Monday, July 31, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மாயத் திரை !

டிஸ்கி : சுற்றி நடக்கும் கெடுதலான விசயங்களினால், நல்ல விசயங்களை மறந்துவிட்டோமா அல்லது கண்டு கொள்ளாமல் விட்டோமோ ? சுற்றிலும் கெடுதல் மட்டுமே நடக்கிறதா ? என்ற கேள்வியில்... நம் பார்வையை மறைப்பது எது என்று எழுத முயன்றது இது ! (டிஸ்கி போதும் இல்லையென்றால் தமிழ்மண முகபிலேயே கவிதை முழுவதும் வந்து விடும் :))

மாயத் திரை

நான் பார்க்கும் உலகம் மிகக்
கொடியதாகவே இருக்கின்றது !

எங்கும் கோபம்,
எங்கும் வெறுப்பு,
எங்கும் பொறாமை,
எங்கும் ஏமாற்றம்,
எங்கும் வஞ்சனை,
எங்கும் கள்ளம் கபடம்!

எப்படி? எப்படி ? இதெல்லாம்
சகித்துக் கொண்டு வாழ்வது !

நடை பாதையில் எங்கும் முட்கள் !
எடுத்து வைத்த
அடுத்த அடி
அயற்சியை கொடுத்தது !

இப்படி
தினம் தினம் எதோ ஒன்றால்
அயர்ந்து போன நான்,

என் அழுக்கு ஆடையை களைந்து
நிலைக்கண்ணாடி முன் நிர்வாணமாக
நின்ற போது ,
மறைக்கப் பட்டிருந்த,
என் நிர்வாணத்தை சகிப்புத் தன்மையுடன்

நான் ரசித்த போது,
உலகத்தின் மீதான என் பார்வையில்
இருக்கும் குறைபாட்டை உணர்ந்து கொண்டேன் !
தமிழ்மணம் கருவிபட்டை

நாயும் கடவுளும் !


போற்றுபவரை தூற்றாது தாங்குவதில்
நாயிடம் இருக்கிறது தெய்வீகம் !

திருட்டுத் தனம் உள்ளவரின் பாவங்களை
தண்டிப்பதில் நாய் ஒரு நீதிமான் !

இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் நாய்
வருத்தப்படதா ஒரு சன்யாசி !

வீட்டை சுற்றி சுற்றி வந்து காவல்
காப்பதில் நாய் ஒரு குலதெய்வம் !

மாற்று மத அன்பர் வீட்டு நாயும்,
பயமாகவே இருந்தது நான் பழகும் வரை !

நாய்கள் ஒரே இனம் தான், நாம்தான்
நாய்களை பிரித்து வைத்தே பார்க்கிறோம் !

நம் சூது அறியாது, நம்மை மகிழ்விக்க அவை
தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன !

குரைத்தாலும் நாயும் கடவுளாகத் தெரிந்தது,
குறை வைக்காத பைரவர் வடிவில் !


Saturday, July 29, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உள்ளத்தில் குழந்தையடி !மாங்கல்யம் தந்து நானே
மகிழ்வாய் பெற்ற வர மடி நீ
என் தலை அணைக்கு !

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
தாழ் உடைத்த அன்பில் நாம் பெற்றது
நம் அன்பு(செல்வங்)கள் !

பச்சிளம் குழந்தைப் போல் நீ !
புடைவைக் கடையில் உன் பிடிவாதம்
சட்டைப் பையில் நீ போட்டது கடிவாளம் !
நகைக் கடையில் உன் கடைக் கண்
காணாமல் போனது என் நகக் கண் !
எவருக்கு நான் சொந்தம் ? என்ற
தட்டிப் பறிப்பு விளையாட்டில்
வேறுவழியின்றி விட்டுக் கொடுத்த
உன்(னிடம்) தோற்ற என் தாய்,
இவையெல்லாம் சேர்ந்து
நீ ஒரு குழந்தை என்று காட்டியது !

இருவரும் சேர்ந்து
உன் பாலன்பும், என் பாலன்பும்
இணைந்த விளையாட்டில்
என்னை நீ வீழ்த்தினாலும்
நானே வெற்றி பெற்றதாக
உணர்கிறேன் !

என்னைக் குழந்தையாக்கிய
உன் அணைப்பில் நான் அடைந்தது
மற்றொரு தாய !

நீ குழந்தையா ?
நான் குழந்தையா ?
தெரியாமல் குழம்புகிறேன்!
என்னைக் கிள்ளி விளையாடும் கள்ளி,
உன் கள்ளச் சிரிப்பைக்
கண்டு கொண்ட பிறகும் நான் !

பிகு: திரு எஸ்கே கொடுத்த தலைப்பில் விளையாட்டாக எழுதப்பட்டது இது ... நன்றி எஸ்கே !


மறுமொழி இடுகைக்கு அனுமதி இன்னும் வழங்கப்படாத்தால், பின்னூட்டமிடும் அன்பர்கள் அவ்வப்போது வந்து மறுமொழியை பார்த்துச் செல்ல வேண்டுகிறேன் !

Friday, July 28, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பாடமான மூளைகள் (நூலகம்) !திரு சிவபாலன் நூலகம் பற்றிய பதிவு எழுதியிருக்கிறார். யாருக்கும் தோழன் இல்லையென்றால் நூலுக்கு தோழனாக இருக்கலாம். நானும் நூலுக்குத் தோழன்தான் ! நூலகம் பற்றி(ல்) எழுதியது இது

பாடமான மூளைகள் !

மூளை இறந்துவிட்டால்
இறப்பென்பது சரியா ?

இல்லை என்றது
நூலகத்தில்
பாடம் செய்யப்பட்டு
பதிவு செய்யப்பட்ட
மூளைகளின் பாடங்கள் !

இறப்பைத் தாண்டி வாழுகின்றவர்கள்
இங்குதான் வாழ்கின்றனர் !

வள்ளுவனும் கம்பனும்
ஓய்வெடுப்பதும்,
ரவிவர்மாவும், டாவின்சியும்
ஓவியம் சொல்லித்தருவதும்,
கலைகளின் விதைகள் இருப்பதும்
இங்குதான் ! இங்குதான் !

காசு, பணம் தேடும்
வழிகளின் வரைபடமும்,
கல்விக் கேள்விகள் விடைபெறுவதும்,
ஆத்திகம், நாத்திகம் அருகருகே இருப்பதும்,
மதங்கள் சண்டையின்றி தோழமையோடு இருப்பதும்,
அறிவியல் கண்டுபிடிப்புகளின் அறிவிப்பை செய்வதும்
இங்குதான் இங்குதான் !

நூல்கள் இருக்கும் வரை 'வாழ்ந்து'
இறந்தவர்கள் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள்
நூல்களின் வாயிலாக !


நூலகம் வெறும் நூலகம் அன்று !
அது வாழ்ந்துக் கொண்டு இருப்பவர்களுக்கான
நினைவு(கள்)அகம் !

Thursday, July 27, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

கழுதையும் கற்பூர வாசனையும் !கழுதைகளை எனக்கு பிடிக்கும் !

கழுதை ஒன்றிடம் சென்று
கழுத்தை தடவி கொடுத்து கேட்டேன் !
கழுதையே ! ஏச்சுக்கும், பேச்சுக்கும்
கோபப்படாமல் எப்படி இருக்கிறாய் ?
சிறிது நேர மவுனத்திற்கு பிறகு
கனைப்புடன் சொல்லியது,
காதுகள் விடைத்து விட்டால்
காரியம் கெட்டு, உடம்பு பழுத்துவிடும் !
காதுகள் நீளமாக இருப்பதால்
இந்த காதில் வாங்கியதை
அந்த காதில் விடுகிறேன் ! என்று
விடை சொன்னது !

அவலெட்சணம் என்று திருஷ்டிக்காக
உன் படம் !
எப்படிப் பொருத்துக் கொள்கிறாய் ?
அலட்சியம் செய்துவிடுவேன் !
என் குட்டிக் கழுதைகளை பார்.
கொள்ளை அழகு ! அழகுக்கு அவையன்றி
வேறொன்று இருக்கிறதா ?
அழகு என்பது காலத்தின் தரிசனம்,
ஒரு பரிணாமம் !
மாறும் ஒன்றை அழுகு என்பது மடமையன்றோ !

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
இழித்துக் கூறும் பழமொழிக்கு
உன் மறுமொழி என்ன ?
கற்பூர வாசனை கண்டுகொண்டால்
உப்பையும், உம் அழுக்கையும்
உதறித் தள்ளிவிட மாட்டேனா ?
எனக்கு வாசனை தெரிவது வரைதான்
என் முதுகில் உன் சுமைகள் இருக்க முடியும் !
பழமொழிகளில் பழிக்கும்மொழி விட்டுவிடுவேன்,
பலிக்கும் மொழியாக நான் கத்துவதும்
நல்ல சகுனம் என்கிறார்களே !

உன் குரல் நாரசமாக இருக்கிறது !
என்பவர்களுக்கு உன் பதில் ஏது ?
நவரசம் அறியாதவர்களின் நா விசம் அது !
ஏழு சுவரங்களில் இசை அடக்கம் என்றால்
என் கனைக்கும் குரலும்
அதில் ஒரு காம்போதி தானே !

கழுதைக் கெட்டால் குடிச்சுவரா ?
கட்டிய வீட்டைக் குட்டிச் சுவர்
ஆக்கியவர் தன் குறை மறைக்க
எம்மீது பழிசுமத்திய பழியது !
கட்டைச் சுவரோ, குட்டிச் சுவரோ
ஆதரவாக அணைத்து அங்கு
கழுதை நான் நின்றால்
கவனம் பெரும் சுவர் அது !

கழுதையே நீ சொல்வது
கதையல்ல, நான் கண்டுகொண்ட உண்மை !
இதைத் தான் 'கழுதையாகக் கத்தியும்
காது கொடுத்து கேட்பாரில்லை' என்கிறார்களோ !
உப்பிட்ட உன்னை எவரும் இனி
தப்பாக பேசினால், எனக்கும்
பின்னங்கால் இருக்கிறது
அது உனக்காக செயல்படும் என்று
உள்ளன்போடு உனக்கு
உறுதி கூறுகிறேன் !


இது ஒரு மீள் கவிதை, முதல் வடிவம் இங்கே இருக்கிறது

Wednesday, July 26, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தவளைச் சத்தம் !


காலங்கள் மாறி மழைக்காலம் வரும்போது
தவளைகள் சத்தமிடும் !

தவளைகளால் என்ன நன்மை என்று
யோசித்துப் பார்த்த போது ஒன்று
புரிந்தது ! இவைகளின் சத்தம் மட்டும்
இல்லாது போனால் இசையின்
இனிமை எனக்குத் தெரியாமலே
இருந்திருக்கும் !

தவளைகளுக்கும் நன்மை உண்டு !
கத்துவது தவளைத் தான் என்று
தவளைகள் இனம் கண்டு கொண்டு
ஆதரவு குரல் கொடுத்து தன் இன உணர்வை
வெளிப்படுத்துகிறது அல்லவா ?

வாலை இழந்திருந்தாலும் தவளைகளின்
சேட்டைகள் குறைவதில்லை !
அடுத்தவர் முதுகில் சவாரி செய்வதென்றால்
தவளைகளுக்கு அலாதி இன்பம் போல் !
பரிணாமம் பெற்று தேரையானாலும்
எதிர்ப்பாரத விதமாக எவர் முதுகிலாவது தாவி
தன்னை மகிழ்வித்துக் கொள்ளும் !

தவளைகளின் தனிச்சிறப்பென்று என்ன இருக்க முடியும் ?
தோலால் சுவாசிப்பதா ? அல்லது
கிணற்றுத் தவளைகளாக இருப்பதா ?

எனக்குத் தெரிந்தது கிணற்றுத்
தவளைகளுக்கு இருப்பது அற்ப பயம் !

கரையேறிவிட்டால் காணமல் போய்விடுமோ
என்ற வீன் பயம்விட்டு
எல்லாத் தவளைகளும் கரையேறினால்
பறந்த உலகத்தில் பரிணாமம் பெற்று
ஒருவேளை இறக்கை முளைத்துப் பறக்கலாம் !

தங்களின் சத்தம் இல்லாத வேளைகளில்
நினைத்துப் பார்க்குமா தவளைகள் ?

Monday, July 24, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மானிட்டராய் பிறத்தல் அரிது !

நாமக்கல் சிபின்னு ஒரு ஆளு பென்னுரிமை பற்றி எழுதி, என்னிய மாதிரி ஆளுங்களை எல்லாம் உசுபேத்தி உட்டுட்டார். என்னப் பண்ணறது, கையி பரபறக்குது ... பதிலுக்கு நாமளும் அவர வெறுப்பேத்த வேணாமா ?

மானிட்டராய் பிறத்தல் அரிது !
அரிது அரிது
மானிட்டராய் (monitor) பிறத்தல் அரிது !
மானிட்டராய் பிறந்திடனும்,
ஆடை அணிகலனின்றி,
பாரிஸ் ஹில்டன்
புகைப்படம் கிடைத்தல் அரிது !
புகைப்படம் கிடைத்த தெனினும்
அலுவலகத்தில்
அக்கம் பக்கம் ஆட்கள்
இல்லாதிருத்தல் அரிது !
அலுவலகத்தில்
அக்கம் பக்கம்
ஆட்கள்
இல்லாதிருத்தினும்
வின்டோஸ் ஆட்டோ சட்டவுன்
ஆகாதிருத்தல் அரிது !


சிபியாரே பொருத்தருள்க !
தமிழ்மணம் கருவிபட்டை

வான் மகள் நாணுவாள் ?


வைர விண்மீன்கள் !
தங்கச் சூரியன் !
முத்து வெண்ணிலா !

இவை,
இத்தனையும் ஆபரணங்கள் மட்டுமே,
ஆடைகள் அல்ல ! என்று
எண்ணித் தன்

நிர்'வான'த்தை மறைக்க
நீலச் சட்டை
அணிந்து கொண்டது வானம் !

ஆகாயத் தீர்த்தம்!

Friday, July 21, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நாள்காட்டி !


ஓவ்வொரு நாளும் எனக்கு
புதுச் சட்டை! நான் கிழித்து
எறிந்த போது, மகிழ்ந்தது நாள்காட்டி!

ஒவ்வொரு புதிய நாளிலும் கிழிக்கும்
நான்தான், பழையவன் ஆகிக்கொண்டு
துவண்டு போகிறேன் !

சென்ற வருடங்களின் இதே
நாளை நினைவுகளிலிருந்து
தொலைத் திருக்கிறேன் !

சென்ற வருடங்களின் வேறொரு நாட்களை
இன்றும் விடாப் பிடியாக
நினைத்துக் கொண்டிருக்கிறேன் !

என்னைப் போல் அவஸ்த்தை
எந்த நாட்காட்டிக்கும் இல்லை.
எல்லா நாளும் பொன்நாளே என்றது !

சூலங்கள் திசை மாறினாலும்
நாற்காட்டியின் புதிய பயணத்திற்கு
எந்த தடையும் இருந்ததில்லை !

இராகுகாலம், எமகண்டம், குளிகை எச்சரிக்கை
வந்தாலும் எதுவும் நேரவில்லையா ? இல்லையென
காற்று அடித்தபோது தலையசைத்துக் காட்டியது !

பண்டிகைக் காலங்களிலும் கொண்டாட
அவைகள் அதிக நேரம்
எடுத்துக்கொண்டு மகிழ்வு கொள்வதில்லை !

நாளைக் காட்டும் நாள்காட்டியை
நாளையும் பார்பேனா ? என்பது
நாளைக்கு அதற்கு மட்டும் தெரியும் !

சுட்டி : தமிழ் நாள்காட்டி
தமிழ்மணம் கருவிபட்டை

வானில் பறந்த வண்ணங்கள் !

ஆடை நெய்ய நீ
ஆயத்தமான போது
ஆடை கலைக்கப்'பட்டு'
ஆடை ஆகிறாய் !

அடியிலைக் கூட்டில்,
அற்புத ஓவியன்போல்
அனைத்து வண்ணமும்
அழகாய் தீட்டுகிறாய் !

அடர்ந்தக் கூட்டுக்குள் உன்
அருந்தவம் போற்றி நீ
அழகாய்மாற வரம் தந்த
ஆண்டவன் யாரோ ?

அரும்பு மொட்டுகளும்
அழகன் உன் ஏக்கத்தில்
அழகாய் பூத்து சுரப்பதுதான்
அரும்சுவை தேனோ ?

அவமான மறைவென நீ
அடைந்தது சிறையா ?
அறைந்து சொன்னாய் நான்
அடைவது சிறகென்று !

அன்றல
ர்ந்த மலர்களென
ஆகாசத்தில் பறந்த உன்னை,
அண்ணார்ந்து பார்த்து நான்
அடைந்தது பேரின்பம் !

Thursday, July 20, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

திருப்பம் !

கறுப்பும் வெளுப்பாக
மாறுகிறது !
திருப்பதி உண்டியலில் !
தமிழ்மணம் கருவிபட்டை

வெளிவேசம்...!

நெஞ்சில் சாணம் !
நெற்றியில் திருநீறு !