Thursday, December 27, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

பொறுப்பு !


காதை செவிடாக்கும் பெரும் வெடிச்சத்தம்,
கபாலம் உடைந்து இரத்தம் வடியும் தலைகள்,
இனி ஒன்றுமில்லை என்று காட்டியபடி,
இரத்தம் வடிந்து, விரிந்து துவண்ட கைகள்,
உள் ஆடைகளை வெளிப்படுத்தியபடி,
இரத்தத்தில் நினைந்த நயிந்த மேலாடைகள்,
வெட்டி தூக்கி எறியப்பட்டதுபோல்
எட்டடி தாண்டி விழுந்த கால்கள்,
வெளியுலகை சரிந்தபடி,
எட்டிபார்க்கும் பெருங்குடல்கள்,
பாதி எரிந்து,
இன்னும் எரிந்து கொண்டிருக்கும் வாகனங்கள்,
சிதறிய காலணிகள் !
பிளந்து விரிந்த மார்பின் வழியாக
இயற்கை காற்றை சுவாசிக்க முனைந்து
தோற்ற இதயங்கள் !
கடைசியாய் உலகை கேள்வியுடன்,
கேலியாய் பார்த்தபடி அடங்கிய கண்கள் !
இந்த பரபரப்புகள் அடங்குமுன்,
பூமியில் இரத்தம் காயும்முன்,
அங்க அடையாளம் காணும்முன்,
துப்பு துலங்கவில்லை என்று கூறி
பாதுகாப்புத்துறை கைவிறித்து விடக்கூடாது,
என்பதில் அக்கறைகொண்டு,
இப்பொழுதெல்லாம், பொறுப்புடன்
நடந்து கொள்கிறார்கள்,
தீவிரவாதக் குழுக்கள் !
சலனப்படாமல், சத்தமாக உடனே
சொல்லி விடுகிறார்கள்,
தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் !

திண்ணையில் எழுதியது Friday October 21, 2005

Thursday, December 20, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

பூக்களின் மவுனம்...


இலவச உதவி எவரிடமும் கேட்காதே ...
இயற்கைச் சொல்லித்தரும் பாடம்,

கனியில் சுவை இல்லாது போனால் ?
அசையாது இருக்கும் மரம் செடிகள்
அகிலம் முழுவதும் பரவ, அவற்றின்
விதைப்பரவல் என்பது சாத்தியமா ?
கனியின் சுவையால் மரம் செடி கண்ட பலன்
எதுவுமில்லை, மறைமுகமாக
என் வித்தை விதைக்கும் உனக்கு என்
கைமாறு இதோ என் கனிகள் !
கைகண்ட பலன் விதைப்பரவலே.

வண்ணமும் மணமும் பெற்றுக் கொள்,
அருகில் வந்தால் இன்னும் கூட
பரிசு...!
தேனையும் உரிஞ்சலாம்,
தேன் ஈயே...!
இவற்றிற்கு உன் கால்மாறு
என் (மகரந்த) சேர்க்கைக்கு உதவுவது.

"உனக்கு உதவி தேவைப்படும் முன்
உதவுபவர்களுக்கு விருந்தை
தயாராக வை...!"

மென்மைப் பூக்களின் மேன்மை
அழகிலும் மணத்திலும் மயங்கி
வண்ண இதழ்களின் ஊடே
தேன் துளியைச் சுவைத்துக் கொண்டே
வண்டுகள் பாடும் ரீங்காரம்...
பூக்களின் மெளன மொழியை
புரிந்து கொள்பவர்களுக்கென
மொழிப்பெயர்த்துக் கொண்டே தான்
இருக்கின்றன...

Saturday, December 01, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

எதற்கு காத்திருக்கிறேன் ?


புள்ளிக்குள் அடங்கியாக புள்ளியாக மாறி
புள்ளையாய் மாற எப்போது காத்திருந்தேன் ?
கனநேரத்தில் காத்திருப்பின்
கனம் உடைந்து அப்பன்
உடலுக்குள் உயிராய் வந்த
தருணங்கள் என்று வந்தது?
விடையேதும் அறியாமல் சிந்துத்து
காத்திருந்திருக்கிறேன் !

கருவில் உருவாகி, ஒருவழி உலக வாசல்
ஒன்றில் இருந்து உதிக்கும் நேரம்
எதுவென்று தெரியாமல்
இருப்பை உணர்த்தி
உதைத்துக் கொண்டு காத்திருந்தேன் !

எந்த ஊர், எந்த நாட்டில்
என்று நான் புறப்பட்ட இடத்திற்கு
மீண்டு(ம்) செல்வேன் என்று
அறியாமல் காத்திருக்கிறேன்.

கனங்கள் எல்லாமே காத்திருப்பின்
கனங்களாகவே இருக்கிறது !
என்றிங்கு வாழ்ந்தேன் ?
எல்லா நேரமும் காத்திருக்கிறேன்.

எனக்கே என் காத்திருப்பின்
காலமும் நோக்கமும் தெரியாத போது,
எதற்காக காத்திருக்கிறேன்
என்று நினைக்கும் போது ?
எனக்காக காத்திருப்பவர்
என்று எவரும் இருக்க முடியுமா ?

கடக்கும் 'காலங்களைத்' தவிர
யாருக்காவும் யாரும், எதுவும்
காத்திருப்பதில்லை !

----
அன்புடன்,

கோவி.கண்ணன்