Friday, December 05, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

தமிழ்பேச்சுக் கவிஞர்கள் !



வறுமைகள் கூட இவர்கள் வரிகளின் பொற்காசுகள் !
சிறுமைகள் கூட இவர்களின் கவிதை அலங்காரங்கள் !

துன்பவேளையை கவிதை யாழாக இசைப்பவர்கள்,
இன்ப வேளையை கவிதையில் ஏளனம் செய்பவர்கள் !

நாட்டுப்பற்றும் இவர்களால் நக்கல் செய்யப்படும் !
வீட்டுப்பற்றும் இவர்களால் சிக்கல் ஆகிவிடும் !

சோற்றுக்கு வழிதேடாமல் தூற்றலால் பசியாறுவார்கள் !
மாற்றுக்கு துணியில்லாவிட்டாலும் காற்றுக்கு ஆடை தைப்பார்கள் !

நெருப்பு சுடுவதுதான் இயற்கையா ? எங்கள் சொற்களின்,
வெறுப்பு சுடாவிட்டால் நீர் இயற்கை எய்தியவர் என்பர் !

வெடிகுண்டு வெடித்துவிட்டால் வெகுண்டெழு(த) - வரி
அடிகொண்டே அனைத்தையும் அடக்கிவிட நினைப்பர் !

பொடிபோட காசு இல்லை என்றால், தேசம்
அடியோடு வறுமையால் வாடுவதென்பர் !

அரசியல்வாதிகள் நாட்டை கெடுத்துவிட்டர் என்பர், சோம்பியிருந்தே
அரிசிகூட இவர்கள் கவிதையால் வெந்துவிடுமென்பர் !

வரிகளை வரிசை மாற்றிப் போட்டுவிட்டு, போற்றிக் கொடுக்கும்
பரிசுக்கு என் கவிதை பெற வாய்ப்பில்லை என்பர் !

கற்கண்டு இனிப்பதெல்லாம் இனிப்பா ? என்
சொற்கண்டால் அவை வெறும் இளிப்பே என்பர் !

சமூக அவலம் இவர்களின் எழுத்துக்கு தீனி, அதைப் போக்கி
சுமூகமாக்க இவர்கள் இறங்கியிருக்கிறார்களா நானி ?


பின்குறிப்பு : கவிஞர் நெல்லக் கண்ணன் நடத்தும் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சுக்கும் இந்த கவிதைக்கும் தொடர்ப்பு இல்லை :)

Tuesday, September 16, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

சிங்கை பதிவர் சந்திப்பு நினைவூட்டல் !

வரும் சனிக்கிழமை மாலை 3 மணி முதல் வீட்டில் இருந்து 'இப்ப வர்றிங்களா இல்லையா ?' என செல்பேசி மிரட்டல் வரும் வரை சிங்கை புக்கிட் கொம்பா எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் பதிவர் சந்திப்பு நடை பெற இருப்பதாக ஏற்கனவே ஜோசப் பால்ராஜ் பதிவில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

சென்ற முறை சந்திப்புகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்ததால், ஏன் சனிக்கழைமைக் கூட வைக்கலாமே என கேட்டு கலக குறல்கள் ?:))) எழுந்ததால், இந்த முறை சனிக்கிழமை வைக்கலாம் என்று பதிவர்களால் ஒருமனதாக தீர்மாணிக்கப்பட்டு இருக்கிறது.

இடம் : புக்கிட் கொம்பா எம்ஆர்டி நிலையம்

நேரம் : மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

சந்திப்பு ஏற்பாட்டாளர்கள் : சிங்கை நாதன் செந்தில் மற்றும் ஜோசப் பால்ராஜ்

சந்திப்பின் கருப்பொருள் : எங்கே செல்லும் பதிவர் பாதை ?

விவாதம் : வலைப்பதிவில் இருந்து ஓய்வு பெறுவது எப்படி ? - வலைப்பதிவாளர் கோவி.கண்ணனின் சிறப்புரையுடன் தொடங்கி வைக்கப்படும்

சந்திப்பின் தீர்மானம் : புதிய பதிவர்களின் எழுத்துக்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவது

நிகழ்ச்சி ஆரம்பம் : மாலை 3 மணி
இளைப்பாறுதல் : அவ்வப்போது
தேனீர் இடைவேளை : மாலை 5 மணி

இந்த முறை முந்தைய சந்திப்புகளில் விடுபட்ட பதிவர்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள்:

ஜோசப் பால்ராஜ் : +65 - 93372775
கோவி.கண்ணண் : +65 - 98767586
ஜெகதீசன் : +65 - 90026527

Wednesday, April 23, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

பூவின் மவுனம் !


பூவின் வாசமோ, வண்ணமோ
எதோ ஒரு ஈர்ப்பில்
பார்த்துக் கொண்டு இருந்த
என்னை அழைத்தது அருகில்,

எல்லாப் பூக்களைப் போலத்தான்
இந்த பூவும் நன்றாக இருக்கிறதே
ஒட்டி உறவாடினேன்
அந்த ரோஜாவுடன் !

நெருங்கிப் பழகியதாலோ என்னவோ
உரிமை எடுத்துக் கொண்டு,
என்னிடம் பழகும் நீ
ஏன் காட்டுப்பூக்களிடம்
பழகுகுறாய் என்று கடிந்து
கொண்டது ரோஜா.

பூவெல்லாமே எனக்கு ஒன்றுதான் !
நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும்,
என்னைவிட அந்தபூக்கள்
என்ன உயர்வு உனக்கு ?
கடிந்து கொண்டது ரோஜா !

மீண்டும் சொன்னேன்,
பூக்களெல்லாமே பூக்களே
எந்த பூவும் என்னிடம் பேசினால்
நானும் பேசுவேன் !

நீ பூவென்று நினைப்பது பூவல்ல
பூநாகம், நீ தொடர்ந்து
பழகினால், உன் கூடா ஒழுக்கமாக
உன்னை வெறுப்பதைத் தவிர எனக்கு
வழி இல்லை என்று சொன்னதுமின்றி
முட்களால் என்னைத் தீண்டிவிட்டு மவுனமானது !

வருடிக் கொடுக்கும்
என் விரலில் தீண்டினாலும்
இதயத்தில் தீண்டியதாகவே உணர்ந்தேன்.
நீ மட்டும் என்ன ? நீயும் முட்களால் தீண்டி
காட்டு ரோஜாதான் என காட்டிவிட்டாயே !

அன்பு ரோஜாவே,
பூவில் பூநாகம் இருப்பதெல்லாம் எனக்கு
தெரியாது, என்னைப் பொருத்து
அது நாகலிங்கப் பூதான்,
அந்த பூமட்டுமல்ல,
எந்த பூவும் என்னுடன் பழகினால்
நான் பழகுவேன் !
உன்னுடன் மட்டும் பழகி,
நீ சொல்வதை மட்டும் கேட்கவேண்டும் ?
நீ நினைப்பதை என்னால் நிறைவேற்ற முடியாது !

உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை,
என்னைத் தீண்டியதில் உதிர்ந்துவிட்ட
உன்முட்களால் ஏற்பட்ட காயம்
உனக்கு வலிக்குமே...
அதற்க்காக நானும் கூட வருந்துகிறேன்.

என்றோ ஒருநாள்,
பூந்தோட்டத்தில் எல்லாப்பூக்களுடன்
நீயும் இருக்க வேண்டும்,
அன்று என்னுடன்
மீண்டும் பேசுவாய் என்றே எதிர்பார்த்து இருப்பேன்,
அன்றுவரை உன்மவுனம் எனக்கு
சம்மதமே !

Monday, March 31, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

இரவின் மடியில் ... (கவிதை) !



இரவின் மடியில் ... (கவிதை) !

பகலிரவு இரண்டில் இரவையே
நேசிக்கின்றேன் நான் !

இருள் பற்றிய பயம் எனக்கில்லை,
முதன் முதலில் நான் பயந்தது அழுதது
இருட்டைப் பார்த்து அல்ல,
வெளிச்சத்தைப் பார்த்துதான் !

இருள் சூழ் கருவறையில் உறங்கிப்
பிறந்ததன் நினைவோ,
கார்முகிலின் இருளைப் பார்க்கும்
போது கருவறையில் குடியிருந்ததன்
குளுமையை உணர்கிறேன் !

கண்களைக் கவரும்
வெளிச்சத்தின் பகட்டை விட
கலப்பில்லா காரிருளின்
அமைதி மேன்மையானதென்பேன் !

என்னை மறந்து உறங்கும் நேரங்களையும்,
இன்பங்களையும்,
தருவதில் இரவுக்கு சமன் எது ?

எனக்கே எனக்காக பயன்படுத்திக் கொள்ளும்
நேரமென்றால் அது இனிய இரவுதான்.

நான் மட்டுமா ? உயிருள்ளவை
அனைத்தும் உறக்கமும், அமைதியும், ஓய்வும்
பெறுவது இரவின் மடியில் தானே ?

தாயின் மடிபோல் தான் இருளும், ஆடிய
ஆட்டத்தில் அலுப்புடன், உறங்கப் போகும்
என் விழிகள் என்றோ ஒரு நாள்,
இருள் சூழ்ந்து... கண்களை,
அப்படியே ஆசையாக தழுவி அணைத்து,
உறக்கத்தில் ஆழ்த்தி தன் மடியில் கிடத்த,
அமைதி கொள்ளவாய், என
நான் கரைந்து போவதும் அந்த இருளில் தான் !

Friday, March 21, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

கண்ணாடியின் கறை !



கண்ணாடியின் கறை !

பரண் மேல்,
ஒரு கால் உடைந்த நாற்காலி,
தூசிபடிந்த பழைய புத்தகங்கள்,
காய்ந்த மாலையுடன்
பொட்டு வைக்கப்பட்ட அம்மாவின்
கருப்பு வெள்ளை புகைப்படம்
ரிடையர்ட் ஆன அப்பாவின்
வழியனுப்பு புகைப்படம்,
நான் பட்டம் வாங்கியதும்
பெற்றோர்களுடன் ஆசி வாங்கிய படம்
என என்னைச் சூழ்ந்துள்ள,
பழமைகள் என்றுமே இனிமை
கலந்த
பசுமை நினைவுகள் தான் !

- செந்தூரன்

இதோ இந்த
வார இதழில் பாருங்கள்,
என் பையன்
உயிரோட்டத்துடன் அழகாக
கவிதைகள் எழுத
ஆரம்பித்துவிட்டான்,
பெருமையாகக் கூறிக் கொண்டு
இருந்தார் முதியோர்
இல்லத்தில் இன்னொரு பெரியவரிடம்
ஒரு பெரியவர் !

Wednesday, March 19, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

தன்மதிப்பும் மற்றும் அடுத்தவரைப் பற்றிய மதிப்பும் !

பெரியார் சொல்லும் சுயமரியாதைப் பற்றியது அல்ல. அது வேறு தன்மானம் தாக்கப்படுவதைப் அனுமதிக்கக் கூடாது என்பது பற்றியது அது. எனக்கு பெரியார் சொல்லும் சுயமரியாதையில் அந்த அளவுக்கு ஈர்ப்பு கிடையாது. பொதுவாக நமக்கு நெருக்கமானவர்களிடம் மரியாதையை சூழல் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கும் மாறாக தெரியாத ஒருவர் நம்மைப் பற்றி மிகவும் ஆபாசமாக பேசிவிட்டால் அவருடன் எதிர்காலத்தில் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றால் சட்டை செய்யாமல் சென்று விடுவதே நல்லது. எதிர்வினை ஆற்றுவதால் பயனில்லை.

எனக்கிருக்கும் பழக்கம் நண்பர்களுடன் நெருக்கமானால் அழைப்பை ஒருமைக்கு மாற்றிக் கொள்வது, அவர்களிடம் விண்ணப்பம் வைத்துவிட்டுதான் அதைச் செய்வேன், முன்பு சென்னையில் ஒரு நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றியவர் நால்வர், அவர்கள் நால்வரும் என் வயதில் 1 அதிகம் அல்லது 1 குறைவாகவே இருந்தார்கள், அவர்களுடன் பழகிய 10 நாட்களுக்கும் அவர்களை ஒருமையில் 'வாடா..போடா' என்று அழைக்க ஆரம்பித்தேன். அவர்களும் என்னை அவ்வாறே அழைத்தார்கள். இதில் கவனிக்கதக்கது என்னவேன்றால் அந்த நால்வரும் என்னைத் தவிர அவர்களுக்குள் ஒருமை விளிப்பை செய்யவில்லை, பெயரைச் சொல்லி 'என்னங்க' 'சொல்லுங்க' என்றே இன்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் ஒத்தவயதினர். நானும் கேட்டுப்பார்த்தேன், எல்லோருமே நெருக்கமாகத்தான் உணருகிறோம், இருந்தாலும் ஒருமை விளிப்பு கூச்சமாகவே இருக்கிறது என்றார்கள்.

ஒருமை விளிப்பு மதிப்பு கொடுக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்கு நாம் இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்தே இருக்கிறது, நன்கு தெரிந்தவர்கள் நம்மை ஒருமையில் அழைக்கும் போது இருவருக்கிடையேயான உரிமை, பிணைப்பு என்று தானே அதைச் சொல்ல முடியும், தெரியாத ஒருவர் அல்லது வேண்டுமென்றே நம்மை ஒருமையில் அழைத்தால் அது அங்கே மரியாதைக் குறைவாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது, அழைக்கும் முறை ஒன்றுதான், அழைக்கப்படும் நபர்களின் நோக்கம், நெருக்கம் பொருத்தே ஒருமை விளிப்புகள் பொருள் கொள்ளப்படுகின்றன. உள்நோக்கத்தோடு அவ்வாறு அழைப்பவர்களை பெரிதுபடுத்தத் தேவையில்லை. பதிலுக்கு பதில் நாமும் அவ்வாறு செய்தால் அவர்கள் சொல்லுவதை நாம் மறைமுகமாக ஏற்கிறோம் என்றே பொருள்.

சிறுவயதில் என் பெற்றோர்கள் குறிப்பாக அம்மா என்னை வா போ என்று தான் அழைப்பார்கள், பிறகு 'வாப்பா' 'போப்பா' என்று மாற்றிக் கொண்டார்கள், பிடிக்கவில்லை, வா போ என்றே அழையுங்கள் என்று சொன்னேன். எங்கள் இல்லத்தில் அம்மா அப்பா தவிர அனைவரையும் எங்களுக்குள் உடன்பிறந்தோரை பெயர் சொல்லி ஒருமையில் அழைப்பதுதான் வழக்கம், அண்ணன் என்றால் வா போ ஆனால் வாடா போடா வுக்கு பழகிக் கொள்ளவில்லை, இளைய உடன்பிறப்புகளிடம் கூடவே வாடா போடா என்ற டாவும் இருக்கும், சகோதரிகளை வா போ என்று அழைப்போம் ஆனால் அவள் இவள் வாடி போடி என்று சொன்னது கிடையாது, பெண் குழந்தைகளை எங்களின் உறவினர்களில் அப்பாக்கள் கூட அவள் இவள் டி போட்டு என்று அழைக்க தயக்கம் காட்டுவார்கள், பெண் குழந்தைகளை வாம்மா போம்மா என்பார்கள், மகன்களுக்கு வாடா போடா உண்டு. நான் என் மகளை அழைக்கும் போது வாடி போடி என்று சொல்வதுண்டு, வா போ என்று அஃறிணையில் பெண்குழந்தையை சொல்வதைவிட 'டி' போட்டு அழைப்பது சரியென்றே படுகிறது.

இல்ல உறவுகளைத் தாண்டி நண்பர் வட்டத்தில் மிகவும் நெருக்கமானவர்களை உறவின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்துவிடுவேன். அப்பா வயதுடைய நண்பர்களின் அப்பாக்களை அப்பா என்று தான் அழைத்தே வந்திருக்கிறேன். தமிழ் சமூகத்தில் அம்மா வயதுடைய எந்த பெண்ணையும் அம்மா என்று தயங்காமல் அழைப்பது போன்று அப்பாக்களுக்கு அந்த மரியாதைக் கிடைப்பதில்லை. காரணம் எவருடைய குழந்தைக்கும் பால் சுரக்கும் அம்மாவால் பாலுட்ட முடியும், அந்த ஒரு உணர்வு பூர்வ அடிப்படை தகுதி அப்பாக்களுக்கு கிடையாது, அப்படியும் நெருங்கிய ஒருவரை அப்பாவென்று அழைக்க முடியாமல் போவதற்கு காரணம், தனது தாயுடன் தொடர்பு படுத்திக் கொண்டு பார்க்கும் கிழான மனநிலையே காரணம். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பர்கள் அனைவருமே அடுத்தவரின் அப்பாவை அப்பா என்றே தயங்காமல் அழைத்தனர். அம்மா அப்பாவின் வயதை ஒத்தவர்களை தாரளமாக அதே உறவின் பெயரில் அழைக்கலாம், நம் அம்மாவின் வயது ஒத்த பெண்களை அம்மா என்று அழைப்பதற்குத் தயக்கம் காட்டாத பலரும், நம் தந்தையின் வயதுடைய ஆண்களை அப்படி அழைப்பதற்கு ஏனோ தயங்குகிறார்கள், ஆண்களை அவ்வாறு 'அப்பா' என்று அழைக்கத் தயங்குவதற்கு, யார் வேண்டுமானாலும் அம்மாவாக இருக்காலாம், ஆனால் அப்பா என்று அழைத்தால் அது பிறப்புடன் தொடர்புடையர் மட்டுமே என்று நினைப்பது ஆண்களை உயர்வுபடுத்துவதாக பொருளா ? பிறரால் அம்மா என்று அழைக்கப்படும் போது எந்த பெண்ணும் அதை உயர்வாகவே நினைக்கிறாள், சமூக பொதுச் சிந்தனையால் ஆண்களுக்கு அத்தகைய உயர்வு கிடைக்காமல் போனது இல்லாதது குறைதான். அவ்வாறில்லாமல் பிறரால் அப்பா என்று அழைக்கப்படும் ஆண்கள் அதை தனது குணநலனுக்கு கிடைத்த உயர்வாக நினைத்து மகிழ்கிறார்கள் என்பது பலருக்கு தெரியவில்லை

வலைப்பதிவு நண்பர்களிடம் நட்பு என்பதைத் தாண்டிய நெருக்கமாக நினைத்து ஒரு சில பதிவர்களை உறவின் பெயராலே அழைக்கிறேன். எனது பின்னூட்டங்களைப் படிக்கும் பதிவர்கள், நான் யார் யாரை அவ்வாறு அழைக்கிறேன் என்று தெரிந்திருக்கும். அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுபோல் வேறு சிலர் அவர்களாகவே உறவின் பெயர் சொல்லி அழைத்தார்கள், பிறகு விலக்கிக் கொண்டார்கள், நான் அவ்வாறு செய்யச் சொல்லிக் கேட்கவில்லை என்பதால் அவர்கள் முறை மாற்றும் போது 'தன்னால் வந்தது தன்னால் போனது' நட்டமில்லை என்றே நினைத்துக் கொண்டேன்.

நண்பரின் மனைவி நம்மைவிட 10 வயது குறைவாக இருந்தாலும் நண்பரை அழைப்பது போல் நண்பரின் மனைவியையும் ஒருமையில் அழைக்கும் உரிமையை நாமாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே நினைக்கிறேன். நான் இதுவரை எந்த நண்பரின் மனைவியையும் அவர் எவ்வளவு இளையராக இருந்தாலும் 'ங்கள்' விகுதி இன்றி அழைத்தது இல்லை.

மதிப்பு குறித்து எழுதத் தொடங்கி நட்பு உறவென்று நீண்டுவிட்டது.

தலைப்பின் மையக் கருத்து இதுதான்,

நீங்கள் நன்கு தெரிந்த ஒருவரை, உங்களுக்கு நெருக்கமான ஒருவரை பொதுவில் திடிரென்று எதோ காரணங்களுக்காக ஒருமையில் தூற்றுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது 'எதிர்காலத்தில் இது தனக்கும் நடக்கலாம்' என்றே உங்களுக்கு நெருக்கமான பிறர் உங்கள் மதிப்பை உடனடியாக குறைத்துவிடுவார்கள். அது தவிர்க்கவும் முடியாது. மீறியும் நமக்கு நெருக்கமான ஒருவர் தூற்றிவிட்டால் கொஞ்சம் பொறுமையாக அவர்களுக்கு விளக்கலாம், அவர்கள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால் அவர்களை விட்டு விலகலாம். அப்படி இல்லாமல் நாமும் எதிர்வினை ஆற்றினால் நாம் அவர்கள் மீது இதுநாள் வரை கோபமாக இருந்ததாக அது வெளிக்காட்டிவிடும், பொது இடத்தில் மரியாதைக் குறைவாக நடப்பவர்களிடம் எதிர்வினை ஆற்றாது நடந்து கொள்வது கோழைத்தனம் அல்ல.
தெரியாத ஒருவர் அல்லது எதிரியாக 'நினைத்துக்' கொண்ட ஒருவர் நம்மைச் சீண்டுவதற்காகவே தாயைத் தரம் தாழ்த்தித் தூற்றுகிறார் என்றால்,அவர் இழிசொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைப்பார்க்கலாம். இதில் இரண்டு அம்மாக்களின் கண்ணியம் காக்கப்படுகிறது


பிறரிடம் நாம் மரியாதையாக நடந்து கொள்வது, நம்மைப் பற்றிய மதிப்பை மறைமுகமாக அவர்களுக்கு உணர்த்துவதுதான். 'இவர் நம்மை மதிப்பதால் இவர் நம் மரியாதைக்குரியவர்' என்றே நினைக்க வைக்கும் அதாவது பிறருக்கு நாம் செய்யும் மரியாதையில் சம அளவு தன் மரியாதையை தற்காத்துக் கொள்வதற்காக அமைந்துவிடுகிறது. மதிப்பு மரியாதை என்பது கொடுத்து (பின்)வாங்குவதல்ல, 'மரியாதை செய்வது' என்பது பிறர்குறித்த மரியாதை தொடர்புடையது மட்டுமல்ல, தன்மரியாதையும் சேர்த்தே அதில் அடங்கி இருக்கிறது.

தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை காத்துக் கொள்வதில் பெரும்பங்கு நம்மிடையே தான் இருக்கிறது

அன்புடன்,
கோவி.கண்ணன்
தமிழ்மணம் கருவிபட்டை

ஓதுவார் ஆறுமுகசாமி தமிழை உள்ளே அழைத்துச் சென்றார்...நந்தனாரை அழைத்துச் செல்வது யார் ?

சமணமும் பவுத்தமும் முற்றிலும் துடைத்து ஒழித்த பிறகு... தீண்டாமை ஓங்கி இருந்த கிபி 12 ஆம் நூற்றாண்டில், அடியார்களை மெய்சிலிர்க்க வைக்க பெறவும் உடனடி(அவசர) தேவையாகவும் சைவ சமயம் வளர்க்கவும் பக்தி பரவசக் கதைகள் தேவைப்பட்டது. அதற்கு பேருதவி புரிந்தவர் சேக்கிழார் என்னும் பெருமகனார். திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் எழுதப்பட்ட பெரிய புராணம் என்னும் சைவ சமய இலக்கியத்தை இயற்றினார். அதன்படி 63 நாயன்மார்கள் கதை புனையப்பட்டது, தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் அந்த ஊரின் தொடர்பில் புனைவுக் கதைகளாக நாயன்மாரில் ஒருவர் வாழ்ந்ததாக 63 கதைகளில் நாயன்மார்கள் பற்றி பெரிய புராணத்தில் எழுதினார் சேக்கிழார்.

கண்ணப்பநாயனார், காரைக்கால் அம்மையார் என 63 அடியார்கள் வாழ்ந்ததாக எழுதி இருக்கிறார். அதில் ஒருவர் தான் தாழ்த்தப்பட்ட புலையர் வகுப்பைச் சேர்ந்த நந்தனார் என்னும் அடியார். நந்தனாரை கதைக்காக பயன்படுத்திக் கொண்டது தவிர அவர்பற்றிய பின்னனி எதையும் சொல்லாமல் குறிப்பாக நந்தனார் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட புலைப்பாடியைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் சேக்கிழாருக்கு புலையர்வாழ்வு எத்தகையது என்று தெரியவில்லை என்றும், அதற்க்கான காரணம் புலையர் வாழும் ஊர்களை சேக்கிழார் போன்ற பிரமனர் அல்லாத உயர்வகுப்பினரும் எட்டிப்பார்த்ததில்லை என்றும், தில்லைப் போன்ற ஆலயம் அமைந்த ஊர்களை சேக்கிழார் நோக்கத்தின் காரணமாக அளவுக்கு அதிகமாக புகழ்ந்திருக்கிறார் என்றும் பெரியபுராணம் பற்றி ஆய்ந்தவர்கள் எழுதி இருக்கிறார்கள். பதிவின் மையம் தொட்ட கருத்து அல்ல இது.

நந்தனார் வரலாறு பற்றி அனைவரும் அறிந்தது தான், மேலும் நந்தனார் எரிக்கப்பட்டு இறைவனுடன் இரண்டர கலந்ததாகச் சொல்லப்பட்ட கதைகளை பலரும் அறிந்தது தான் அதுபற்றி எதுவும் சொல்வதற்கில்லை. பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ள படி சிவன் கோவிலக்ளி 63 நாயன்மார்களை கோவில் சுற்றில்(பிரகாரம்) வைப்பது ஆகாமவிதிகளில் ஒன்று. நந்தனார் கதை தில்லையில் நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளதால் நந்தனாருக்கென்றே சிறப்பு சிலையும் வழிபாடும் பாரதி / உவேசாமிநாதய்யர் வாழ்ந்த காலத்தில் இருந்ததாக குறிப்பு இருக்கிறது.

நந்தனார் சிலையை தில்லைவால்(எழுத்து பிழையன்று) அந்தணர்கள் எப்பொழுது அகற்றினார்கள் என்று தெரியவில்லை. கடந்த 65 ஆண்டுகளாக நந்தனாரின் திருவுருவ சிலை தில்லையில் இல்லை. வலைப்பதிவில் இதுபற்றி எவருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். அண்மையில் தின்னை கட்டுரையைப் படிக்கும் போது அண்ணன் (ஆர்.எஸ்).எஸ் அரவிந்தன் நிலகண்டன் மிகவும் மனம் வருந்தி நந்தனார் (தில்லைவால் அந்தணர்களால்) அகற்றப்பட்டதைக் குறிப்பிட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், நந்தனார் சிலை இருந்ததற்கான ஆதார அணிவகுப்பையும் கட்டுரையில் வைத்து இருந்தார், பின்பு அதுபற்றி விழிப்புணர்வு கொடுக்க வேண்டாம் என்று நினைத்தாரோ, என்னவோ தெரியவில்லை தின்னையில் அந்த கட்டுரையை காணவில்லை. ஆனால் அதே போன்ற கட்டுரை ஒன்றை மலர்மன்னன் எழுதி முன்பு இருக்கிறார்.

அதில் நந்தனார் சிலை அகற்றப்பட்ட ஆதாரம் தொட்டு குறிப்பிட்டுள்ளவையில் ஒன்று மிகவும் மனம் பாதித்தது

"மகாதேவன் மீண்டும் 1943ல் சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்கிறார். இப்பொழுது அங்கு

நந்தனாரைக் காணவில்லை! இதுபற்றி மகாதேவன் மனம் நொந்து எழுதுகிறார்:

நந்தனார் சிலையுருவில் நின்றிருந்த இடம் கால்களால் மிதிபடும் இடமாகிவிட்டிருந்தது."

***

சிலைகளிலும் தீண்டமை பார்த்து அதை அகற்றிய தில்லைவால் அந்தணர்களின் செயலை என்னவென்று சொல்வது, அவர்களும் தமிழ்பேசுகிறார்கள், தமிழர்கள் அனைவரையும் வேறுபாடு பார்க்காமல் விசி திருமாவளவனுக்கும் மாலை மரியாதை செய்தார்கள் என்று சொல்வதெல்லாம் சப்பைக்கட்டுகள் தானே. திருமாவளவனுக்கு மாலை மரியாதைச் செய்தது அவருக்கு பின்னால் நிற்கும் மக்கள் சக்தியை நினைத்தும், பெரும்பான்மை தலித் பெருமக்கள் வாழும் தில்லையில் அவ்வாறு செய்யவில்லை பிழைப்புக்கே வேட்டு என்ற பயம் தானே காரணம் ?

ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தில்லைக் கூத்தனுக்கு தமிழை மீட்டுத்தந்தார் ஒரு ஓதுவார் ஆறுமுகசாமி, அந்த போராட்டத்தில் தில்லைவால் அந்தணர்களின் தாக்குதலுக்கு ஆளாகி ஒரு கண்ணை இழந்து கண்ணப்பநாயனாராக ஆகியும், உறுதி குறையாமல் இறுதியில் அவரது உண்மையான இறைவேட்கை அவருக்கும் சிவனுக்கும் வெற்றியைத் தேடித்தந்தது, சிற்றம்பலமும் தமிழும் சங்கமம் கொள்ள வைத்தது அவரது தொடர் போராட்டம். நந்தன் சிலையாக எங்காவது மறைவாக திருமுறைகளைப் போல் மறைத்துவைக்கட்டு இருக்கிறானா ? அல்லது எதோ ஒரு தில்லைவால் அந்தணரின் வாயில் படிக்கட்டுக்கு கீழ் கால்மிதியில் நசுங்குன்றானா ? தில்லையம்பலனுக்கே வெளிச்சம்.

சைவ சமயத்தில் மட்டும் தான் தீண்டப்படாத வகுப்பினன் என்று நந்தன் ஒதுக்கப்பட்டது ?ஆழ்வார் சிலைகள் கூட பெருமாள் அருகில் நிற்பதற்கு மறுக்க்கப்பட நிகழ்வுகள் வைணத்திலும் நடந்தேறி இருக்கிறது.

நந்தனார் சிலை உள்ளே அதே இடத்தில் அமைக்கப்பட வேண்டும். தில்லையில் மீண்டும் சிலைத்தீண்டாமைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்படவேண்டும். வரட்டு ஆன்மிகம் பேசினால் மட்டும் போதுமா? நாத்திகனுக்கு கவலை வேண்டாம் என்று சொல்லும் ஆத்திகர்கள், நாத்திகன் துணை இல்லாமல் இதை சாதிப்பார்களா ?


--
அன்புடன்,

கோவி.கண்ணன்
Blogger Websites :
http://govikannan.blogspot.com
http://kaalangkal.blogspot.com

Sunday, March 16, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

ரவியை விமர்சனம் செய்ய எனக்கு என்ன தகுதி இருக்கிறது ?

எனது இடுகைகளைப் படித்தவர்கள் பலருக்கு பரவலாக ஏற்பட்டிருக்கும் எண்ணம் 'நான் ஒரு நாத்திகவாதி'. நான் பலதரப்பட்ட பதிவுகளையும் விரும்பிப் படிப்பவன் அதுபற்றி கருத்து கொண்டிருப்பவன் என்ற போதிலும், பதிவுலகில் நுழைந்த காலகாட்டங்களில் (நீண்ட நாள் ஆனது போல் கட்டமைப்பு தான்) மிக்கவையாக கவனம் ஈர்த்தவை ஆன்மிகம், சமயம் தொடர்புடைய பதிவுகளே. அதைப்பற்றிய எழுதிய நண்பர்கள் நெருக்கமானார்கள், நெருக்கமாக இருந்தார்கள்.

ஆன்மிகம் வளர்ந்திருக்கிறது என்ற கருத்து... மக்கள் அனைவரும் எதோ ஒரு மதம் அல்லது சமயம் சார்ந்தவராக இருப்பதால் தெரியும் வெறும் தோற்றம். அது அப்படி அல்ல என்றே நினைக்கிறேன். ஆன்மிகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எல்லா காலகட்டங்களிலும் போராடியே வந்து கொண்டிருக்கிறது. ஆன்மிகம் வென்றிருக்கிறது என்பதெல்லாம் தனிமனித நிராசைகளை தீர்த்துவைத்த நம்பிக்கையின் அடிப்படையிலான தனித் தனி கதைகளேயன்றி ஒரு சமூகப் புரட்சி செய்தது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இருந்தது இல்லை. அப்படி எதாவது செய்திருந்தால் அது சமயமாக பரிணமித்து அடிப்படைக் காரணங்கள் நீர்த்துப் போய் மறைந்து உருமாறி ஒரு பெயரில் நிலைத்திருக்கும். காலவெள்ளத்தில் பின்னால் அழிந்தே போகும். அது காலத்தின் கட்டாயம் என்றால் மிகையல்ல.

உலகில் உள்ள எல்லா மதங்களிலும் ஏற்பட்டிருக்கும் உட்பிரிவுகள் இதனை தெளிவாகவே காட்டுகின்றன. எந்த ஒரு மதமும் பிரிவுகளாக இல்லை என்று எவராலும் உறுதியாக சொல்ல முடியுமா ?

அண்மையில் தெக்கிகாட்டான் அவர்களிடம் சாட்டில் உரையாடிய போது 'ஆன்மிகம்' பற்றிய உரையாடல் வந்தது

"ஒரு மனிதன் தன்குள்ளே உள்ள இரட்டைத் தன்மையை உடைத்தெரிவது ஆன்மிகத்தின் இறுதி நிலை அல்லவா ?" என்றார் நல்ல சிந்தனை.

"ஆன்மிகத்துக்கு வரையறை இல்லை, விழிஒளியற்றோர் (Blind) யானையைத் தடவிப் பார்த்து சொல்வது போல்தான். அவரவர் அனுபவம் பொறுத்தும், தன் ஆன்மிகத் தேடலில் போதும் என்று அவர் நிற்கும் இடத்தை பொறுத்தும் இருக்கிறது" என்று சொன்னேன்

"ஆன்மிகத்திற்கும், மதவாதத்திற்கும் வேறுபாடு இருக்கிறது" என்றார்

"முதலில் இரண்டையும் பிரிக்க முயற்சி நடப்பதே இல்லை, பின்பு எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது ?" என்றேன்

ஆன்மிகவாதிகள் பிறப்பிற்கும் இறப்பிற்கும் விதி, இறைவனின் லீலை, இறைச் சித்தம் இன்னும் எந்தனையோ காரணங்களைச் சொன்னாலும், ஆன்மிகத்தால் தன்னை நோக்கி 'நான் யார்....நான் ஏன் பிறந்தேன் ?' என்று ஒருவன் தன்னைத்தானே கேட்க வைக்க முடியவில்லை என்றால் ஆன்மிகவாதிகள் சொல்லும் பிறப்பு கொள்கையும், அதன்பயனென அத்தனை காரணங்களுமே பயனற்றவை. அதைக் கேட்கவைப்பதில் ஆன்மிகம் இன்னும் போராடியே வருகிறது.

மதங்களால் நன்மை ஒன்றும் இல்லை. ஒரு கோட்பாட்டில் அதில் மூட நம்பிக்கையே மிக்கவையாக இருந்தாலும் அந்த நம்பிக்கையில் அந்த மதத்தைக் கடைபிடிக்கும் மனிதனை சாகும் வரையில் வைத்திருக்கிறது அம் மதங்கள். மதங்களைப் தவிர்பவனே ஆன்மிகவாதி, அதைச் செய்வதில் நாத்திகனே முன்னிற்கிறான். என்பார்வையில் நாத்திகனே உன்மையான ஆன்மிகவாதி. :) மற்றவர்கள் சுய தேடலைத் மறந்து கடவுள் கோட்பாடென்னும் மதக் கொள்கைகளை தாங்கிப்பிடிப்பவர்களாகவே உள்ளனர்.

மாதவிப் பந்தல் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு எழுதத் தொடங்கி சற்று நீண்டுவிட்டது,

ரவியின் மாதவிப் பந்தல் பதிவு பற்றி சொல்ல வேண்டும்... தலைப்பு தவறிவிடக் கூடாதல்லவா ?

ஏற்கனவே ஒரு தொடர்கதை மற்றும் ஒரு பதிவு பற்றிய நான் எழுதிய இருவேறு விமர்சனங்களுக்கு பிறகு என்மீதான அவதூறு விமர்சனங்களைத் தொடர்ந்து ... அதன் தொடர்புடைய (முன்னாள்) நண்பர்களிடம் நல்லுறவு இல்லை. இதையெல்லாம் சென்டிமெண்டாக எடுத்துக்கொண்டு கண்ணபிரான் ரவிசங்கர் பதிவை விமர்சனம் செய்ய கொஞ்சம் தயங்கினேன். ஒருசிலவற்றில் கடந்த காலங்களின் நிகழ்வுகளை தற்காலத்துடன் ஒப்பீடு செய்வதில் உடன்பட்டவன் அல்ல, எல்லாமும் எல்லாவற்றிற்கும் எப்போதும் பொருந்தும் என்று சொல்ல முடியாது என்பதால் எனது எண்ணத்திற்கு தடைபோட்டு மாதவிப் பந்தலின் நிழலில் அமர்ந்து பார்க்கிறேன். குளுமையான நிழல், கூடவே பந்தலின் அடர்த்தி சற்று குறைவால் கீற்றாக தெரியும் சூரிய ஒளி... அது சுடவில்லை... தனியாகத் தெரிந்தது.

இவரது ஆன்மிக சிந்தனைகளில், எழுத்தில் குறைச் சொல்ல முடியுமா ? எனக்கு அனுபவமோ அறிவோ போதாது என்றே நினைக்கிறேன். என்னளவில் அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தெரிந்து கொண்டதில், ... எழுத்து அல்லது தன்னை நிலைநிறுத்துக் கொள்ளவேண்டும் என்பதைத் தாண்டி மிகவும் சிறப்பாகவே ஒரு சேவையாகவே செய்து வருகிறார்.

பால் இனிதுதான், அதனுடன் சர்கரை ஏலம் சேர்க்கும் போது, இனிமையும் மணமும் சேர்ந்து கொள்ளும், பாலின் சுவையை மேலும் இனிமை சுவை மிக்கவையாக ஆக்கிவிடும். இரவிசங்கர் எழுத்துக்களில் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருந்ததில்லை. பிறரை கேலி செய்து அதை நகைச்சுவை என்றாக்கும் அபத்தங்களை இவர் செய்ததே இல்லை. எவருடைய எதிர்கருத்தையும் தன்மீதான எதிர்தாக்குதல் போலவோ, தன்னை மேதாவி என்று காட்டிக் கொள்ளும் படியோ அவர்களுக்கு பதில் கருத்துக் கூறியதில்லை. எனக்கு தெரிந்து நாகரீகமற்ற கேள்விகளைக் கூட பொறுமையாகக் கேட்டுக் கொண்டு, பதில் அல்லது மறுமொழி சொல்வதன் நோக்கம் கேட்டவர்களை நாணம் கொள்ளச் செய்யவேண்டும் என்ற எண்ணமில்லாமல் இவர் சொல்லும் மறுமொழியால், நாகரீகமற்று கேட்பவரும் அடுத்தமுறை இவரிடம் அதுபோல் கேட்பதைத் தவிர்பர் அல்லது இவர் சொல்வதை ஏற்றுக் கொள்வர்.

நானும் இவரிடம் கற்றுக் கொண்டு மென்மேலும் வளர்த்துக் கொள்ள நினைப்பது பொறுமையும், மற்றவர்களை மதிக்கும் தன்மையையும் தான். அதைதாண்டி அவர் எழுதும் ஆன்மிகத்தில் எனக்கான பயன்பாடு குறைவே.

இவர் இடுகைகளில் பின்னனிகளுடன் கூடிய அரிய தகவல்களும், அரிய புகைப்படங்களும் ஒருசேர அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது. மற்றபடி அவரது ஆன்மிக எழுத்துக்களை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை என்று சொல்வதில் நான் வெட்கப்படவில்லை.

நான் இவரிடமும் இவரைப் போன்ற ஆன்மிகவாதிகளிடம் எப்போதும் வலியுறுத்துவது, உருவழிபாடு என்ற ஒன்றை மட்டும் சார்ந்திருக்கும் பக்தி இலக்கியங்களைத் தாண்டியும் கொஞ்சம் மேலே செல்லுங்கள்.

ஓரிறை (இறைவன் ஒருவர்), இறையற்ற தன்மை இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். மற்றபடி உருவழிபாடு அதைச் சார்ந்த மதக் கொள்கைகள் என்னதான் புனித முலாம் பூசப்பட்டாலும் அவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் வேற்றுமைகளை வெளிச்சம் போட்டு வெறுப்புகளை வளர்க்கின்றதேயன்றி சமுக மாற்றத்தை ஒருக்காலும் அவை ஏற்படுத்திவிடாது. இறை நம்பிக்கையுடையவர்கள் ஓரிறை என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தால் 'ஆன்மிகம்' என்று சொல்லப்படுவதன் பயனை அனைவரும் அடைவர். பல கடவுள்கள் வெறும் பக்திக் கோட்பாடுகளேயன்றி அவை ஆன்மிகம் அல்ல. அதே போல் பல மதங்கள் சொர்கம் நரகம் என்ற நம்பிக்கைச் பயமுறுத்தல் தவிர்த்து இவை தனிமனிதனுக்கு எந்த நன்மையும் செய்தது இல்லை. எந்த ஒரு மதமும் சிறந்த மதம் கிடையாது. அப்படி ஒன்று இருந்திருந்தால் எப்போதோ உலகம் முழுவதும் ஒரே மதமாக ஆகி இருக்கும்.

இந்துமதத்தில் உருவழிபாடு போற்றப்படுவதற்குக் காரணம், இல்லற வாழ்க்கைப் போலவே கடவுளுக்கும் குடும்பம் மனைவி மக்கள் அமைத்து வழிபடும் முறை இல்லறவாழ்வின் மேன்மையை புனித இடத்தில் நிறுத்திப் பார்க்கும் மன வடிவம். உருவ வழிபாடு முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் இறை நம்பிக்கை என்ற பெயரில் வெறும் சடங்குகளாகவும் அதன் தொடர்பில் 'தீண்டாமை / பார்பனீயம்' போன்ற மோசமான கட்டமைப்பை கட்டிக் காக்கும் கேடயங்களாக இருப்பதால் நான் உருவவழிபாட்டை ஆன்மிகத்தின் அடையாளமாக நினைப்பது இல்லை.

அன்பு நண்பர் கண்ணபிரான் ரவி சங்கர் அவர்களே,
வைணவம், சைவம், என்று பிரித்துப் பார்த்தல், அவை அவற்றின் சிறப்புத்தன்மைக்காக தனியாகவே பார்க்க வேண்டும், ஒன்றில் உள்ள சிறப்பு மற்றதில் இல்லாதது குறையல்ல ஒருவேளை அவை தேவையற்றதாகக் கூட இருக்கும். இன்றைய தமிழக இந்துக்களிடம் ஆழமாக பதிந்துவிட்டது திருமாலுக்கும் சிவனுக்கும் இடையே உள்ள உறவு மச்சான் (பார்வதியின் அண்ணன்) என்பதே. மோகினி - சிவன் போன்ற (கள்ள) உறவும் உண்டு. வைணவம், சைவம் என்று பிரித்துப் பேசுவது எந்தவிதத்திலும் பக்தியாளர்களுக்கு பயன்தராது. நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் என்று சொல்லவில்லை. பெரும்பாண்மை பதிவுகள் வைணவம் சார்ந்ததாகவே இருக்கிறது என்று நான் சொல்லி புரிந்து கொள்ள வேண்டுமா ? கண்ணபிரான் ரவிசங்கர் ஒரு வைணவர் என்று என்போன்ற பலருக்கு ஏற்பட்ட எண்ணத்தை உடைத்து எரியுங்கள்.

மேலும் ஒரு வேண்டுகோள்,

வலைவரை வந்து நெடிது வளர்ந்திருக்கும் தமிழை செழிக்க வைக்க வேண்டும், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் இறைமறுப்பாளர்களா ? இறை ஏற்பாளர்களா ? இது சிறந்த புலவர் யார் இளங்கோவா ? கம்பனா ? என்று கேட்பதற்கு ஒப்பானது. இருபக்கமும் அதை நன்றாகவே செய்துவந்திருக்கிறார்கள், வருகிறார்கள். இங்கு வலையில் எழுதுகிறோம், நமது எண்ணங்களை எழுதும் போது கூடவே தமிழார்வத்தையும் ஏற்படுத்தும் வண்ணம் எழுதிவரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செம்மொழி தகுதி கிடைத்து இருப்பதால் தமிழருக்கு என்ன நன்மை ?என்றெல்லாம் கேட்பவர்களும் தமிழர்களாக இருக்கிறார்கள். நாம் தமிழை செம்மையாக எழுத எழுத படிப்பவர்களின் எண்ணங்களிலும் தூய தமிழ்ச் சொற்கள் பதிந்துவிடும், 1900 ஆண்டு இருந்த தமிழுக்கும் தற்பொழுது எழுத்துத்துத் தமிழுக்கும் வேறுபாடுகள் மிக்கவையாகவே இருக்கிறது. தற்பொழுது 90 விழுக்காடு தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி வருகிறோம் அதை 100 விழுக்காடாக மாற்றும் முயற்சி நமது கையில் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் எளிமையான, புரியும் படியான தமிழ்ச் சொற்களை பதிவில் பயன்படுத்துவது எனக்கும் கடினம் மிக்கவையாகவே இருந்தது, தற்பொழுது வேற்று மொழிச் சொற்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு எழுதுவது எனக்கு இயல்பாகிவிட்டது.

உங்கள் இடுகைகள் அனைத்தும் பெரும்பகுதி தூயத்தமிழாகவே இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிசியில் கருங்குருணை கிடப்பது போல் வெகு சில வேற்றுச் சொற்கள் இருக்கின்றன. எழுதும் போது ஒருமுறை படித்துவிட்டு வேற்று மொழிச் சொற்களின் மாற்றுச் சொற்களை அந்த இடங்களில் சேர்க்கலாம், சங்ககாலத் தமிழில் எழுதவேண்டும் என்று சொல்ல வரவில்லை, புழக்கத்தில் இருக்கும் சொற்களையே முற்றிலுமே பயன்படுத்த முடியும். தங்கள் எழுதும் பதிவுகள் தனித்தமிழாக வரவேண்டும் என்று விரும்புகிறேன். பலமொழிகள் தெரிந்த உங்களுக்கு தமிழில் உள்ள வேற்றுமொழிச் சொற்களின் அடையாளம் நன்றாகவே தெரிந்திருக்கும். அவைகளை களைந்துவிட்டு எழுதவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு தகுதி இருப்பதாக நினைத்து மாதவிப்பந்தல் பற்றி என் எண்ணங்களைப் பகிரிந்து கொள்ளக் கேட்டு வாய்ப்பளித்த கண்ணபிரான் ரவிசங்கர் (கேஆர்எஸ்) என்றும் ரவி என்றும் அன்புடன் அழைக்கப்படும் ரவி அவர்களுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

விதிகள் (நண்பர்களுக்காகவும்) காலத்தால் (இடம்) மாறும்.
:):):)

--
அன்புடன்,
கோவி.கண்ணன்

Thursday, January 31, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

கவிஞனின் காதல் கரு !




என் கருவுக்கு நீதான் உரு...!
கவிதை எழுதி எழுதி
உருவன காதல்
அவள் கருவானதும்,

கவிதையும் கவிஞனும்
காணாமல் போனது !