Thursday, September 28, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நரகாசூரன் !


நரகாசூரன் !

பள்ளியை மறந்து,
படிப்பைத் துறந்து
பட்டாசு தொழிற்சாலையில்
பாலகர்களை வதைக்க
வதைத்து எடுக்க,
ஆண்டு தோறும் அவதாரம்
எடுத்து அழிக்க முடியாதவனாக
கொக்கரிக்கிறான் நரகாசூரன் !

ஐந்து மாடிகள்
தி.நகர் கடைகளில் வளர்ந்தும்
அடிமையாய்
அதே சிறுவர்களை
உழைப்பிற்கேற்ற
ஊதியம் இல்லாமல்
ஊதாரியாக மாற்றிவிட
ஆண்டு தோறும் பிறக்கிறான்
அதே நரகாசூரன் !

பட்டு பளபளக்க,
மத்தாப்புக்களில்,
மந்தாகச புன்னகைப் பூத்து
மறுபடியும் வருவேன்,
மடிவென்பது என்றும்
இல்லை என்று
பட்டாசு ஒலியாய்
மார்தட்டிச் சிரிக்கிறான் நரகாசூரன் !

பி.கு: தேன் தந்த தலைப்பு இது...!

Monday, September 25, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மறைந்திருந்தே ...!மறைந்திருந்தே ...!

பூவே...! பூச்சூடி சென்றயோ ...?
மறைந்துவிட்டாலும் என்றும் விலகாத
ஆச்சரியம் நீ ! இனி
மறைந்திருந்து தான் நீயே
எங்களைப் பார்க்கவேண்டும் என்பது
படைத்தவன் மட்டுமே
அறிவான் அந்த மர்மம் ...!
நலம் தானா ...? கேட்க இனி
நாங்கள் வரவேண்டும் உன்னிடத்தில் !
நீ செல்லும் முன்,
மன்னவன் சென்றானடி தோழி !
உன் நாட்டியம் அரங்கேற்றம்
தேவலோகத்தில் மட்டும் தானா ?
சுந்தரி நீ சென்றதால்,
ரம்பா, ஊர்வசி, மேனகை
மூன்று பேருக்கும் வேலை
இருக்குமோ இனி இந்திரசபையில் !
இன்னொருத்தி நிகராகுமோ !
உனக்கு இன்னொருத்தி நிகராகுமோ !
நடராஜனின் பாதத்தில் இனி
நிதம் ஒலிக்கும் உன் பரதம் !

பி.கு : நாட்டிய பேரொளி பத்மினி அம்மாவுக்கு இதய அஞ்சலி

Saturday, September 23, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஞாயிறு போற்றி ... !


உன்னிடமிருந்து பிறந்தேன் ...
உன்னுடைய சக்தியில் வாழ்கிறேன் ...
உன்னையே அடைவேன் ...

நீ பிறந்த போது ...
இந்த பூமியும் ...
நானும் பிறந்தோம் ...

என் கண் எதிரே நிற்கும்
தெய்வம் உனையன்றி
வேறொறு தெய்வம்
என் சிந்தை நாடாது ... !

உன் வெப்ப மூச்சு கூட
எனக்கு என்தாய்
உன் அணைப்பாக
தெரிகிறது... !

எம்மை வாழ்விக்க,
வெம்மை உடலை உருக்கி,
உம்மை அழித்துக்கொள்ளும்
உமையாள் உண்மையில் நீ யன்றோ !

Wednesday, September 20, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

இன்னும் இருக்கிறது ஆதாயம் !


இன்னும் இருக்கிறது ஆதாயம் !

நாமெல்லாம் ஒரே இனம்,
ஆனால் எதையும் என் குலம்
அல்லாதவர்க்கு விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

நாமெல்லாம் இறைவனின் பிள்ளைகள்
ஆனால் என்கடவுளே உயர்ந்தவர்,
என்மதத்தை விட்டுகொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

அரசியல் வாதிகள் எல்லோரும் ஊழல் செய்பவர்கள்
ஆனால் என் கட்சியே சிறந்தது
என் தலைவரை விட்டுகொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

எல்லா மொழியும் சமமானது
ஆனால் என் மொழியே உயர்ந்தது
கருவரையை விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

Tuesday, September 19, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

இன்னும் இருக்கிறது ஆகாயம் ! (கவிதை)இன்னும் இருக்கிறது ஆகாயம் !ஒரு சிறிய வட்டம்,
அதில் நான் மட்டுமே இருந்தேன் !

வட்டத்தை கொஞ்சம் பெரிது படுத்தினேன்
என் குடும்பம் அதற்குள் வந்தனர் !

வட்டத்தை மீண்டும் கொஞ்சம் பெரிது படுத்தினேன்,
எனது மொழிப் பேசுபவர்கள் அதற்குள் இருந்தனர் !

வட்டத்தை மீண்டும் அதைவிட பெரிது படுத்தினேன்
எனது தேசத்தினர் அதற்குள் இருந்தனர் !

வட்டத்தை மிகப் பெரியது ஆக்கினேன்,
நான் வாழும் பூமி அதற்குள் இருந்தது !

அடுத்து என்ன செய்யலாம், எண்ணியே மேலே பார்த்தபோது,
'இன்னும் இருக்கிறது ஆகாயம்' என்றும்,
ஆகாய வட்டத்துக்குள் பிரபஞ்சத்தை இணைத்துவிடு' என்று
சுட்டெறித்துச் சொன்னது சூரியன் !

குறுகிய வட்டத்திற்குள் நான் மட்டுமே இருந்தேன் !
விரிந்த ஆகாய வட்டத்திற்குள் பிரபஞ்சமே இருந்தது !

எல்லைக்குள் அடக்க முடிந்தவைகளை கூறுபோட்டபின்,
நாடுகளும், நாமும் கூறுபோட முடியாமல்,
எல்லையற்று இருப்பதால் என்றுமே ஒன்றாகவே
இன்னும் இருக்கிறது ஆகாயம் !


பி.கு : வ.வா சங்கம் கவிதைப் போட்டிகாக எழுதிய கவிதை இது. போட்டி நடத்திய
வ.வா சங்கத்துக்கு பாராட்டுக்கள்.
தமிழ்மணம் கருவிபட்டை

சாமி கண்ணைக் குத்துமா ?

திரு என்னார் அவர்களின் சிருஷ்டி பற்றிய பதிவைப் படித்த போது, எனக்கு ஏற்பட்ட ஒரு சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். இது அவரது பதிவிற்கான எதிர்வினை அல்ல.

குழந்தைகள் வளரும் போது பெற்றோர்கள் அறிமுகப்படுத்தும் முக்கிய விசயங்களில் கடவுள் நம்பிக்கையும் ஒன்று. பயத்தின் மூலமாக குழந்தைகளுக்கு பக்தி போதிக்கப் படுகிறது. இதைச் செய்தால் சாமி கண்ணைக் குத்தும், அதைச் செய்தால் தண்டிக்கும் என்று பூச்சாண்டியாக கடவுள் நம்பிக்கை குழந்தைளுக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. குழந்தைகளின் அடுத்த வளர்ச்சியில் இது நம்ம சாமி, அது அவர்களுடைய சாமி என்று வேற்று மதங்களின் கடவுள்களின் அறிமுகம் கிடைக்கிறது.

அதன் பிறகு மதம் சார்ந்த நம்பிக்கைகளை பண்டிகை மூலம் ஓரளவு வளரும் போது குழந்தைகள் தெரிந்து கொள்கிறார்கள். இவ்வாறாக கடவுள் நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை என்ற அளவில் நின்றுவிடுகிறது. சிறுவயது முதல் ஏற்பட்ட பயம் காரணமாக கடவுள் குறித்து கேள்வி எழுப்பாமலே தொடர்ந்து எத்தகைய நம்பிக்கை நம் மதத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்.

எல்லா மதங்களுமே சொர்கம், நரகம் என்ற கோட்பாடுகளை புகுத்தி அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் யுக்தியை தனக்குள் வைத்திருக்கின்றன. தத்துவங்கள் என்ற பெயரில் சில நம்பிக்கைகள் கட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ராகு காலத்தில் காரியம் தொடங்கக் கூடாது, தேய்பிறையில் தொடங்கக்கூடாது, வெள்ளிக்கிழமை செய்தால் நல்லது என்பது போல் பல நம்பிக்கைகள் கட்டுப்பாட்டில் நாம் செயல்படுகிறோம். இவை ஏன் என்ற கேள்வி எழும் போது பாதிக்கப்பட்ட அல்லது லாபம் பெற்ற ஒருவரையோ, ஒரு கதையையோ சொல்லி அதற்குமேல் யோசிக்க விடாமல் செய்துவிடுகின்றன.

இந்த தத்துவங்கள் அல்லது நம்பிக்கைகள் எல்லாம் உண்மையானவையா ? உண்மையானவை என்றால் அதை ஏன் சூட்சமாக சொல்லவேண்டும். கண்ணை மூடிக் கொண்டு இதில் ஏதோ சூட்சமம் இருக்கிறது அல்லது ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறது என்று நம்புவர்களுக்கு அதனால் என்ன பயன் ?. நமக்கு என்னவென்றே தெரியாத விசயத்தை எல்லோரும் செய்கிறார்கள் கேள்வி எழுப்பாமல் நாமும் ஏன் செய்யவேண்டும் ? என்றெல்லாம் நாம் பார்பது இல்லை.

எவரோ ஒருவரோ , பலரோ இருட்டுக்காலத்தில் சொல்லிய ஒன்றை இந்த காலத்துக்கு அது எவ்வாறு பொருந்தும் என்று பார்கமலேயே பல நம்பிக்கைகள் காலம் காலமாக வளர்க்கப் படுகின்றன. இவை வாழ்வியலுக்கு எவ்வாறு பயனிளிக்கிறது என்று பெரும்பாலான நம்பிக்கையாளர்கள் பார்ப்பது இல்லை. இன்னும் இந்த நம்பிக்கைகளை நம் கெளரவ சின்னங்களாக நினைத்து அவற்றைப் பற்றி கேள்வி எழுப்புபவர்களை சாடியே வருகிறோம்.

ஒரே மாதிரி வித்தைகள் செய்பவர்களில் ஒருவர் வேறு ஒருவரை இரத்தவாந்தி எடுக்கவைத்தால் அவர் மோடி மஸ்தான். அதேபோல ஒரு வித்தை மூலம் வேறு ஒருவர் தனக்கு தானே எடுக்கும் வாந்தியில் லிங்கம் வரவழைத்தால் அவர் அவதாரமாக பார்க்கப்படுகிறார். மோடி மஸ்தானா ? அவதாரமா ? எடுக்கப்படும் வாந்தியின் மதிப்பை பொறுத்து வித்தைக்காரார் போற்றப்படுகிறார். இதெல்லாம் நமக்கு தெரியாமல் இருக்கிறதா என்ன ?

உண்மையான கடவுள் நம்பிக்கை என்பது ஒரு தேடலாக இருக்கவேண்டும், அப்படி இருக்கும் போது 'சாமி கண்ணைக் குத்தும்' என்ற பயமே இல்லாமல் கேள்விகள் வரும்.

இப்பொழுது பெரும்பாலோருக்கு இருப்பது கடவுள் நம்பிக்கையில்லை, மதம் சார்ந்த நம்பிக்கைகளே. கடவுள் நம்பிக்கை இருந்தால் மாற்று மதக் கடவுள்களை தூற்றத் துணிவரோ? கடவுள் படைப்பில் உயர்வு தாழ்வு பார்ப்பாரோ ? நமக்கு பிறப்பு முதல் ஊட்டப்படும் 'சாமி கண்ணைக் குத்தும்' என்ற பயம் மதங்களில் பாதுகாப்புடன் இருக்கும் மூட நம்பிக்கைகளைப் பற்றி கேள்வி எழுப்பதை மறைமுகமாக தடுக்கவே அதிகம் பயன்படுகிறது. கடைசிவரை நமக்குவிடை கிடைக்காமல் போகும் விசயங்களை நாம் நம்புவதால் நமக்கு என்ன பயன் என்ற கேள்வி எப்போதும் எழுவதே இல்லை என்பதும் ஆச்சரியமான விசயம்.

Monday, September 18, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நெருடல் ?


ஆறுவருடங்களுக்கு பிறகு
ஒரு நிகழ்ச்சியில்
நடந்த எதிர்பாராத சந்திப்பில்,
அவளும் அவனும் பார்த்துக் கொண்ட போது,
எந்த கூச்சமுமின்றி,
நீ நலமா ?
நீங்கள் நலமா ?
இவள்தான் என் மனைவி !
இவர்தான் என் கணவர் !
பரஸ்பர அறிமுகம் முடிந்தது !

உனக்கு எத்தனை குழந்தை ?
இது ஒன்றுதான் !
உங்களுக்கு ?
இவர்கள் இரண்டு பேர் !

நொடிப் பொழுதில் நடந்து முடிந்த
அந்த சந்திப்பில், ஏனோ
இவர்களில் யாரோ ஒருவருடைய
பெற்றோர்கள் வீட்டில் வளரும்,
இவர்களது இரு குழந்தைகளைப்பற்றி
இவர்கள் இருவரும்,
ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை !

Friday, September 15, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

blogspot.com டவுன்!

தமிழ்மணத்தில் புதிய இடுகையோ, மறுமொழியோ வராத அந்த ஒரு மணி நேரம் 1 நிமிடம்!

Thursday, September 14, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

அனானிகளுக்கு மட்டும்...!

அன்பு அனானிகள் பலர்(?) என் மீது அன்பு(?) கொண்டு... பல பதிவர்ளின் பதிவுகளுக்குச் சென்று தங்களுக்கும் என் பதிவில் அனானி பின்னூட்ட இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகிறார்கள். அவர்கள் எனது பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்து (?) ஆழங்களில் ஈர்க்கப்பட்டு, கவிதைகளின் நயத்தில்(?) மெய் மறந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அனானிகள் முன்னேற்ற சங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் பல நல்ல உள்ளங்கள் இருக்கும் போது என்னுடைய ஆதரவு இப்'போதை'க்கு தேவையில்லை என நினைகிறேன். மேலும் அனானி ஆப்சன், அதர் ஆப்ஸன் இரண்டும் சேர்ந்தே இருப்பதால் எப்படி அனானிகளுக்காக மட்டும் கதவை திறந்துவிட முடியும் ? அதர் ஆப்ஸ்சன் மூலம் யாராவது சமோசா (எல்லோரும் போட்டதால் போலியை விட்டுடுவோம்) போட்டு பதிவர் பெயரில் விளையாடினால் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஞானம் இல்லை. ஆகவே கண்மணிகளே என் மீதி மதிப்பு வைத்திருப்பது உண்மையானால் (சென்டிமென்ட் போட்டு தாக்குறேன் பாருங்க :) ! ) தங்கள் கோரிக்கையை திரும்பப் பெருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் வழக்கமாக கும்மியடிக்கும் பதிவுகளை என்னுடைய பதிவுகளாக நினைத்து தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு(?) கொடுக்குமாறு இந்த பதிவின் மூலம் வேண்டிக் கொள்கிறேன்.

உங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைப்பதால் ஒரு கவிதையை இங்கு சமர்பிக்கிறேன்

னானி நண்பனே !

பெயரில்லாத பெயரை வைத்து, பதிவு
பயிர் வளர்க்க பின்னூட்ட உரம் தந்து
உயர்த்தும் அனானி நண்பர்களே!
துயர் வேண்டாம் உமக்கு !

பிறப்பதற்கு முன்பு எல்லோரும் அனானி !
இறந்த பிறகு எப்பவுமே அனானி !
கால ஓடையில் எல்லோரும் அனானிகளே !
காலத்தில் ஒரு நாள் கதவும் திறக்கலாம் !

கலங்காதே கண்மணியே !


அன்புடன்
கோவியார்

Wednesday, September 13, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பிம்பம்...! (கவிதை)


எதோ ஒன்றை சாதித்தற்காக
குரூரப் புன்னகையுடன்
கண்ணாடி முன் நின்றேன் !

பிம்பம் வாய்விட்டு சிரித்தது !
திடுக்கிட்ட நான் கேட்டேன்,
என்ன சிரிக்கிறாய் ?
நான் செய்தது சாதனை இல்லையா ?

கேலியாக மெல்லச் சிரித்தது,
நீ செய்தது சாதனை அல்ல
உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வது !

என்ன சொல்கிறாய்,
எனக்கொன்றும் புரியவில்லை ?
நல்லவன் போல் வேடமிட்டு
உள்ளுக்குள் ஒன்றும், வெளியில் வேறாக
நீ செய்த காரியத்தில்
உனக்கு மகிழ்ச்சியா ?

அதிர்ந்து போனேன் நான் !
இது எப்படித் தெரியும் உனக்கு ?
உன்னுடனே இருக்கும் எனக்கு தெரியாதா
உன் மனது ?
என்னையும் ஏமாற்ற முயலாதே !
என்றது பிம்பம் !

தலைகுனிந்தேன் நான் !
என்னை நிமிர்ந்து பார்க்கச் சொல்லி
முகத்துக்கு நேராக சொன்னது,
நல்லவன் போல் வேடமிட்டு,
நல்லகாரியம் செய்வதுபோல்
காட்டிக் கொள்ளும் நீ,
உண்மையிலேயே நல்லவனாக மாறினால்
செய்வது என்றுமே நல்லகாரியமாக இருக்குமே,
உன் குரூர புன்னகைக்கு பதில்
மனதில் நிறைவான மகிழ்ச்சி இருக்குமே !

கேட்டுவிட்டு அமைதியானேன் நான்,
பிம்பம் என்னுள் கலந்துவிட்டது,
மனது நிறைவதை உணர்ந்தேன் !

Tuesday, September 12, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

சோம்பேறி பையன் (தேன்கூடு போட்டி) !

நான் சுமாரகப் படிப்பவன் தான், எதிலும் அக்கறை செலுத்தாமல் சோம்பேறியாகவே தான் இருந்தேன்.

"டேய் சோம்பேறி" என்று எங்காவது யாராவது யாரையாவது கூப்பிட்டால் நான் தன்னிச்சையாக திரும்பி பார்த்துவிடுவேன். அந்த அளவு அந்த பெயர் என்னுடன் ஒட்டி உறவாடியது.

சோம்பேறி என்ற அடைமொழி மட்டுமின்றி, தாழ்வு மனப்பான்மையில் நான் இருந்தேன் என்பது எனக்கு திருமணம் ஆகும் வரை தெரியவில்லை.
திருமணம் முடிந்து ஒரு வாரத்தில், என்னைப் பற்றி புரிந்து கொண்ட மனைவி கமலா,

"உங்களால சாதிக்க முடியுங்க..." என்றால் மென்மையாக

"என்னமோ நீதான் சொல்றே.. எனக்கு நம்பிக்கை இல்லை"

"இங்கே பாருங்க... நாளையிலிருந்து நான் சொல்றபடி கேளுங்க..."

"சொல்லுமா ..." வேண்டா வெறுப்பாக சொன்னேன்

அன்றைக்கு சாயங்காலமே, என்னை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்குச் சென்று நல்ல விதமான ஆடைகைளை வாங்கினாள்

"ஒரு மனுசனுக்கு முக்கியம் தோற்றம் தாங்க..."

"ம்"

"நல்லா நீட்டா டிரஸ் பண்ணினால், ஒரு பெருமிதம் வரும், அப்பறம் பொறுப்பு வரும்"

"ம்"

அவள் சொல்லியபடி, அவள் எடுத்துவைக்கும் ஆடைகளை அணிந்து அலுவலகம் சென்றுவர ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் என்னை ஒரு மாதிரியாக கிண்டல் செய்தவர்கள், பின் உடைகளின் தேர்வுகளைக் குறித்துப் பாராட்டினார்கள். முதல் முறையாகப் வெளியில் இருந்து பாராட்டு என்னை கொஞ்சம் மாற்றியது. அதன் பிறகு நேர்த்தியாக இன்சர்ட் பண்ணி உடைகள் அணிய ஆரம்பித்தேன்.

"என்னங்க, உங்களுக்கு தெரியாத விசயம் ஒன்னுமே இல்லை, ஆனால் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவேண்டாம் என்று நீங்கள் தயங்குகிறீர்கள் ..."

"ம், முந்திரிக் கொட்டைன்னு எல்லாம் சொல்லுவார்களே ...!"

"தயக்கத்தைவிடுங்கள், நாலு பேருக்கு மத்தியில் நாம் பேசும் போது, தெரிந்ததைச் சொல்வதற்கு என்ன தயக்கம் ?" கையை அன்பாகப் பற்றிக் கொண்டு கேட்டாள்

"ம்..."

"ஒண்ணும் தெரியாதவங்க தெரிந்தது போல் முந்திக் கொண்டு பேசுவதைத்தான் முந்திரிக் கொட்டை என்று சொல்லுவார்கள், உங்களுக்கு இருப்பது தாழ்வு மனப்பான்மை, அதை விடுங்க " என்றாள் ஆதரவாக

"ம், முயற்சி பண்ணுகிறேன்...கமலா !"

மறுநாள் அலுவலகத்தில் ஒரு முக்கிய மீட்டிங்கில் எல்லோரும் முடிவெடுக்க தயங்கிய விசயத்தில் மெல்ல தயங்கி தயங்கி நான் விளக்கிச் சொல்லிய முடிவால், அலுவலகத்தில் ஒரு நல்ல ப்ராஜக்ட் பற்றிய தெளிவு பிறந்தது.
மேனேஜர் கூப்பிட்டு,

"மிஸ்டர் மனோ, இந்த ப்ராஜக்ட் பற்றி இவ்வளவு நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க, இதை நீங்களே ஹேண்டில் பண்ணினால் தான் சரியாக முடிக்க முடியும் என்று நினைக்கிறேன், இதை புரோசீட் பண்ணுங்க" என்று கைக் குளுக்கினார்.
என்னிடம் அந்த ப்ராஜக்ட் ஒப்படைக்கப்பட்டது.

முதல் முறையாக எனக்கு மிகப் பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டதை நினைத்து பெருமிதம் வந்தது. அந்த ப்ராஜக்டை நல்ல முறையில் செய்து பாராட்டு பெறவேண்டும் என்று பொறுப்புணர்வு எனக்கு ஏற்பட்டு, அது சமபந்தமாக முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றிகரமாக முடித்தேன்.

அதன் பிறகு அடுத்தடுத்து ப்ராஜக்ட்டுகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது, நான் எப்பவுமே எதிர்பார்க்காத கார், வீடு என என் வசதிகள் கூடிக் கொண்டே போனது. என்னை சாதரணமாகப் பார்த்தவர்கள் கூட நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தனர். என் பழக்க வழக்கங்களில் மிடுக்கு தெரிவதாக சிலர் வெளிப்படையாகவே பாராட்டினர்.
ஒரு நாள் தூங்குவதற்கு முன்பு,
"ஏங்க, உங்களுக்கு இவ்வளவு திறமை இருக்கிறப்ப நாம ஏன் பிஸ்னஸ் ஆரம்பிக்கக் கூடாது ?" என்று கேட்டாள் மனைவி கமலா

"ம், பண்ணலாம் அதுக்கு திறமை மட்டுமே போதாது, வேலை வாங்கும் திறமையும் இருக்கவேண்டும், தேடித் தேடி பிஸ்னஸ் பிடிக்கவேண்டும் ..."
தயங்கி சொன்னேன் நான்

"நீங்கள் சொல்வது சரிதான், பிஸ்னஸ் ஆரம்பித்து கொடிகட்டிப் பறக்கிறவர்கள் எல்லோரும் எல்லாவித அனுபவமும் பெற்று வருவதில்லை, பிஸ்னசில் நுழைந்த பிறகே சில புதுவித அனுபவம் கிடைக்கும், முதல் போட்டால் லாபம் எடுக்கவேண்டும் என்ற உணர்வு எல்லாவற்றையும் திறம்பட செய்யதுவிடும்...!" தலையை மென்மையாக வருடியபடி சொன்னாள்

அவளுடைய பேச்சு நம்பிக்கை கொடுத்தாலும், தயங்கிய படி

"சரி, செஞ்சு பார்ப்போம் " என்றேன்

கமலா எண்டர்ப்ரைசஸ் என்று முதலில் ஆரம்பித்த நிறுவனம் சூடுபிடிக்க ஒருவருடம் ஆகியது,

"சப் காண்டரக்டரிடம் கொடுக்கும் வேலையை ஏன் நாமே, இன்னுமொரு கம்பெனி ஆரம்பித்து செய்யக் கூடாது ? நான் வேண்டுமானால் புதுக் கம்பெணியை பார்த்துகொள்கிறேன், குழந்தைகள் தான் பெரியவர்கள் ஆகிவிட்டார்களே" என்றாள்

"ம்.அதுவும் நல்ல யோசனைதான் ..."

"ஆமாங்க, நமக்கு தேவையானது மட்டும் அல்லாமல், மற்ற கம்பெனிகளுக்கும் ஆர்டர் எடுத்துச் செய்யலாமே" என்று சொன்னாள்

பிஸினஸ் விரிவடைந்தது, தொழில் அதிபர் என்ற பட்டம் பின்னால் ஒட்டிக் கொண்டது

என்னை ஆரம்பத்தில் கேலி பேசியவர்கள் என்னிடமே வேலை கேட்டு வந்தார்கள்.

இப்பொழுதெல்லாம் சக்ஸஸ்புல் பிஸ்னஸ் மேன் என்று என்னைக் கைக்காட்டுகிறார்கள்

என் மனைவி என்மீது நம்பிக்கை வைத்து படிப்படியாக என் காலடியில் அமைத்த ஏணி என்னை உயரத்தில் கொண்டு நிறுத்தியிருந்து.


மெசேஜ் : திறமையானவர்கள் முன்னுக்கு வருவது சாதாரண விசயம். ஆனால் சோம்பேறிப் பையன்களை சுறுசுறுப்பு மாமன்னர் ஆக்குவது பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களால் தான் முடியும், சோம்பேறிப் பையன்களின் திறமைகளை அடையாளம் காணுவது என்பதும் தன் சோம்பேறிக் கணவரை விட்டுக்கொடுக்காமல் உயர்த்துவதும் ஒரு மனைவியால் மட்டுமே முடியும்.

முடிவாக... உற்சாகப்படுத்தி நம்மை உயர்த்துபவர்கள் நம்மீது உண்மையான அக்கறை கொண்டவர்களாக இருந்தால் மலையும் எந்த சோம்பேறிக்கும் மடுவாகும் !

Monday, September 11, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பசி ... ! (கவிதை)


கருப்பையின் இருப்பு துண்டிக்கப்படும் போது
முதன் முதலாக,
விழித்துக்கொண்டு வீறிடச்செய்கிறது பசி !
அன்று ஆரம்பித்து,
தேடலின் மையமாக,
ஒரு குழந்தையின் ஆர்வத்தை போல் தோன்றி
கல்லரையை அடையும் வரை
வாழ்க்கை முழுவதும் நீள்கிறது பசிகள் !

குழந்தைப் பருவத்தில் விளையாட்டாகவும்,
இதயத்தின் ஓசையில் காதலாகவும்
இளமையின் துடிப்பில் காமமாகவும்
உறவுகளின் அணைப்பில் அன்பாகவும்,
துன்ப வேளைகளில் நட்பு நாடியும்,
முதுமைப் பருவதில் ஓய்வை வேண்டியும்,
வெவ்வேறு உணர்வுகளாய் பசிகள் !

இந்தப் பசிகள்,
மறுக்கப்படும் போதும்
மறக்கப்படும் போதும்,
மறைக்கப்படும் போது,
ஒழுங்கு படுத்தாத போதும்,
பசிப்பிணிகள் தொற்றிக் கொண்டு
வாழ்வை வேரறுக்கின்றன.

Sunday, September 10, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உலகநாயகனின் தசவதாரம் பகுதி 3: (காமடி)

பகுதி 1*/*பகுதி 2*/*பகுதி 3*/*பகுதி 4


ரவி : நம்ம லெபனான் போகப் போறோமா ?

கமல் : இல்லை அது தலிபான்காரங்களுக்கு பின்லேடன் வேசம் போட்டிருக்கும் நாடகநடிகர் எஸ்கேப் ஆக செய்யும் தந்திரம், அதைக் கேட்டுவிட்டு அவர்கள் கலைந்து செல்கின்றனர்

ரவி : ம்

கமல் : மறுமடியும் ஏர்கோஸ்டஸ் மாமி ப்ளைட்டை கிளப்புறாங்க

ரவி : ஏர்கோஸ்டசுக்கு ப்ளைட்டை எப்படி டேக் ஆப் பண்ணறதுன்னு தெரியுமா ?

கமல் ; இதை நீங்க கேட்பிங்கன்னு தெரியும், அதனால காக்பிட்டில் இருக்கும் 30 நிமிடத்தில் நீங்களும் பைலட் ஆகலாம் என்ற புத்தகத்தை ஏர்கோஸ்டஸ் மாமி படிக்கிறதா நீங்க 2 சாட் இதுக்கு முந்திய காட்சியில் அதாவது டேக் ஆப் ஆகும் முன்பு வைக்கனும்

ரவி : அப்படி ஒரு புத்தம இருக்கா ?

கமல் : என்ன அப்படி கேட்டுட்டிங்க, பாலாஜி பப்ளிகேசனில் இல்லாதா புத்தகாம... அப்படி இல்லையென்றால் படம் பட்ஜட்டோ சேர்த்து நாமளே பிரிண்ட் பண்ணிடுவோம்

ரவி : ப்ளைட் கிளம்புது...ம்

கமல் : இந்த தடவை ஏர்கோஸ்டஸ் சரியாக டெல்லி ஏர்போர்டில் கொண்டுவந்து நிருத்துறாங்க

ரவி : ம்

கமல் : அப்போ ஏற்கனவே இதுபற்றி தகவல் தெரிந்ததால் இந்திய ராணுவம் ப்ளைட்டை சுத்தி நிக்குது

ரவி : திடீர் திருப்பம், இப்ப ப்ளைட்டில் இருப்பது ஜார்ஜ் புஷ்சா அல்லது பின்லேடனா ?

கமல் : இங்கேயும் சஸ்பென்ஸ்

ரவி : ஆவலை அடக்க முடியவில்லை சொல்லுங்கள்

கமல் : வேசத்தை கலைத்துக் கொண்டு இருப்பவர் நாடக நடிகர்

ரவி : இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை, ஜார்ஜ் புஷ் என்ன ஆனார் என்று இந்திய அரசாங்கம் கேள்வி கேட்காதா ?

கமல் : இங்க தான் நாடக நடிகர் தன்னோட ஹீரோ இசத்தை வெளிப்படுத்துகிறார்

ரவி : எப்படி ? எப்படி ?

கமல் : அதாவது ஹீரோ சொல்றார்... பின்லேடன் ஆளுங்களுடன் ஆப்கானில் சண்டையிட்டு புஷ்சைக் காப்பாற்றி அமெரிக்க ராணுவத்திடம் தான் ஒப்படைத்துவிட்டு திரும்புவதாக

ரவி : சபாஷ் !

கமல் : அப்பறம் ஏர்கோஸ்டசும், ஹீரோவும் டெல்லி பார்க் ஷரடனில் தங்க வைக்கப்படுறாங்க

ரவி : அதோட கதை முடிந்ததா

கமல் : இல்லை இன்னும் 4 வேசம் பாக்கியிருக்கே... ! இதையும் கேளுங்க

ரவி : தூக்கம் வருது... இதோட 6 ஆச்சு

கமல் : அதுதான் அப்பவே சொன்னேனே ஆறுவேசம் முடிஞ்சிடிச்சு...

ரவி : இது அது அல்ல , பெக்கோட கணக்கு

கமல் : இன்னிக்கு முழுக்கதையும் கேட்காம தூங்கக் கூடாது... அப்பறம் எனக்கு கதைசொல்ற கண்டினியுட்டி கெட்டுடும்

ரவி : மனதுக்குள் 'தலையெழுத்தை யாரால மாத்தமுடியும்' ம் சொல்லுங்க

கமல் : புஷ்தான் பார்க் ஷரடனில் இருக்கிறார் என்று நினைத்து ஒரு காஷ்மீர் தீவிரவாதி அங்கே கோபி அன்னான் வேசத்தில பார்க் ஷரடனில் சைரன் வச்ச காரில் வந்து இறங்குகிறான்

ரவி : கோபி அன்னான் வேசம் யாரு போடப் போறது வடிவேலுக்கு கொடுத்துடுவோமா

கமல் : அவரு இப்ப ஹீரோ அவருக்காக இந்த கேரக்டர் நான் கிரியேட் பண்ணலை... இது எனது ஏழாவது வேசம்

ரவி : நான் சற்றும் யோசிக்கவில்லை

கமல் : நான் யோசித்தேன்

ரவி : சொல்லுங்க

கமல் : எப்படியோ நாடக நடிகர் இருக்கும் ரூமுகுள்ள கோபி.அன்னான் நுழைஞ்சிடுறார்

ரவி : அவருக்கு ஏமாற்றமாக இருக்குமே

கமல் : ஆமாம்.. அதிர்ந்து நிற்கிறார்... ஆனால் வந்திருக்கிறது போலி கோபி.அன்னான் என்று ஏர்கோஸ்டஸ் மாமி கண்டுபிடிச்சுடுறார்

ரவி : எப்படி உங்களுக்குதான் வேசம் கரெக்டா செட் ஆகியிருக்குமே

கமல் : இங்க ஒரு சின்ன இடரல் இருக்கு

ரவி : என்னது

கமல் : அதாவது அந்த தீவிரவாதி கோபி.அன்னானோட 40 வயசு போட்டாவை வச்சு அதே போல மேக்கப் போட்டுக்கொண்டுள்ளார்... இதை மாமி சரியாக கண்டுபிடிச்சிடுறாங்க

ரவி : சூப்ப்ப்ப்ர்

கமல் : ஆமாம் ரவி ... கோபி.அன்னான் மேக்கப் போடும் போது இப்ப
கோபி.அன்னானுக்கு இருப்பதைவிட கொஞ்சம் நரைமுடி கம்மியாக வைத்து மேக்கப் போடனும், இது அந்த மாமிக்கு க்ளுவா அமைச்சிடுது

பகுதி 4 தொடரும் ...!

Friday, September 08, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உலகநாயகனின் தசவதாரம் பகுதி 2: (காமடி)

பகுதி 1*/*பகுதி 2*/*பகுதி 3*/*பகுதி 4

முன் குறிப்பு : பகுதி 1ஐ படித்தவர்கள் பலர் (?) ... படத்தின் கதாநாயகிகள் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்கிறார்கள். கதாநாயகிகளைப் பற்றிய கதையின் விவாதங்கள் கடைசிப் பகுதியில் நிச்சயம் வரும்... இனி பகுதி 2 தொடர்ச்சி ...
ரவி: அடுத்து கதையை எப்படி நகர்த்தப் போறிங்க கமல் சார் ... திரில்லர் ஸ்டைலில் இருக்கு !

கமல் : இப்பதான் அந்த திருப்பம் நடக்குது... நல்லா கேட்டுக்குங்க

ரவி : சொல்லுங்க சொல்லுங்க கமல் சார்

கமல் : அந்த ஏர்கோஸ்டஸ் மாமிக்கு ப்ளைட்டை சரியாக திருப்பத் தெரியலை...ப்ளைட் மேலும் கீழும் ஆடுது... டெல்லி தாண்டி ... பராளுமன்றதின் மேல் வட்டம் அடிக்குது.. அப்பறம் ...தாஜ்மகாலை ஒரு ரவுண்ட் அடிக்குது .... எல்லோரும் ஆகாயத்தைப் பார்த்துக்கிட்டே ஓடி வர்றாங்க ... இங்க இங்கிலிஸ் படம் எபெக்ட் இருக்கனும்... அப்பறம் ப்ளைட் எவரெஸ்டை ஒரு ரவுண்ட் அடிக்குது... அதுக்குள்ள பெட்ரோல் தீந்து போரதால .... திடீர் திருப்பம் ... ஏர்கோஸ்டஸ் என்னமோ செய்து அருகில் உள்ள ஆப்கானுக்குள் போயிடுராங்க.. !

ரவி : வாவ் கிரேட் ... திரில்லிங் திரில்லிங் !

கமல் : ஜார்ஜ் புஷ் ப்ளைட்டுக்குள் இருப்பது எப்படியே பின்லேடன் ஆளுங்களுக்கு தெரிஞ்சிடுது... ஏவுகனையால குறிவச்சி எச்சரிக்கிறாங்க... உடனே ஏர்கோஸ்டஸ் மாமி பக்கத்தில் உள்ள கண்டகார் ஏர்போர்டில் லாவகமாக தரையிறக்கிராங்க !

ரவி : நம்ம கண்டகார் போய் சூட்டிங் பண்ணனுமா ... விபரீதமாகபடுது... கேரளா இஞ்சினியரை நினைச்சிப் பாருங்க கமல் சார் ... நெனச்சாலே நடுங்குது !

கமல் : அவ்வளவு தூரம் போகவேண்டாம் ஜெய்ப்பூர் பக்கத்தில் ஏதாவது இடத்தில் என்னோட விக்ரம் படத்துக்கு போட்டது போல் செட் போட்டு எடுத்துக்கலாம்.. முதலில் கதையை முழசா கேளுங்க !

ரவி : ம் எனக்கு உயிர்பயம் வந்துடுச்சி .. மண்ணிச்சிக்குங்க கமல் சார்.. கதையை சொல்லுங்க

கமல் : இப்ப ப்ளைட்டை சுத்தி தலிபான் காராங்க முகமூடியோட நிக்கிறாங்க.. ஜார்ஜ் புஷ்சை ஒப்படைக்கனும் னு சொல்லி துப்பாக்கியால வானத்தை நோக்கி சூட்டுக் எச்சரிக்கிறாங்க... !

ரவி : ம் ... நடுக்கமாக இருக்கு...!

கமல் : பேச்சு வார்த்தை நடத்த ஆள் இல்லாததால் ஏர்கோஸ்டஸ் மாமியே வந்து பேச்சு வார்த்தை நடத்துது... அப்பறம் அது போய் ப்ளைட்டுக்கு உள்ளே உள்ள ஜார்ஜ் புஷ்ஷுக்கிட்ட என்னமோ பேசுது... !

ரவி : ம் ... அருமை

கமல் : அவரு மாமிகிட்ட காதில் கிசு கிசுக்கிறார் ... இங்க தான் ஒரு சஸ்பென்ஸ்

ரவி : ஜார்ஜ் புஷ்சே வந்து தலிபான்காரன்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தப் போறாரா ?

கமல் : அதுதான் இல்லை ... அந்த ஏர்கோஷ்ட்ஸ் மாமி வந்து தலிபான்காரங்களிடம் 30 நிமிசம் டைம் கேட்குது

ரவி : ஏன் ஜார்ஜ் புஸ் குளிச்சிட்டு வர்ரேன்னு சொன்னாரா ?

கமல் : அதெல்லாம் இல்லை... அவுங்க ஒத்துக்கிறாங்க .... அங்க ஒரு குத்தாட்டம் வெச்சு அரை மணிநேரம் டைம் போறதைக் காட்டனும் ... ரகசியாவையோ, பிபாசாவையோ யாராவது ஒருவரை போடுங்கள்.

ரவி : ம் ...

கமல் : பாட்டு முடிந்ததும் ... பளைட் கதவை திறந்து கொண்டு பின்லேடன் குதிக்கிறார்... !

ரவி : சஸ்பென்ஸ் தாங்கவில்லையே எப்படி எப்படி ?

கமல் : அங்க தான் நீங்க யோசிக்கனும்... இங்க ஜார்ஜ் புஷ்சா நடிக்கிறவர் ஏற்கனவே பின்லேடனா வேசம் போட்டவர்... புஷ் வேசத்தை கலைச்சிட்டு அவரே தான் அரை மணி நேரத்தில் பின்லேடன் வேசம் போட்டுகிட்டு வருகிறார்.

ரவி : இதை நான் யோசிக்கவே இல்லை.

கமல் : ரவி நீங்க பீல்டுக்கு வந்து 15 வருசம் தான் ஆவுது... நான் பொறந்ததிலிருந்து இதில தானே இருக்கேன்.. அதான் தடாலடியாக யோசிக்க முடியுது

ரவி : நீங்க பிறவிக் கலைஞன் கமல் சார்

கமல் : தாங்க்ஸ் ... இங்க கதையில் ஒரு முக்கிய விசயம் என்னவென்றால் அந்த பின்லேடன்
வேசம் போட்டிருக்கப்ப ஆப்கான் பாசையான பழங்குடியினர் பாசையைப் பேசனும்... இதுக்காக ஒரு ஆறுமாசம் பயிற்சி எடுக்கனும் ... ஆப்கானில் இருந்து பாசைக் கத்துக் கொடுக்க இப்பவே ஒரு ஆள் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிறேன்.

ரவி : ம் நீங்க தான் பர்பெக்ஸனில் குறைவைக்காதவர் ஆயிற்றே... சபாஷ் !

கமல் : அதே தான்.. இப்ப பின்லேடனா வேசம் போட்டு இருக்கிற நாடக நடிகர் பழங்குடியினர் பாசையை அட்சரம் பிசகாமல் பேசி தலிபான்காரங்களை தான் தான் பின்லேடன் என்று நம்ப வைத்துவிடுகிறார்

ரவி : ம் தமிழ் சப் டைட்டில் வச்சிடுவோம்

கமல் : அப்படி அவர் என்ன பேசினார் என்று கேட்கவில்லையே ?

ரவி : அதான் சொல்லப் போறிங்களே ?

கமல் : எப்படி தெரியும் ?

ரவி : இப்பதான் சொன்னிங்களே மறந்திட்டிங்களா ?

கமல் : ஹ ஹ் ஹா ... இது ஒளவை சண்முகி டைலாக் ... சரி சீரியசாக கேளுங்க ... அதாவது
பின்லேடன் ... ஜார்ஸ் புஷ்ஸை ப்ளைட்டுக்குள் கட்டிப் போட்டு வைத்திருப்பதாகவும் ... அவரை வைத்துக் கொண்டு தானே லெபனான் இதே ப்ளைட்டில் போகப் போறதாகவும்... ஐநா கோபி அன்னானுடன் பேசி அமெரிக்காவில் இருக்கும் ஈராக் படைகளை வாபஸ் வாங்கும்வரை புஷ்சை பிணைய கைதியாக வைத்திருப்பதாகவும் சொல்கிறார்

ரவி : மூச்சி வாங்குது...

கமல் : இதுக்கே மூச்சி வாங்கினால் எப்படி இன்னும் 4 வேசம் பாக்கி இருக்கே

ரவி : சரி ... கதையை சொல்லுங்க

பகுதி 3 தொடரும் ...!

Thursday, September 07, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உலகநாயகனின் தசவதாரம் பகுதி 1: (காமடி)

வேட்டையாடு விளையாடு படத்தை எல்லோரும் பிச்சி போட்டுவிட்டதால் ... கமலின் அடுத்த படமான தசவாதரத்துக்கு தாவுகிறேன்.


தயாரிப்பாளர் தாணு யாருன்னு தெரியும் தானே ஆளவந்தான் எடுத்து ஆட்டம் கண்டவர். அவரு ஒரு ரகசிய கேமரா மூலம் கேஎஸ்.ரவிகுமார் - கமல் கூட்டணியில் உருவாகும் தசாவதாரம் பற்றிய கதை விவாதத்தினை பதிவு செய்துவிடுகிறார். அந்த கதையை வச்சு தல அஜித்தையோ, சீயான் விக்ராமையோ போட்டு அதே கதையை எடுத்து கே.எஸ்.ரவிகுமார் - கமல் படம் வருவதற்குள் ரிலிஸ் பண்ணி ஆளவந்தானில் போட்ட பணத்தை எப்படியும் மீட்டுவிட வேண்டும் திட்டம் தீட்டுகிறார். இந்த விசயம் திருட்டு விசிடி (திருட்டு விசிடியின் திருட்டு விசிடி) எப்படியோ வெளியில் கசிந்து எனக்கும் வந்துவிட்டது.

அப்பறம் என்ன நம்ம காதுக்கு வந்துச்சின்னா உங்களிடம் சொல்லாமல் விடமுடியுமா ? உஷ் ...ரகசியம் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

மேலே உள்ளது முன் குறிப்பு டிஸ்கி, இனி நேரா கதை டிஸ்கஷன் தான் !

உலகநாயகனின் தசவதாரம் பகுதி 1:

இடம் : அடையாறு பார்க் ஷரட்டன், மேல்மாடி (மாதிரி தெரியுது)
கேமரா தெளிவாக இல்லை, ஆடியோ குரல் பேசுவது கே. எஸ் ரவிக்குமார், உலக நாயகன் கமல் என்று தெரிகிறது.


கே.எஸ்.ரவிக்குமார் : கமல் சார் வே.வி நல்லா போகுது !

கமல் : ஆன படத்துல ஏதோ ஒரு குறை இருக்கு

ரவி : அப்படின்னு சொல்றிங்க ?

கமல் : எனக்கு குறைன்னு தெரியுது, ஆனால் என்னான்னு தெரியல, உங்களுக்கு எதேனும் ?

ரவி : ஆங், புரிஞ்சிடுச்சி !

கமல் : அப்படியா என்னனு சொல்லுங்க !

ரவி : உங்க முகத்தை சிதைக்காம முழுசா வச்சி இருக்கிங்க !

கமல் : ஓஓஒ ஆமாம் ரவி .. சரியா சொல்றிங்க !

ரவி : கவலையை விடுங்க ... கமல் சார் ...! நம்ப படத்திலதான் 1க்கு 10 ஆக வேசம் கட்டப் போறிங்களே !

கமல் : ரவி..! இதுவரையில் வராத வேசமா இருக்கனும் !

ரவி : நீங்க தான் எல்லாமே பண்ணிட்டிங்களே கமல் சார் !

கமல் : இன்னும் இருக்கு ரவி !

ரவி : சொல்லுங்க கமல் சார்

கமல் : பின்லேடன் வேசம், வீரப்பன் வேசம் எல்லாம் விட்டு வச்சிருக்கேனே

ரவி : அதெல்லாம் சரிதான்... ஆனா கதைக்கு ஒட்டனுமே

கமல் : முகத்துக்கு ஒட்டினா போதும் கதைக்கு ஒட்டவச்சிடலாம் !

ரவி : கமல் சார்... ஒங்க முகத்துக்கு ஒட்டாததா ? கோபி அன்னான் வேசம் போட்டாக் கூட பொருத்தமாகத் தான் இருக்கும் 1

கமல் : 10 வேசத்துக்கும் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்.

ரவி : சொல்லுங்க கமல் சார்

கமல் : கதைப்படி கதாநாயகன் ஒரு நாடக நடிகர்.

ரவி : இருங்க பெக்கை புல் பண்ணிக்கிறேன் ....ம் சொல்லுங்க

கமல் : அவரு தீவிரவாதம் பற்றிய விழிப்புணர்வுக்காக பின்லேடன் வேசம் கட்டுகிறார்

ரவி : இது நல்ல தீம்

கமல் : அவரு கெட்டப்பை பார்த்து, அமெரிக்க தூதரகத்தில் வேலைப் பார்க்கிற பிராகஷ் ராஜ், நிஜம் பின்லேடன் என்று நினைத்து FBI க்கு தகவல் கொடுத்துவிடுகிறார்

ரவி : இன்டரஸ்டிங்

கமல் : இதைக் கேள்விப் பட்ட ஜார்ஜ் புஷ்... உடனே இந்தியாவுக்கு புரப்பட்டு வரனும்னு துடியா துடிக்கிறார்.

ரவி : அப்ப இன்னும் ஒருதர அமெரிக்கா போய் சூட்டிங் எடுக்கனுமா?

கமல் : அது தேவையில்லை, டிவியில் வரும் நிஜ புஷ்க்கு டப்பிங் பேசி சமாளிச்சிடலாம்

ரவி : அடுத்து ?

கமல் : FBI லிருந்து ஜார்ஜ் புஷ்சை அது ஆபத்து எண்று எச்சரிக்கிறாங்க... அதனால அமெரிக்க உளவுத்துறை ஜார்ஜ் புஷ¤க்கிட்ட ஒரு யோசனை தெரிவிக்கிறாஙக்

ரவி : கதை பிரமாதாம இருக்கே, சொல்லுங்க சொல்லுங்க

கமல் : அதாவது உங்க கெட்டப்புல நடிக்கிறத்து தமிழ் நாட்டில் ஒரு நாடக நடிகர் இருக்கிறார். அவரை ஜார்ஜ் புஷ் வேசம் போட சொல்லிடலாம். வேசம் போட்டால் அவரு அச்சு அசலாக உங்கள மாதிரியே இருப்பாருன்னு ஜார்ஜ்புஷ்சை ஏத்திவிடுராங்க.

ரவி : வெர்ரி இன்டரஸிடிங்... இன்னுமொரு பெக்

கமல் : ம் வேணாம்னு சொன்னால் கேட்கவா போறிங்க... ம் கதையை கேளுங்க ... அதனால் அமெரிக்க உளவுத்துரை நாடக நடிகரான என்னிடம் வந்து பேசுறாங்க, நான் ஜார்ஜ் புஷ் வேசம் போட்டு பார்க் ஷரட்டினில் தங்கி இருக்கிறேன்.

ரவி : வாவ் !

கமல் : இதை மோப்பம் பிடித்த அல்லும்மா தீவிரவாதி ஒருத்தன் ஜார்ஜ் புஷ்சை கடத்தனும் என்று திட்டம் தீட்டுகிறான்.

ரவி : அதுக்கு எந்த நடிகரைப் போடலாம் ? நாசரைப் போடலாமா ?

கமல் : ரவி நாசர் என் படத்தில் நடிக்க வேண்டும் என்று விதி இருக்கு.. ஆனா அவருக்கு வேற வேசம் வெச்சிடுங்க... தீவிரவாதி வேசம் போடறதும் நான் தான்.. இது மூனாவது வேசம்

ரவி : ச்சே எனக்கு இந்த யோசனை தெரியாமல் போயிடுச்சே... முனாவது பெக் எடுத்துக்கிறேன்

கமல் : ஆமாம் அவன் கடத்த வர்றப்ப அங்கு நான் டபுள் ஆக்ட் ... நீங்க டபுள் ஆக்ட் சீன் வைக்கனும்

ரவி : வெச்சிடுவோம்... அப்பறம்

கமல் : அவன் ஜார்ஜ் புஷ்சை கடத்தியது ... இந்திய CBI காரங்களுக்கு தெரிஞ்சிடுது

ரவி : வாவ் கதை நன்றாக திரும்புகிறதே

கமல் : இன்னும் கேளுங்க !

ரவி : ம்

கமல் : தீவரவாதியை மடக்கி பிடிக்கும் CBI ஆபிசாராக இன்னுமொரு வேசம் ... அதையும் நான் தான் போடுகிறேன்

ரவி : சூப்பர் .. நீங்க போடாத வேசம்

கமல் : கடத்தல் சீனில் CBI துறத்தலும் சேர்ந்து கொள்கிறது ... அங்கு இந்த மூனு வேசத்தையும் மாறி மாறி நீங்க சூட் பண்ணனும்

ரவி : செஞ்சிடலாம் ... மூனும் கவராவது போல் லங்சாட் வச்சிடுவோம்

கமல் : அப்படியே சேசிங் சீன் ஏர்போர்டில் போய் நிக்குது, தீவிரவாதி ஜார்ஜ் புஷ்சைக் இழுத்துக் கொண்டு தயாராக நின்ற பிளைட்டில் ஏறிவிடுகிறான்

ரவி : அங்கு பைலட் வேசம் போடப் போறிங்களா?

கமல் : அங்க தான் நீங்க புரிஞ்சிக்கனும்... இங்கே இந்திய ஏர்லைன்சில் இருக்கும் ஒரு 50 வயது ஏர்கேஸ்டஸ் மாமி வேசம்... கொஞ்சம் அவ்வை சண்முகி டைப்பில் இருக்கும் அது 5 வது வேசம்

ரவி : வெர்ரி குட் .. நாலு முடிந்தது அஞ்சாவது பெக் எடுத்துக்கிறேன்

கமல் : அந்த ஏர்கோஸ்டசுக்கு இந்த கடத்தல் விசயம் தெரிஞ்சிடுது... பைலட்டை மிரட்டி தீவிரவாதி ப்ளைட்டை நேரிடையாக டெல்லிக்கு ஓட்டச் சொல்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் நடக்க பைலட் தாக்கப்பட்டு ப்ளைட் கன்ட்ரோல் இல்லாமல் பறக்குது

ரவி : ஹை ஜாக் எல்லாம் இருக்கா ... ம் (மனதுக்குள் ) தயாரிப்பாளரை ஆண்டவன் காப்பாத்தனும் ...!

கமல் : அந்த ஏர்கோஸ்டஸ் என்ன செய்யுறாங்க என்றால் தீவிரவாதி அசந்து இருக்கிற நேரமாபாத்து தொடைக்கு இடையில் பறந்துவந்து திரும்பி பின்னாங்காளால் நங்குன்னு இடிக்கிறாங்க... தீவிரவாதி அப்படியே அடிவயித்தை பிடிச்சிக்கிட்டு சரிந்துவிடுகிறான், ஏர்கோஸ்டஸ் ப்ளைட்டை காக்பிட்டில் உட்கார்ந்து ... லாவகமாக கன்ட்ரோலுக்கு கொண்டுவர்ராங்க

ரவி : அப்படியா ... லாஜிக் உதைக்கிதே ... ஏர்கோஸ்டஸ் எப்படி பைலட்டாக இருக்க முடியும்

கமல் : அதுக்கு ஒரு சின்ன ப்ளாஸ் பேக் வச்சிடுவோம்... ஆக நாடக நடிகரோட சேர்ந்து ஆறு வேசம் ஆயிடுச்சி...!
தொடரும் ...

பகுதி 1*/*பகுதி 2*/*பகுதி 3*/*பகுதி 4

Wednesday, September 06, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே !கர்ணனுக்கு பிறக்கும் போதே
உடலுடன் ஒட்டிப் பிறந்த கவச குண்டலம் போல்
உலகில் பிறக்கும் அனைவருக்கும்
பிறப்புடன் சேர்ந்தே ஒட்டிக் கொள்கிறதிந்த மதம் !

இந்தியர் அதிலும் பெரும் புண்ணியம் (?) செய்தவர்கள் !
பிறக்கும் அனைவருக்கும் இரு மூட்டைகள்
முதுகில் ஏற்றப்படுகிறது
ஒன்று மதம், மற்றொன்று சாதி !

முன்னேறவிடாமல் அழுத்துவது இந்த
மூட்டை என்று அறியாமல்
என் மூட்டைகளே உயர்ந்ததென்றும்,
என் மூட்டைகளும் தாழ்ந்ததல்ல வென்றும்
எந்த மூட்டையும் பாரமே யென்று கருதாமல்
மூட்டைகளை தூக்கிச் சுமப்பதில் நமக்குள்
ஆயிரம் சண்டைகள் !

மூட்டைக்குள் இருப்பதென்ன அறிவுப் புதையலா ?
அவையாவும் ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாக சேர்த்து வைத்த
அழுக்குகள் தானே !

மலம் சுமந்தவனும்,
மந்திரம் சொல்பவனும் மனிதனே !
அழுக்கு மூட்டைகளை
தூக்கி எறிந்துவிட்டு, நம் தோள்களை
தோழமைக்கு தோள்கொடுக்க
துடைத்து வைப்போம் ! வாருங்கள் !

Tuesday, September 05, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

வலைப்பதிவாளர்கள் சந்திப்பு (நகைச்சுவை) !பதிவர் 1 : மாபெரும் வலைப்பதிவாளர் சந்திப்பு என்று அறிவித்தும் 5 பேருதான் வந்திருந்தாங்களா ?
பதிவர் 2 : இருந்தாலும் அது மா பெரும் சந்திப்புதான்
பதிவர் 1 : எப்படி
பதிவர் 2 : வந்த ஐஞ்சு பேருக்கும் ஆளுக்கொரு மா ஏற்பாடு செய்துவிட்டோம். ஆதாவது மாம்பழம்

பதிவர் 1 : வலைப்பதிவாளர் சந்திப்பில் இந்த தடவை முக்கிய முடிவாக என்ன தீர்மானம் ?
பதிவர் 2 : வர வர பின்னூட்டம் குறைகிறதால் அனானி, மற்றும் அதர் ஆப்சனை அனைத்துப் பதிவர்களும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் வைத்திருக்கிறோம்
பதிவர் 1 : அப்ப போலிகள் தொல்லை இருக்குமே
பதிவர் 2 : போலி பின்னூட்டங்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு பரிசு ... இதுதான் இரண்டாவது தீர்மானம்

பதிவர் 1 : தனிமனித தாக்குதலைப் பற்றி என்ன நினைக்கிறிங்க ?
பதிவர் 2 : இதுக்காக இந்தியன் ஐட்டி ஆக்ட் ஒரு புதுச் சட்டம் கொண்டுவந்து சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து ஆயுள் தண்டனை வழங்க வழிசெய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்

பதிவர் 1 : வேறு எதாவது புதுத் திட்டம் இருக்கிறதா ?
பதிவர் 2 : ஏற்கனவே பதிவு எழுதி ஓய்ந்தவர்களின் பதிவை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இலவச பதிவு எழுதித்தரும் திட்டம் இருக்கிறது.

பதிவர் 1 : வலைப்பதிவாளர் சந்திப்பில் சிலர் கோஷ்டியாக செயல் படுவதாக குற்றம் இருக்கிறதே
பதிவர் 2 : இது வேண்டாதவர்கள் கிளப்பிவிடும் வீன் வதந்தி. அப்படி பட்டவர்களுக்கு இனி பதிவர் சந்திப்பில் அழைப்பு இருக்காது என்று எங்கள் குழு ஒட்டுமொத்தமாக தீர்மாணித்திருக்கிறது

பதிவர் 1 : இந்த வலைப்பதிவாளர் சந்திப்பு உங்களுக்கு திருப்தி இருந்ததா ?
பதிவர் 2 : என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். அதுக்காகத் தானே வயிற்றை காலியாக வைத்துக் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம், பத்துவகை உணவோடு சந்திப்பு திருப்தியாக அமைந்தது

பி.கு : நகைச் சுவைக்காக எழுதியது... யாரையும் தாக்குவதற்கு அல்ல ... படித்துவிட்டு சிரித்தால் போதும் ... உங்களின் அடுத்த சந்திப்பில் இதுபற்றி பேசி மகிழவேண்டும் என்பதே என் அவா.
தமிழ்மணம் கருவிபட்டை

தமிழ்மணம் நிர்வாகத்தினரின் பார்வைக்கு...!

தமிழ்மணம் சேவையை பயன்படுத்துவர்களின் நானும் ஒருவர் என்பதில் மகிழ்வடைகிறேன். தமிழ்மணம் தமிழ் வலைகள் இணைப்பில் தொடர்ந்து சாதனைப் படைத்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி

தமிழ்மணம் வலைப்பதிவுகளின் புள்ளிவிபரம்
மொத்தப் பதிவுகள்: 1196
கடந்த ஒரு மாதத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 3041
கடந்த ஒரு வாரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 717
கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 76
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள்: 101
பின்னூட்ட நிலவரம் காட்டப்படும் பதிவுகள்: 656
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள்: 891

இது மொழிவளர்ச்சியிலும், பதிவர்களின் எழுத்தாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்தது மட்டுமின்றி, பதிவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் தமிழ்மணத்தின் தமிழ் மொழிமீதான பங்களிப்பில் மாபெரும் சாதனையாகும்.

மேலும் நல்ல முன்னேற்றம் வந்து தமிழ்மணம் தனது இலட்சிய இலக்கை அடைய வேண்டும், எல்லோரும் பயனடைய வேண்டும் என்பதே எம் போன்றவர்களின் அவா. இடுகை பட்டியலிலும், மறுமொழிப் பட்டியிஅலிலும், சிறிது மாற்றம் கொண்டுவந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். இது புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கு நல்ல ஊக்கமாக அமையும் என்று கருதி சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1. தமிழ் மணத்தில் சுமார் 1200 வலைப்பூக்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக பதிய வருபவர்களின் வலைப்பூக்கள் இடதுபக்கம் சில நாட்கள் மட்டும் காட்டப்பட்டு மறைந்து விடுகின்றன. இதில் ஏற்கனவே வலைப்பதிவர்களின் புதிய வலைப் பதிவுகளும் அடக்கம்.

2. புதிதாக வலைப்பதிக்க வருபவர்களின் இடுகைகளும், மறுமொழிகளும் ஏற்கனவே உள்ள இடுகைப்பட்டியலிலும், மறுமொழிகள் பட்டியலிலும் வருவதால் புதிதாக வருபவர்களின் பதிவுகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்த முடியவில்லை.

3. புதிதாக வலைப்பதிப்பவர்களுக்கு தனியாக ஒரு இடுகை அமைப்பும் (அண்மையில் எழுதப்பட்டவை - coloumn), மறுமொழி இடுகை அமைப்பும் (அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் - coloumn) இருந்தால் புதிய பதிவர்களை கண்டுகொண்டு ஊக்கப்படுத்த ஏதுவாக இருக்கும்.

4. புதிய பதிவர்களின் புதிய பதிவுகளையும், மறுமொழி இடுகைகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அதாவது 1 அல்லது 2 மாதம் மேற்கண்ட புதிய இடுகை அமைப்பில் வெளியிடலாம்.

5. ஏற்கனவே உள்ள மற்ற பதிவர்களின் (ஒன்றுக்கும் மேற்பட்ட சில பதிவுகள் வைத்திருப்பவர்கள்) புதிய வலைப்பூக்களின் இடுகைகளையும், மறுமொழியையும் உள்ளிடுவதில் மாற்றம் தேவையில்லை.

மேற்கண்ட சிறு மாற்றத்தின் மூலம் புதிய பதிவர்களை உற்சாகப் படுத்தி அவர்களின் எழுத்தாற்றலை ஊக்கப்படுத்தவும், பாராட்டவும் நல்ல வழியாக அமையும் என்று கருதுகிறேன்.


தமிழ்மணம் நிர்வாகத்தின் ஒவ்வாத பதிவுகள் நீக்குதல் குறித்த செய்திகள் தொடர்பில் எழுதிய சில எண்ணங்கள் இங்கே

Monday, September 04, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

எனக்கு மட்டும் அல்ல ! [புதுக் கவிதை]

சோம்பல் முறித்து காலையில்
எழுந்ததும் பெட் காஃபி,
இட்டெலியுடன் புதினாச் சட்டினி,
அயர்ன் பண்ணி தயாராக வைத்த உடை,
டிபன் பாக்ஸில் தயாராக மதிய உணவு,
அவ்வப்போது தொலைபேசியில்
அன்பாக அழைத்து விசாரிப்பு,
மாலை வீடு திரும்பியதும்
காலுரைகளை கழட்டும் கைகள்,
மென்று கொண்டே தொலைக் காட்சிப் பார்க்க
சிற்றுண்டியுடன் காஃபி,
அற்றாட செய்திகளை பற்றி
செய்தித் தாள்களில் ஒரு அலசல்,
இரவு தயாராக இருக்கும் உணவு
இத்தனையும்
தானும் வேலைக்குச் சென்று,
குடும்பத் தலைவியையும் வேலைக்கு அனுப்பும்
கணவர்களுக்கு கிடைக்குமா ?

பி.கு: இது நேற்றைய கவிதையின் தொடர்ச்சி

Sunday, September 03, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

எனக்கு மட்டும் ? [புதுக் கவிதை]

சோம்பல் முறித்து காலையில்
எழுந்ததும் பெட் காஃபி,
இட்டெலியுடன் புதினாச் சட்டினி,
அயர்ன் பண்ணி தயாராக வைத்த உடை,
டிபன் பாக்ஸில் தயாராக மதிய உணவு,
அவ்வப்போது தொலைபேசியில்
அன்பாக அழைத்து விசாரிப்பு,
மாலை வீடு திரும்பியதும்
காலுரைகளை கழட்டும் கைகள்,
மென்று கொண்டே தொலைக் காட்சிப் பார்க்க
சிற்றுண்டியுடன் காஃபி,
அற்றாட செய்திகளை பற்றி
செய்தித் தாள்களில் ஒரு அலசல்,
இரவு தயாராக இருக்கும் உணவு
இத்தனையும் வேலைக்குச் செல்லும்
குடும்பத் தலைவியான
எனக்கு ஏன் கிடைக்கவில்லை ?

Saturday, September 02, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

சன் டிவி - அரட்டை அசிங்கம்

நடிகர் திரு விசு அரசியல் நேரத்தில் செய்த காமடிக்கு பிறகு கலையிழந்து போனது சன் டிவியின் அரட்டை அரங்கம். முன்பு மட்டும் என்ன வாழ்ந்தது என்று கேட்பவர்களுடன் நானும் சேர்ந்தே சிரிப்பேன். ஆனால் விசு நடத்திய அரட்டை அரங்கம் பல்வேறு தரப்பினரின் பேச்சுத் திறமையை வெளிக் கொண்டுவர உதவியது என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை.

வாலு போயி கத்தி வந்தது கதையாக விசுவின் அந்த இடத்திற்கு திரு சாலமன் பாப்பையாவும் அவர் தம் ஆஸ்தான பேச்சாளர் ராஜா (நக்கல் சிங்கம்) வந்திருக்கின்றனர். அவர்கள் முதன் முதலில் அரட்டை அரங்கத்தில் வைத்த தலைப்பு,

சமூக சீரழிவுக்குக்கு காரணம்

1. வியாபர நோக்குடைய சினிமாக்கள்
2. தரமற்ற பத்திரிக்கைகள்
3. பொறுப்பற்ற பொதுமக்கள்

என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பைய்யா (நான் பெரிதும் மதிப்பவர்) தலைமையில், மற்றும் பட்டிமன்ற நாயகர் ராஜா வழிநடத்துதலில் நடந்தது. வழக்கம் போல் காமடியாகவும், ஒத்திகை செய்யப்பட்டது போலவும் தான் இருந்தது.

இதில் சன் டிவி 4 வதாக சேர்க்காமல் விட்ட தலைப்பு 'குடும்பப் பெண்களை குறிவைக்கும் மெகா தொடர்கள்' என்பதை சமயோஜிதமாக விட்டுவிட்டது. தன் முதுகு தனக்கு தெரியாது என்று பெரியவர்கள் சரியாக சொன்னார்கள். சமூக பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பது போல் நடத்தி ஒலி/ஒளிபரப்பிய சன் டிவியின் அந்த குறிப்பிட்ட அரட்டை அரங்கத்தை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது.

சன் டிவியின் இந்த திசைத் திருப்பலுக்கு அல்லது செலக்டிவ் அம்னீசியாவுக்கு (வாழ்க அம்மா) புதிதாக அரட்டை அரங்கம் நடத்தும் இருவரும் தெரியாமலே முட்டுக் கொடுப்பதைப் பார்க்கும் போது அரட்டை அரங்கம் எனக்கு இந்த பதிவின் தலைப்பை கொடுத்தது.

இதில் சாலமன் பாப்பைய்யாவையோ, ராஜா அவர்களையோ ஒன்றும் குறைசொல்வதற்கில்லை. அவர்கள் வழியில் சரியாக நடத்தினார்கள். விசு அவர்கள் நடத்திய அளவுக்கு கலகலப்பு இல்லை என்பதை உணரலாம்.