனியாமல், உடனே சொல்பவர் தகுதியை எடை போடக் கூடாது. மாறாக எதற்காக இவர் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் போது நம்மால் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது நம் மீது இவர் வைத்துள்ள அன்பின் காரணத்தால் நமக்கு அறிவுரை சொல்கிறார் அது அறிவுரையின் பெயரில் செலுத்தும் அக்கரை. அங்கே அறிவுரை அக்கரையாக பார்க்கப் படாவிட்டால் ஈகோ (ஆணவம்,அகம்பாவம்) தலை தூக்க ஆரம்பித்து யார் அறிவாளி என்ற எதிர்க்கேள்வி ஏற்பட்டு உறவுகள் சீர்கெட ஆரம்பிக்கும்.

ஆகவே நண்பர்களோ, சொந்தங்களோ எதையாவது அறிவுறுத்தினால் நாம் அங்கு பார்க்க வேண்டியது அன்பின் வெளிப்பாட்டில் மறைமுகமாக சொல்லப்படுவது அறிவுரை மட்டின்றி அதையும் தாண்டிய நம் மீதான அக்கரை!

17/ஆகஸ்ட்/2006

பின்குறிப்பு :
வழக்கமான பதிவை beta.blogger க்கு மாற்றலாம் என்ற முயற்சியில் கருவிபட்டை சொதப்பல் ஆகி தமிழ்மண இடுகையில் சேர்க்க முடியாமல் போய்விட்டது. இந்த பதிவு தேன் கூட்டில் வந்தது ஆனால் தமிழ்மணத்தில் வரவில்லை. அந்த காலம் சரியாகும்ரை இந்த காலங்களில் காலம் தள்ளுவேன்

Wednesday, August 16, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பூமியே எனது சொர்க்கம் !நான் வாழும் என் உலகில்
எனக்குமுன் பிறந்து வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள் அனைவரும்
என் அன்பை நாடும்,
என் அண்ணன்கள், அக்காக்கள் !
எனக்குப்பின் பிறந்து தவழ்ந்து
கொண்டிருப்பவர்கள் அனைவரும்
நான் அன்பு போற்றும்,
என் தம்பிகள், தங்கைகள் !
இவையே நான் பார்க்கும் உலகம் !

நான் வாழும் காலத்தில் வாழும் இவர்களை
கொஞ்சி மகிழாமல்,
வஞ்சித்தால் எனக்கு எங்கே இருக்கிறது
சொர்க்கம் ?

இறைவன் கண்ணுக்குத் தெரியவில்லை !
என்னையும் பெற்ற, இறைவன் பெற்ற

பிள்ளைகளான என் உடன்பிறப்புகள்
கண்ணுக்குத் தெரிகிறார்கள் !

இவர்களை நிரந்தரமாக
நான் பிரியும்பொது,
ஒருவேளை நான் தேடலாம்
இன்னொரு சொர்க்கம் !

அதுவரை,
நான் வாழும் பூமியே சொர்க்கம் !
பார்க்கும் மனிதர்களே
என் அன்புச் சொந்தங்கள் !

Monday, August 14, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

இந்திய விடுதலைத் திருநாள் !பாரத தேசம் நீ, பாரதியின் நேசம் நீ !
பாரினில் இதயமென நட்டனடுவில் வீற்றிருப்பளும் நீ !

புத்தர் தோன்றிய புண்ணிய பூமி நீ ! கலை
வித்தகர்கள் விளைவித்த விளைநிலம் நீ !

மகாத்மா காந்தியின் தேசம் நீ ! தத்தெடுத்த,
மாதரசி அன்னை தெரேசாவின் தவப்புதல்வியும் நீ !

மாதர் வழிநடத்தும் பெருமைமிகு தேசம் நீ, இன்று
சேது மாகடல் கரை திறந்தவளும் நீ !

உழவிற் கால்பதித்த நீ, பாரதி கன(¡)வென,
நிலவிற் கால்பதிக்க போகிறவளும் நீ !

அன்று அந்நியர் ட்சியில் அடங்கியிருந்த நீ,
இன்று அந்நியரை அடக்க அணுவாயுதம் ஏந்துபளும் நீ !

செந்தமிழை செம்மொழி க்கினாய் நீ,
வந்தொரெல்லாம் வாழ்த்தி, வாழ்ந்திட வழிவகுத்தவளும் நீ !

மண்கலம், மரக்கலம் படைத்த நீ, இன்று விண்முட்டும்,
விண்கலம் படைப்பவளும் நீ !

அந்நிய படையெடுப்பில் அலங்கோலமானாலும் நீ, என்றும்
இந்திய பண்பாடு மாறாதவள் நீ !

ஏற்றுமதி செய்யவந்து ஏமாற்றிய வெள்ளையரை, உன்
ஏற்ற மதியால், மென்பொருள் இறக்குமதி செய்விப்பளும் நீ !

பன்மொழி வித்தகி நீ, மதநல் இணக்கத்தின்,
உண்மையை உலகிற்கு உரைப்பவளும் நீ !

சதிப்பேய்களை உன்னிடமிருந்து விரட்டிய நாம், இன்னாளில்
சாதிப்பேய்களையும் வீழ்த்துவோம் என உறுதியேற்போம் !

ஜெய்ஹிந்த் ! ஜெய்ஹிந்த் ! ஜெய்ஹிந்த் !

Friday, August 11, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மூவர்ணக் கொடி ?பட்டொளி வீசிப் பறந்த
மூவர்ணக் கொடியில்
பாட்டாளி வர்கத்தின்
உழைப்பின் சின்னமாக
அசோகச் சக்கரம் தன்
நீல வர்ணத்துடன்
மூன்று வர்ணத்திற்கும் இடையில்
சுழன்றபடி தேசியக் கொடியில் !

தேசியக் கொடியின் மூலம்
தேசத்தின் தேசிய(?)
பாகுபாட்டு உணர்வைப்
பிரதி
'பழித்துத் சுழன்றது
நீலநிறத்தில் அசோகச் சக்கரம் !
ஆம் ! ... நம் தேசியக் கொடியில்
இருப்பது நான்கு வருணங்கள் !
தமிழ்மணம் கருவிபட்டை

சுதந்திர ... நாடே !


சுதந்திர காற்றில் ஆக்சிஜன்
பற்றாக் குறை ... !
சுவாசிக்கும் போது மூச்சு
தடுமாறுகிறது .... !

இன்னும் பேருந்து செல்லாத
சிற்றூர்கள் !
மின்சாரம் காணாத
கிராமங்கள் !
பள்ளிக் கூடம்
காணாத பேருராட்சி !
படித்து நாமும் முன்னேற
வேண்டும் என்ற
விழிப்புணர்வு அற்று,
வசதியில்லாது,
கூன்முதுகு காட்டி வயலில்
ஒரு வேளை சோற்றுக்காக
நாற்று நடும் பெண்டிர் ...!

ஏழைகள் ஏழையாக இருக்க,

அவர்கள் தம்
அல்லல்ப்படும் அன்றாட
வாழ்க்கையில்,
சுருக்குப்பை காசையும்
சுரண்டிவிட்டு
சுதந்திரம் கொண்டாடி
மகிழ்வோம் என்று,
வருகிறது சுதந்திர தினத்தன்று
புத்தம் புதிதாக திரைப்படங்கள் !

Friday, August 04, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஒளி !

ஒளியின் சிறப்பு என்ன ?
பிம்பங்களின் மேல் பட்டு
அவற்றின் வடிவத்தை
பிரதிபளிப்பது !

ஒளியின் சிறப்பு
அது மட்டுமல்ல
சுட்டு உணர்த்துவதும் தன் !

அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, அகர்பத்தி
இவற்றில் தோன்றும்
ஒளிகளைப் பார்த்திருக்கிறேன் !

இவற்றில் எந்த ஒளி சிறந்தது ?
என்ற கேள்வியில்
என் வீட்டில் இருக்கும்
அகல் விளக்கின் ஒளியே சிறந்தது
என்று மட்டுமே
நினைத்துக் கொண்டிருந்தேன் !

அன்று
ஒரு நாள் எண்ணைத் தீர்ந்து
என் வீடு இருண்ட போது,
பக்கத்துவீட்டு மெழுகுவர்த்தியின் ஒளியும்,
அடுத்தவீட்டு அகர்பத்தி மணமும்,
என் முகத்தை தொடும் வரை !

அந்த வெளிச்சத்தில், நான்
வெளிச்சமும் மணமும் பெற்றபோது,
என் வீட்டில் இருந்து கொண்டே
நான் தெரிந்து கொண்டேன்,
எல்லா ஒளிகளிலும்,
ஒளியின்மை என்று
ஒன்று இல்லவே இல்லை !
ஒளிமட்டுமே இருக்கிறது !

Thursday, August 03, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உப்பும் நட்பும் !

நட்பு வாரம் என்று நண்பர்கள் பலரும் அன்பை வெளிப்படுத்தவது நெகிழ்ச்சியாக இருக்கிறது. நட்பில் நினைந்தவன், அதில் கரைந்தவன், அதன் சுவைத் தெரிந்தவன் என்கிற நினைப்பு எல்லோரையும் போல் எனக்கும் இருக்கிறது. நட்புடன் எதையாவது தொடர்புபடுத்தி ஒப்பிட வேண்டுமென்றால் எனக்கு தெரிந்த சிறந்த பொருள் அது உப்பு ஒன்று தான்.

உப்பும் நட்பும் !
கடல்நீரில், அழுக்குகள் ஒதுங்க மிஞ்சுவது உப்பு - தத்தளிக்கும்
வாழ்க்கைக் கடலில் உறவினர்கள் பதுங்க எஞ்சுவது நட்பு !

உப்பு குறைந்தால் உணவு சுவைக்காது - அன்பற்ற வெறும்
நட்பும் நம்வாழ்வில் இன்சுவை அளித்திடாது !

உப்பு அதிகமாக உணவு கரித்து விடும் - அதுபோன்ற
அளவற்ற (கூடா)நட்பு அதிகரிக்க வாழ்வு கெட்டுவிடும் !

உப்பு அளவுடன் இருக்க உணவுசுவை கூடும் - அருமை
நட்பு அளவுடன் சேர்ந்தவர் வாழ்வு அளவற்ற சுவைபெறும் !

உப்பில் தூய வெள்ளை இருந்தால் நல்லுப்பு ! - நம்
நட்பில் தூய வெள்ளை உள்ளம் இருந்தால் அது நல்நட்பு !

உப்பு தண்ணீரில் தான் கரைந்தாலும் சுவைதரும் - அன்பு
நட்புத் தோழரை நாம் தூக்கி எறிந்தாலும், அவர்தம் தோள்தருவர் !

உப்பு துக்கஆனந்த கண்ணீரில் என்றும் நம்மோடு - ஆழ
நட்பு துன்பஇன்ப துணையென என்றும் நம்மோடு !

உப்பில்லா பண்டம் குப்பையிலே - அதுபோல்
நட்பில்லா மனிதன் தனிமையிலே !

உப்பிட்டவரை உள்ளவரை நினைப்போம் ! - நல்
நட்பளித்தவரை உள்ளத்தால் அணைப்போம் !

இந்த கவிதையை அன்பு வலை நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் உறவு-உணர்வுகளை போற்றுவோர்களுக்கும், தமிழ்மணம், தேன்கூடு குழுமத்தினருக்கும் பரிசளித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

அளவான உப்புடன்,
கோவி.கண்ணன்


Tuesday, August 01, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தூங்கச் சொல்லும் கவிதைகள் !

சோம்பேறிப் பையனின் கவிதைகளைப் பாராட்டி எழுதிய கவிதை இது... உண்மையில் அவரது கவிதைகள் சுறுசுறுப்பானவை ... நன்றாக இருந்தது !

தூங்கச் சொல்லும் கவிதைகள் !


தூக்கம் தொலைத்த இரவுகளில்,
தோன்றிய எண்ணங்களில் எல்லாம்
பல்வேறு கவிதைகளை
எழுதி குவித்துவிட்டு
கூப்பிட்டேன் பாராட்டுபவர்களை !
பாதி படித்து முடிக்கும் முன்பே,

கரு(த்)தாக்கத்தில் (?),
தூக்கம் வருகிறதென்று,
கொட்டாவியுடன் எழுந்து
சென்று விட்டார்கள் !