Friday, March 30, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

புதிய தேசீய கீதம் !

நாமெல்லாம் இந்தியர்கள்,
இந்தியர் என்றால் இந்துக்கள்,
'இந்தூ'ய தேசீ'யம் காப்போம்
இந்தியனாக இருப்போம்
இந்து கடைகளிலேயே பொருட்கள்
வாங்குவோம்,
பிச்சை எடுத்தாலும் மாதாகோவில்களிலோ,
தர்காக்களிலோ எடுப்பதை வெறுப்போம் !


பகவானுக்கு முன்னால்
இந்துக் கோவில்களின் வாசலில் மட்டும்
அமர்ந்து பிச்சை எடுப்போம்
நாமெல்லாம் வெறும் இந்தியர்கள் மட்டுமல்ல
இந்தியர்கள் என்றால் இந்துக்கள் !பி.கு : அரைகுறையாக புரிந்து கொண்டு நண்பர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். இப்பெல்லாம் தேசியம் பற்றி பேசுவதுதான் டிரெண்ட் அது என்ன மாதிரி தேசீயம் என்று சொல்ல முயன்றேன்.

Monday, March 26, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

காதல் கிறுக்ஸ் 1


போதை பொருள் !


ஒரே ஒரு பார்வையில்
அப்படியே மயங்கினேன்,
போதைப் பொருள்
வைத்திருந்த குற்றத்திற்காக
உன்னை என்
இதய சிறையில்
அடைக்கிறேன் !


பின்குறிப்பு : அருட்பெருங்கோ மன்னிப்பாராக :)

Thursday, March 15, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

உன்னால் தானே வாழ்கிறேன் !நீ அழும்போது அழுகிறேன்,
சிரிக்கும் போது சிரிக்கிறேன்.
உறவுகள் அனைத்தாகவும்
உன்னைத்தான் பார்க்கிறேன்
மூன்று வருடங்களாக
உன் முகம் பார்த்து மகிழ்கிறேன்
என்னை இயக்கும்
ரிமோட் கண்ட்ரோல் நீ !
உன் ரகசியங்கள் அனைத்தும்
எனக்கு சொல்கிறாய் !
உனக்கு மின்சாரம் இல்லை என்றால்
புழுக்கம் எனக்கும் தான் !
சனி, ஞாயிறு காணாமல்
உன்னை நினைத்து ஏங்குகிறேன் !
அடுத்த எபிசோடுக்கு ஆளாகப்
பறக்கிறேன் !
எப்போதும் முடியாதே எனது
அருமை மெகா சீரியலே !

பி.கு : சன் தொலைகாட்சி நேயர்களுக்கு காணிக்கை !

Monday, March 12, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

ஆதவனின் காலை வேளை !


இலவச பள்ளி எழுச்சி இசையென
சோலை வனங்களில் பூபாளம் இசைத்தது
புல்லினம் !

தூக்கத்தின் அசதி,
கண்கள் சிவக்க விழித்துக் கொண்டது
விடியல் !

இன்று இதுபோதும் என்று
மின்சாரத்தை நிறுத்திக் கொண்டது
விண்மீன்கள் !

பொன் வண்ண கடல் குளியல்,
பனித்துளிக்குள் முகம் பார்த்து
அலங்கரித்து பொலிவு
பெற்றான் ஆதவன் !

காலை பசியின் உணவாக
கடற்கரை மணல் புட்டுக்களின்
ஈரங்களை உண்ணத் தொடங்கி,
பூக்களின் வியர்வையை
அருந்தியதும் உற்சாகமாக
அன்றைய வேலையை
ஆரம்பித்தான் ஆதவன் !

Sunday, March 11, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

சு(ட்)டும் உண்மைகள் !பெண்ணியத்தை உருக்கி
கவிதைகளாக வார்த்துக் கொண்டிருந்தேன்,
சுட்டும் வார்த்தைகளின் இருப்பு
முற்றிலும் தீர்ந்த போது,
அடங்காத எண்ணத் தீயின் பசி
வார்த்தைகளுக்காக அலைந்தது !

இந்த பசியின் இடையே,
அமைதியைக் கெடுத்தது,
அடுப்பங்கரையின் மிக்ஸி சத்தம் !
நிறுத்தச் சொல்லி,
மனைவியின் கன்னத்தில்
இறங்கியது எனது வலது கை !

Friday, March 09, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

இட ஒதுக் கேடு ?


ஊருக்குள் வெளியே
சேரி மட்டும் தான், என்றோ
கொடுத்து விட்டாய்
எமக்கு இட ஒதுக்கீடு !

நாங்கள் அறிவாளிகள் என
உன்வீட்டு கணக்குப் பாடம்
கூட்டல், கழித்தல், பெருக்கல்
முழுவதும் எமக்கு மட்டுமே !

என் இடதுகை கறந்த பாலை
உம் வலது கையால் வாங்கி கண்ணில்
ஒத்திக் கொண்டு தூய்மை என்கிறாய்
என்னைத் தொடாமலேயே !

அஸ்திவாரமாக இருந்தபோது
நான் சுமந்த கற்களை எந்த
கோவிலும் வேண்டாம்
என்று சொல்லவில்லை !

நான் உடைத்த பாறையில்
செய்த சிலை
தூரத்தில் இருந்தே
எம்மை கண்டு கொல்கிறது!

நான் வெட்டிய மரங்களில் செய்த
கதவுகள் கோவில் முன்
எம்மைக் கண்டதும்
சாத்திக் கொல்கின்றன !

கேட்காமல் அனைத்து ஒதுக்கேடும்
எனக்கு கொடுக்கிறாய்
கேட்கும் ஒன்றை ஏன் மறுக்கிறாய் ?

Wednesday, March 07, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

மங்கையர் நன்னாள் !

தாய் மனைவி மகள் என
என் மூன்று காலங்களிலும் நீயே
நீக்கமற நிறைந்திருக்கிறாய் !

உன் கருவரையில் தான்
எம் குலதெய்வங்கள்
உயிரும் உடலும் பெறுகிறது !

இருவருக்காக உண்ணும் ஒருவர்
என்ற சிறப்புத் திறனும்
உன்னிடம் மட்டுமே இருக்கிறது !

அமுத சுரபியும், அட்சய பாத்திரமும்
வைத்துக்கொண்டு அள்ளி அள்ளிக் கொடுத்து
பசி பினி நோய் தீர்ப்பவள் நீ !

பேற்றிற்காக தன்குறியை அறுத்தும்
வயிற்றைக் கிழித்தும் நீ செய்யும்
தியாகம் போற்றதக்கது !

தன்னை மறந்து வாழ்நாள்
முழுதும் குடும்ப நலனுக்காக வாழும் நீ
பிறக்கும் போதே பேறு அடைந்தவள் !

உன் அருமையும், பெருமையும் அறிந்தே
நதியாய், நிலமாய், நிலவாய்
உன்வடிவம் உருவகமாக போற்றப்படுகிறது !

இறையென்ற சக்திக்கு நீயே சக்தி !
கறையொன்றும் இல்லைப் பெண்ணே !
எல்லாவற்றிலும் நீயே நிறை !

அனைத்து பெண்களுக்கும் மகளிர் நன்னாள் வாழ்த்துக்கள் !


அன்புடன்,

கோவி.கண்ணன்

Sunday, March 04, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

வழிகளும் வலிகளும் !


இந்த வழி ஆபத்தானதல்ல
இதோ பார் எனக்கு நன்றாகவே
இருக்கிறது என்றார்
செருப்பணிந்த ஒருவர் !

காலுக்குச் செருப்பின்றி நடக்கும் நான்
அதே வழியில் முட்கள் கிடந்து
தைப்பதை உணர்ந்தேன்.
தெரிந்தவற்றை எடுத்து அப்புறப் படுத்தினேன்,
தெரியாதவைகள் தைத்து உதிரம் கொட்டியது !

சிலவற்றை எடுத்து வீசும் போது
வழியை தூய்மை படுத்தியதாக
எண்ணத்தில் இருந்தாலும்,
இந்த வழியில்
இத்தனை முட்களும் கற்களுமா
நான் செருப்பணிய முடியுமா ?
செருப்பணிவது எனக்கு எட்டாக்கனி
என்று அவர் எள்ளி நகையாடினார்.

இந்த செருப்பே வேண்டாம் !
என நினைத்து
ஒன்று பாதையை மாற்ற வேண்டும் அல்லது
பாதையை தூய்மைப் படுத்த போராட வேண்டும்
என நினைத்துக் கொண்டிருக்கும் போது
மீண்டும் எதிர்பட்ட
செருப்பணிந்தவர் சொல்கிறார்
என்னளவில் இந்த வழி நல்வழியே !
இதில் மாற்றம் தேவை இல்லை !

எப்போதும்,
நன்மை - தீமை என்ற பகுப்பில்,
பார்வையில் காணாமல் போகிறது
உண்மைகள் !