Tuesday, November 28, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 2) !

நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 1)

மணி மாலை 7.30க்கு மேல் ஆகி இருந்தது. தூரத்திலிருந்தே கைகளை அசைத்தவர் நொடிப்பொழுதில் பாதுகாப்பு இடம் கடந்து அருகில் வந்துவிட்டார். நெருக்கமான உறவினர் நம்மைப் பார்க்க வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது உணர்வுகள். "ஐயா ! வாங்க வாங்க " என்பதை தவிர வேறு எதுவும் பேசும் முன்னும் அருகில் வந்து இரண்டுகைகளாலும் வளைத்து கட்டி அணைத்துக் கொண்டார். இருவருக்கும் இடையில் இருந்தது நட்பா, உறவா எதுவும் தெரியவில்லை. உணர்வுபூர்வமான ஈர்ப்பு, ஒருவரை ஒருவர் நேரிடையாக பார்பதில் மற்றற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள் ஆகியவை அணைத்து மகிழ்ந்ததில் உணர முடிந்தது. முன்பே தொலைபேசி வழி 'அப்பா' என்று இவரை என் மனைவி அழைத்து வந்திருந்தாலும், இவர் தோள் தொட, ஆதரவாக இவர் கை தொட்டதும் சென்ற ஆண்டில் திடீரென தன் தந்தையை இழந்திருந்த என் மனைவிக்கு அப்பாவையே உணர்வதுபோல், பார்பதுபோல் என் மனைவியிடம் நெகிழ்ச்சி இருந்தது. பயணவிவரம் கேட்டபடி எல்லோரும் வாடகைக் காரில் வீடுவந்து சேர்ந்தோம்.

எங்கள் வழக்கப்படி வீட்டுக்கு வரும் பெரியவர்களிடம் ஆசிவாங்குவதென்பது வழக்கம். அதன்படி உள்ளே வந்ததும் பூஜை அறைக்கு சென்று வணங்கி விட்டு வந்தவரிடம் தம்பதிகளாக காலில் விழுந்து ஆசி பெற்றோம். ஒரு சில நிமிடங்களில் எனது 6 வயது மகளுக்கு இவர் தாத்தாவாகிவிட இருவரும் வெகு நாட்கள் பழகியது போல் விளையாட ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே தொலைபேசி வழி தொடர்பு கொண்ட நண்பர் குழலி அவர்கள், மீண்டும் தொடர்பு கொண்டு உடனடியாக எஸ்கேவை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வருவதாக தொலைபேசி வழி தெரிவித்தார். அதன்படி அவருக்கு இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் குறித்து சொல்லிவிட்டு, நேராக அழைத்துவர குறிப்பிட்ட இடத்திற்கு சென்றோம். நண்பர் குழலி ஆப்பிள் பழங்களுடன் வந்தார். வீட்டிற்கு அழைத்து வந்து பேசிக் கொண்டிருந்தோம். எஸ்கேவும், குழலியும் விஜயகாந்த் மற்றும் பாமக அரசியல் பற்றி பேசினார்கள். அரசியலில் தன் நிலைப்பாடு என்ன என்பதை குழலி பேசினார். பின்பு தன் குடும்பம், ஊர் இவற்றைப் பற்றி பேசினார். ஒரு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு இரவு உணவை சாப்பிட ஆரம்பித்தோம். சோயா பைட்டில் செய்யப்பட்ட குருமா இருந்தது. எஸ்கே சோயா பைட்டை அழுத்தி அழுத்திப் பார்த்தார். ஒருவேளை எலும்பு எதாவது சிக்குமா என்று பார்த்திருப்பார் போலும். நாங்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்பது அவருக்கு தெரியும், இருந்தும் ஒரு எச்சரிக்கையாக சோயா பைட்டை அழுத்திப் பார்த்து திருப்தி பட்டுக் கொண்டார். அது குறித்து நான் கிண்டல் அடிக்க உணவு வேலை களைகட்டியது. இரவு உணவை முடித்துபின்பு விடைபெற்ற குழலி மறுநாள் தொலைபேசுவதாக சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு எஸ்கே தன்னுடைய மனைவிக்கு தொலைபேசியில் தான் சிங்கை வந்து சேர்ந்ததை தெரிவித்தார். இரவு 12 மணிக்கு மேலாக நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்துவிட்டு பின் இரவில் தூங்கச் சென்றோம்.

மறுநாள் காலை சிற்றுண்டியாக இட்டலியும், கிச்சடியும் முடித்துவிட்டு, வெளியில் சென்று சிங்கப்பூர் முக்கிய இடங்களைப் பார்க்கச் சென்றோம். காலை 11 மணிக்கு நான் முதலில் அழைத்துச் சென்றது லிட்டில் இண்டியா எனப்படும் நம்மவர்கள் இந்தியர் நிறைந்த இடம். அங்கு செல்லவதற்கே மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. அங்கு கோமள விலாஸ் என்னும் சைவ உணவகத்துக்குச் சென்று மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தோம். அப்பொழுது பதிவர் வடூவூர் குமார் அழைத்து மாலை 7 மணிக்கு அதே இடத்தில் சந்திப்பதாக சொன்னார். அதன்பிறகு வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே 3D சாமி படங்கள் (ப்ரேம்) Tushiv என்ற கடைக்குச் சென்றோம். அங்கு நவீன தொழில் நுட்பத்தில் செய்யப்பட்ட பல்வேறு கடவுள் உருவங்கள் இருந்தன. அவருக்கு பரிசு பொருளாக வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று தான் அங்கு அழைத்துச் சென்றேன். அவருக்கு அங்கு எல்லா உருவங்கள் பிடித்திருந்தாலும் எங்கும் கிடைக்கதற்கரிய ஒன்றாக அவருக்கு தோன்றிய, அற்புதமாக செய்யப்பட்ட சத்தியசாய் 3D ப்ரேம் ஒன்றை அவரே தேர்வு செய்து, அவரே கிரிடிட் கார்டு கொடுத்து வாங்கினார். அதில் உள்ள மின்விளக்கு அமெரிக்க வோல்டேஜ் அளவானா 110க்கு மாற்றவேண்டும் அதனால் மாலையிலோ அல்லது மறுநாளோ திருவுருவ ப்ரேமை தருவதாக கடைக்காரர் சொல்ல ரசீதைப் பெற்றுக் கொண்டு மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வந்தோம்.

அதன்பிறகு விரைவு இரயில் எனப்படும் MRT யில் ஏறி லிட்டில் இண்டியாவில் இருந்து ஹார்பர் ப்ரெண்ட் எனப்படும் செந்தோசா தீவு முனையத்திற்கு வந்தோம். வெளியில் வந்து புதிதாக திறக்கப்பட்ட VIVO CITY என்ற பெரிய கடைவளாகத்தைப் பார்த்துவிட்டு அதற்கு முகப்பில் இருக்கும் நீர் அலங்காரத்திற்கு முன் புகைப்படம் எடுத்துவிட்டு நேராக செந்தோச தீவிற்கு செல்லும் கேபிள் கார் கட்டிடத்திற்கு வந்தோம். அங்கு விரைவு சுற்றுலா டிக்கெட் இரண்டு வாங்கிக் கொண்டு கேபிள் காரில் ஏறி உட்கார்ந்தோம். அது மிக நல்ல அனுபவம். அன்புடையவர்களுடன் உயரத்தில் அமர்ந்து பயணம் செய்வது என்பது மறக்க முடியாத நிகழ்ச்சி என்று சொல்லலாம். பலமுறை அதுபோன்ற அனுபவம் கிட்டியிருக்கிறது. 6 மாதத்துக்கு முன்பு வரை ஒருவரை ஒருவர் அறிந்ததில்லை, அதன்பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு நெருக்கமாக ஒருவருடன் இனிய பயணம் என்பது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.

செந்தோசா தீவை சுற்றிப் பார்த்துக் கொண்டே மீண்டும் தொடரும் ... !

இன்று நவ 29, எஸ்கே ஐயாவுக்கு பிறந்த நாள் அதையும் இங்கு நினைவு அவரை கூர்ந்து வாழ்த்துகிறேன்.

Saturday, November 25, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நேரில் வந்து சந்தித்த பதிவர் !


பலநூறு (?) பதிவுகள் இதுவரையில் எழுதியிருந்தாலும்[:)))], பதிவர் யாரையும் நேரில் பார்த்து பழகிய அனுபவம் இருந்ததில்லை. தொலைபேசியில் சில பதிவர்களுடன் பேசி இருக்கிறேன்,சிலருக்கு மின் அஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.

நானும் திரு
எஸ்கே ஐயாவும் ஏப்ரல் 2006ல் தான் வலைப்பதிவுகள் ஆரம்பித்திருந்தோம். அதற்கு முன்பு அறிமுகம் கிடையாது. பதிவர் பச்சோந்தி என்கிற புனைபெயரில் எழுதும் ராம்பிரசாத் அவர்களின் நாய் கவிதைக்கு பதிலாக எஸ்கே ஒரு கவிதை எழுதி தனிப்பதிவாக இட்டார். இருவரின் கவிதையும் என்னைக் கவரவே நானும் ஒரு நாய் கவிதையை எழுதி எஸ்கே அவர்களின் ஆத்திகம் பதிவில் பின்னூட்டமாக இட்டேன். எஸ்கே பதிவுக்கு வந்தது ஆன்மிகம் பற்றி நிறைய எழுதுவதற்க்கத்தான் ஆனால் அவர் அவ்வப்போது நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு கவிதையும் எழுதிப்போடுவார்.

அவரது ஆன்மிக நம்பிக்கை குறித்து எனக்கு வேறுபட்ட கருத்துக்கள் (கருத்து வேறுபாடு அல்ல) இருந்தாலும் பின்னூட்டத்தில் பொறுமையாக பதில் சொல்லுவார். அவரது எழுத்து நடையும், தமிழ் மொழித் திறனும் வியக்கவைத்தது. அவரது எழுத்தை வைத்து வயது இருபத்து ஐந்துக்குள் இருக்கும் என்றே நினைத்திருந்தேன். அதன் பிறகு அவர் தனது முருகன் அருள் முன்னிற்கும் என்ற பதிவில் தன் வேலையைப் பற்றியும், குடும்பத்தினரைப் பற்றியும் கோடிட்டு இருந்ததை வைத்துதான் வயதில் மூத்தவர் (ஐயா) என்று அறிந்து கொண்டேன். இருந்தாலும் முருகன் அருள் முன்நிற்கும் பதிவில் அவர் சொல்லிய நம்பிக்கை சார்ந்த செய்திகள் குறித்து உடன்படவில்லை. அதுவரை பொதுவான இந்துமத செய்திகளையும், மற்ற கவிதைகளையும் மட்டுமே எழுதிவந்தார்.

என்னதான் மூடநம்பிக்கைகளை சாடுபவராக நாம் இருந்தாலும், நம்மை சமய இலக்கியங்கள், அதுவும் தமிழில் இருந்தால் அவை வெகுவாகவே நம்மை கவர்கின்றனர். அந்த வகையில் திரு எஸ்கே அவர்கள் எழுதிய அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் விளக்கம் நன்றாக இருந்தது. அதில் அவர் சிரத்தை எடுத்து தெளிவாக எல்லா பழஞ்சொற்களுக்கும் கவிதை நடையில் பொருள் விளக்கியது மிகவும் அருமையாகவும், பொருள் மிகாமலும் இருந்தது. அவரை ஊக்கப்படுத்துவதற்காக தொடர்ந்து பின்னூட்டி பாராட்டி வந்தேன். அதன் பிறகு சக பதிவர் என்பதை தாண்டி நட்பு எங்களுக்குள் வந்தது. தொலைபேசி எண்கள் அறிமுகம் ஆகியது, குரல் அறிமுகம் ஆகியது. பின்பு முகங்களை புகைப்படங்கள் அறிமுகம் செய்து வைத்தது. குடும்ப உறவுகள் அறிமுகமானது. இருவருக்கும் ஆழமான நட்பு ஏற்பட்டது. இருந்தாலும் தத்தம் பதிவில் எழுதும் எல்லாவித கருத்துக்களுக்கும் இருவருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தது. அதில் விட்டுக் கொடுப்பதும் இல்லை. கருத்தை மறுத்தல், ஏற்றுக் கொள்தல் என்பதை விடுத்து கருத்தை மதித்தல் என்ற புரிந்துணர்வு இருவருக்கும் இருந்தது.

இதற்கிடையில் வரும் ஜனவரியில் இந்தியா செல்வதாகவும், அப்படியே சிங்கை வந்து சந்திப்பதாகவும் சொல்லியிருந்தார். இடையில் எதிர்பாராத விதமாக அவருடைய அருமை அண்ணனின் திடிர் மறைவை ஒட்டி சென்னை சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். கூடவே சென்னையிலிருந்து தனிப்பட்ட பயணமாக என்னை சந்திக்க சிங்கை வந்து செல்வதாக சொன்னார். இதுவரை தொலைபேசி மூலமும், சாட் மூலமும் உரையாடி எங்களின் நட்பு நேரடி சந்திப்பு அமைய இருந்ததில் மற்றற்ற மகிழ்ச்சியாக இருந்தது. அவர் குறிப்பிட்ட தேதியில் ஜெட் ஏர்வேஸ் மூலம் சென்னையில் இருந்து டிக்கெட் (11 நவ 2006) முன் பதிவு செய்திருந்தாலும் அவருக்கு திடிரென்று சென்னையிலிருந்து மும்பை செல்ல வேண்டியிருந்த்தால் அன்று வர முடியவில்லை என தெரிவித்துவிட்டு மறுநாள் வருவதாக குறிப்பிட்டார். சொன்னபடியே மறுநாள் வந்தார். ஏற்கனவே இருவரும் சந்தித்து இருக்கவில்லை இதுவரை அவர் அனுப்பிய புகைப்படங்கள் பெரியதாக இல்லாததால் அடையாளம் காணுவதற்கு சிரமமாகவே இருந்தது. அரைமணி நேரகாத்திருத்தலுக்கு பிறகு துள்ளி உற்சாகமாக வந்த ஒருவரை தூரத்திலிருந்தே அடையாளம் கண்டு கையை அசைக்கவே அவரும் பதிலுக்கு அசைக்க அவர்தான் எஸ்கே என்று தெரிந்து கொண்டோம்.


மற்றவை நேரம் கிடைக்கும் போது தொடரும் ...

Wednesday, November 22, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஆப்பம் சுடுவது எப்படி ?




ஆப்பத்துக்கு தேவையான பொருள்கள் :

1 படி பச்சை அரிசி
வெந்தயம் 1 தேக்கரண்டி,
உளுந்து 1/4 படி
பலகார சோட உப்பு தேவையான அளவு
அதிகமாக போட்டால் பெரிதாக உப்பும், வாய் வெந்துவிடும்

செய்முறை :

12 மணி நேரம், அரிசி உளுந்து, வெந்தயம் போட்டு நன்றாக ஊரவைத்த பின் தோசை / இட்டிலிக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும். தேசை மாவை விட கொஞ்சம் குழைவாக இருக்கலாம். அப்பொழுது தான், ஆப்ப சட்டியில் சுற்றி எடுக்க வசதியாக இருக்கும் !

ஆப்ப சட்டி இல்லாதவர்கள் வாணலியை பயன் படுத்தலாம். நன்றாக சட்டி சூடானதும், ஆப்பமாவை ஒரு இட்டிலி அளவுக்கு மாவை எடுத்து வார்த்து, சட்டி சுழற்றி ஆப்ப வடிவத்தை ஏற்படுத்தவும், ஆப்ப மையத்தில் சிரிதளவு சர்கரையோ, வெல்லமோ வைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

தொட்டுக் கொள்வதற்கு : தேங்காய் பால் அல்லது சைவ / அசைவ பாயா நல்லது !

Sunday, November 19, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

கோடி நன்மைகள் இலவசம் (கவிதை) ! தே.கூ.போட்டி



இலவசம், இலவசம்,

பிறப்பில் வாழ்க்கை இலவசம், நாம்
வாழும் காலமும் இலவசம் !

மென்மை இதயம் இலவசம், அதில்
அன்பு ஊற்றும் இலவசம் !

கையில் விரல்கள் இலவசம்,
கை கோர்க்க நல்மனமும் இலவசம் !

கால்கள் இரண்டும் இலவசம், அதன்
நல்வழிப் பாதைகளென்றும் இலவசம் !

கண்கள் இரண்டும் இலவசம், அது
காணும் வண்ணங்கள் யாவும் இலவசம் !

கண்களில் கண்ணீர் இலவசம், கரைப்பவர்
நெஞ்சம் அடையும் அமைதி இலவசம் !

வாயில் பற்கள் இலவசம், அதில்
தவழும் புண்ணகை இலவசம் !

நாக்கில் நன் சொல் இலவசம், அதை
நயமுடன் சொல்ல நாடிவருபவர் இலவம் !

மனதில் உறுதி இலவசம், அதை
திடமுடன் நடத்த வெற்றி இலவசம் !

மூளையில் நியூரான்கள் இலவசம், அதை
தூண்டுவோர்க்கு ஏற்படும் (பகுத்)அறிவு இலவசம் !

காதுகள் இரண்டும் இலவசம், அது
கேட்கும் கானக்குயிலின் பாடல் இலவசம் !

இரவில் தூக்கம் இலவசம், அந்த
தூக்கத்தில் காணும் கனவுகள் இலவசம் !

எண்ணத்தில் இனிமை இலவசம், அதுபுகும்
உள்ளத்தில் மகிழ்ச்சி இலவசம் !

ஒளிதரும் சூரியன் இலவசம், அதன்
சுகம்தரும் மித வெட்பம் இலவசம் !

மேக ஓடைகள் இலவசம், அதுதரும்
தாக நீர்த்துளி இலவசம் !

வான வீதிகள் இலவசம், அதில்
கண்மயக்கும் வின்மீன் தோரணம் இலவசம் !

மலையின் நீர்வீழ்ச்சி இலவசம், அது
நடந்தால் பொங்கும் ஆறுகள் இலவசம் !

இரவில் நிலவு இலவசம், அதன்
இரவல் குளிர் ஒளி இலவசம் !

கடல்கரை அலைகள் இலவசம், அது நம்
கால் தொட சிலிர்ப்புகள் இலவசம் !

உழைப்பில் வியர்வை இலவசம், இவை
சேர்ந்தால் உடல் நலம் இலவசம்

தாயின் கருவரை இலவசம், அதில் வளர்ந்திட
தாய் தரும் உதிரம் இலவசம் !

தலைகோதும் தாயன்பு இலவசம், அவள்
முலைதரும் தாய்ப் பாலும் இலவசம்

அப்பாவின் பாசம் இலவசம், அவர்
தப்பாமால் செய்யும் கடமைகள் இலவசம் !

பிறப்பில் இளமை இலவசம், இளமையில்
ஊற்றெடுக்கும் சுறுசுறுப்பு இலவசம் !

வாழ்வில் முதுமை இலவசம், முதமைதன்
போக்கில் வரும் மரணம் இலவசம் !

புலன்களில் உணர்வுகள் இலவசம், அதை
கட்டுக்குள் வைக்க இன்பங்களணைத்தும் இலவசம் !

நட்பில் நம்பிக்கை இலவசம், நாடிபோற்றினால்,
எவர் வசமும் நமக்கு இலவசம் !

காதலில் அன்பு இலவசம், அதில்
காணும் பரவசம் இருவருக்கும் இலவசம் !

கூடி வாழும் மனம் இலவசம், இருந்தால்
கோடி நன்மைகள் இலவசம் !


பின்குறிப்பு : ஆருயிர் நண்பர் எஸ்கே ஐயா அவர்களின் இலவச போட்டிக்கு சிறிய அளவில் பின்னூட்டமாக இட்ட கவிதை இலவசமாக வளர்ந்து, அதே தேன் கூடு போட்டிக்காக வளர்ந்திருக்கிறது !

Wednesday, November 01, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

விடை !

நான் பதிவுலகில் நுழைந்து ஓராண்டுக்கு மேல் ஆனாலும், பதிவு எழுத துடங்கியது ஏப்ரல் முதலே ! குறிப்பிட்டு எதுவும் எழுதவேண்டும் என்று நுழையவில்லை. மேம்போக்காக எல்லாவற்றையும் தொட்டு மட்டும் எழுதினேன். இதுவரை காலம் பதிவில் 132 பதிவுகளும், காலங்கள் பதிவில் 80 பதிவுகளுக்கும் மேல் எழுதியாகிவிட்டது. எழுதிய சிலவற்றை ஏற்றவில்லை. எழுதியவரை திருப்தி இருந்தது.

பெற்றது ?
பெற்றது பெரிதாக ஒன்றும் இல்லை, தமிழோடு நெருங்கி உறவாட முடிந்தது. அதுதான் பெரியது. பல நல்ல பதிவர்களின் கருத்துக்களை அறிய முடிந்தது. சில நண்பர்கள் கிடைத்தார்கள் போனார்கள். தொடர்ந்து தட்டச்சியதில் இடதுதோள் வலி, விரல்வலி இவைகள்.

இழந்தது ?
நேரங்கள் தான் ! நிறைய நேரங்களை செலவிட்டு இருக்கிறேன். தூக்கம் கெட்டு இருக்கிறது. உணவு வேளை தப்பியிருக்கிறது. வேண்டாத பலவற்றை மனது உள்வாங்கியிருக்கிறது. அதிலிருந்து மீள சில காலம் ஆகும். குறிப்பாக சார்ந்த தொழில் பற்றி படிக்க நேரமும், கவனமும் இல்லாமல் போனதை நினைத்துப் பார்க்கிறேன். இனி சுய முன்னேற்றத்திற்காக படிப்பதற்கு கவனம் செலுத்த நினைத்துள்ளேன். வாரத்துக்கு ஐந்து பதிவுகள் எழுதி குறி சொற்களில் கோவி.கண்ணன் என்று எப்போதும் தமிழ்மணத்தில் தெரிவது, இனிவரும் வாரங்களில் இருக்காது.

குட் பை :
இதுவரை எனது பதிவுகளை படித்தும் பாராட்டியும், குட்டியும், தட்டியும் ஆதரவு கொடுத்த பதிவர் நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் படித்த அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி பதிவுகளை தொடர்ந்து படிப்பேன், கருத்துக்களுக்கு பின்னூட்டம் இடுவேன். பார்வையாளனாக தொடர்வேன் ! அத்தியும் எப்போதாவது பூக்கும் !

எனது பதிவுகளை உள்ளிட அனுமதித்த தமிழ்மணம் மற்றும் தேன்கூடு நிர்வாகத்தினருக்கும் நன்றி !

எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் குட் பை !

எல்லோரும் மகிழ்வுடன் இன்புற்று இருக்க வேண்டும் !

நன்றி !

அன்புடன்
கோவி.கண்ணன்
தமிழ்மணம் கருவிபட்டை

திரு எஸ்கே ஐயாவுக்கு பாராட்டுக்கள் !

மதிப்பிற்குறிய எஸ்கே ஐயா அவர்கள், நண்பர் திரு சிவபாலன் பாலியல் குறித்த பதிவில் பலருக்கும் ஏற்பட்ட தாக்கத்தைத் தொடர்ந்து, திரு சிவபாலன் மற்றும் பல நண்பர்கள் அழைப்பை ஏற்று, பாலியல் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளை தொடர் கட்டுரையாக எழுதி ஒவ்வொரு வாரம் இருமுறையாக செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்து 10 வாரங்களாக 18 பகுதிகளாக சிறப்பாக எழுதி முடித்திருக்கிறார்.

அதில் அவர் சொல்லிய செய்திகள் மிகந்த எச்சரிக்கையுடன் எளிமையான வார்தைகளை பயன்படுத்தி, ஆபாசத்தை சிறிதும் தொடாமல் சொல்லவேண்டிய, புரியவேண்டியவற்றை அவருக்கே உரிய நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்.

பதிவை படித்த வளரும் குழந்தைகளை உடைய என்னைப் போன்ற பெற்றோரை வெகுவாக ஈர்த்தது அந்த பயனுள்ள பதிவு. இடை இடையே பலருக்கும் ஏற்பட்ட சந்தேகங்களை பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்கி இருந்தார்.

ஒவ்வொரு தலைப்புக்கு கீழும் கருத்துள்ள பாடல் வரிகளை அமைத்து சுவைபட எழுதியிருந்தது பதிவுக்கும் மேலும் சிறப்பு.

"கவிதைகளும், ஆன்மிக இலகியங்கள் திறம்பட எழுதும் உங்களுக்கு கட்டுரை எழுத வராதா ?" என்று கேட்டதற்கு 'எழுதலாமே' என்று சிரித்தார். 18 பகுதியாக வெளிவந்த தொடர் கட்டுரையையின் அமைப்பைபயும், கருத்துக்களையும் பார்த்த போது நான் அவரை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறேன் என்று தெரிகிறது.

திரு எஸ்கே ஐயா, அமெரிக்காவில் பல்வேறு தமிழ் பண்பாட்டு அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றில் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தி இருக்கிறார் என்று தெரிய வந்தது. ஐயா அவர்களின் வயதும், தொழில் சார்ந்த அனுபவமும், செய்த பொதுச் சேவைகளை கேள்விப்பட்ட போது அவரால் இதுபோன்ற சிறந்த இலக்கிய கட்டுரைகளை ஆக்க முடியும். திரு எஸ்கே ஐயா தமிழில் மேலும் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வழங்கவேண்டும் என்று என்னைப் போன்றவர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

குறுகிய காலத்தில் அறிமுகம் ஆகி இதுவரை 100த் தாண்டிய பதிவுகளாக ஆன்மிக கட்டுரைகள், அழகு தமிழில் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் விளக்கம், சென்னை வட்டாரா மொழியில் சுவைபட 'மன்னார் திருக்குறள்', கவிதைகள், போட்டி ஆக்கங்கள் ஆகியவற்றை திறம்பட படைத்து இருக்கிறார். திரு எஸ்கே ஐயாவின் தமிழ் பதிவுச் சேவையை அவர் தொடர்ந்து செய்து தமிழுக்கும், தமிழர்களுக்கும் பயனளிக்க வேண்டும் !

அவருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும் அவர் வணங்கும் முருகன் அவருக்கு கொடுப்பாராக !

பதிவர் உலக பாரதியார் எஸ்கே ஐயா வாழ்க வாழ்க !
வளர்க அவரது தமிழ்ச் சேவை !

குமரன் அருள் கூடவே வரும் !

எஸ்கே ஐயாவின் பதிவு தொடுப்புகள் :

1.
ஆத்திகம் (திருப்புகழ், மன்னார் திருக்குறள், கவிதைகள் பதிவு)
2.
கசடற (பாலியல் விழிப்புணர்வு பதிவு)