Tuesday, September 12, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

சோம்பேறி பையன் (தேன்கூடு போட்டி) !

நான் சுமாரகப் படிப்பவன் தான், எதிலும் அக்கறை செலுத்தாமல் சோம்பேறியாகவே தான் இருந்தேன்.

"டேய் சோம்பேறி" என்று எங்காவது யாராவது யாரையாவது கூப்பிட்டால் நான் தன்னிச்சையாக திரும்பி பார்த்துவிடுவேன். அந்த அளவு அந்த பெயர் என்னுடன் ஒட்டி உறவாடியது.

சோம்பேறி என்ற அடைமொழி மட்டுமின்றி, தாழ்வு மனப்பான்மையில் நான் இருந்தேன் என்பது எனக்கு திருமணம் ஆகும் வரை தெரியவில்லை.
திருமணம் முடிந்து ஒரு வாரத்தில், என்னைப் பற்றி புரிந்து கொண்ட மனைவி கமலா,

"உங்களால சாதிக்க முடியுங்க..." என்றால் மென்மையாக

"என்னமோ நீதான் சொல்றே.. எனக்கு நம்பிக்கை இல்லை"

"இங்கே பாருங்க... நாளையிலிருந்து நான் சொல்றபடி கேளுங்க..."

"சொல்லுமா ..." வேண்டா வெறுப்பாக சொன்னேன்

அன்றைக்கு சாயங்காலமே, என்னை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்குச் சென்று நல்ல விதமான ஆடைகைளை வாங்கினாள்

"ஒரு மனுசனுக்கு முக்கியம் தோற்றம் தாங்க..."

"ம்"

"நல்லா நீட்டா டிரஸ் பண்ணினால், ஒரு பெருமிதம் வரும், அப்பறம் பொறுப்பு வரும்"

"ம்"

அவள் சொல்லியபடி, அவள் எடுத்துவைக்கும் ஆடைகளை அணிந்து அலுவலகம் சென்றுவர ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் என்னை ஒரு மாதிரியாக கிண்டல் செய்தவர்கள், பின் உடைகளின் தேர்வுகளைக் குறித்துப் பாராட்டினார்கள். முதல் முறையாகப் வெளியில் இருந்து பாராட்டு என்னை கொஞ்சம் மாற்றியது. அதன் பிறகு நேர்த்தியாக இன்சர்ட் பண்ணி உடைகள் அணிய ஆரம்பித்தேன்.

"என்னங்க, உங்களுக்கு தெரியாத விசயம் ஒன்னுமே இல்லை, ஆனால் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவேண்டாம் என்று நீங்கள் தயங்குகிறீர்கள் ..."

"ம், முந்திரிக் கொட்டைன்னு எல்லாம் சொல்லுவார்களே ...!"

"தயக்கத்தைவிடுங்கள், நாலு பேருக்கு மத்தியில் நாம் பேசும் போது, தெரிந்ததைச் சொல்வதற்கு என்ன தயக்கம் ?" கையை அன்பாகப் பற்றிக் கொண்டு கேட்டாள்

"ம்..."

"ஒண்ணும் தெரியாதவங்க தெரிந்தது போல் முந்திக் கொண்டு பேசுவதைத்தான் முந்திரிக் கொட்டை என்று சொல்லுவார்கள், உங்களுக்கு இருப்பது தாழ்வு மனப்பான்மை, அதை விடுங்க " என்றாள் ஆதரவாக

"ம், முயற்சி பண்ணுகிறேன்...கமலா !"

மறுநாள் அலுவலகத்தில் ஒரு முக்கிய மீட்டிங்கில் எல்லோரும் முடிவெடுக்க தயங்கிய விசயத்தில் மெல்ல தயங்கி தயங்கி நான் விளக்கிச் சொல்லிய முடிவால், அலுவலகத்தில் ஒரு நல்ல ப்ராஜக்ட் பற்றிய தெளிவு பிறந்தது.
மேனேஜர் கூப்பிட்டு,

"மிஸ்டர் மனோ, இந்த ப்ராஜக்ட் பற்றி இவ்வளவு நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க, இதை நீங்களே ஹேண்டில் பண்ணினால் தான் சரியாக முடிக்க முடியும் என்று நினைக்கிறேன், இதை புரோசீட் பண்ணுங்க" என்று கைக் குளுக்கினார்.
என்னிடம் அந்த ப்ராஜக்ட் ஒப்படைக்கப்பட்டது.

முதல் முறையாக எனக்கு மிகப் பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டதை நினைத்து பெருமிதம் வந்தது. அந்த ப்ராஜக்டை நல்ல முறையில் செய்து பாராட்டு பெறவேண்டும் என்று பொறுப்புணர்வு எனக்கு ஏற்பட்டு, அது சமபந்தமாக முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றிகரமாக முடித்தேன்.

அதன் பிறகு அடுத்தடுத்து ப்ராஜக்ட்டுகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது, நான் எப்பவுமே எதிர்பார்க்காத கார், வீடு என என் வசதிகள் கூடிக் கொண்டே போனது. என்னை சாதரணமாகப் பார்த்தவர்கள் கூட நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தனர். என் பழக்க வழக்கங்களில் மிடுக்கு தெரிவதாக சிலர் வெளிப்படையாகவே பாராட்டினர்.
ஒரு நாள் தூங்குவதற்கு முன்பு,
"ஏங்க, உங்களுக்கு இவ்வளவு திறமை இருக்கிறப்ப நாம ஏன் பிஸ்னஸ் ஆரம்பிக்கக் கூடாது ?" என்று கேட்டாள் மனைவி கமலா

"ம், பண்ணலாம் அதுக்கு திறமை மட்டுமே போதாது, வேலை வாங்கும் திறமையும் இருக்கவேண்டும், தேடித் தேடி பிஸ்னஸ் பிடிக்கவேண்டும் ..."
தயங்கி சொன்னேன் நான்

"நீங்கள் சொல்வது சரிதான், பிஸ்னஸ் ஆரம்பித்து கொடிகட்டிப் பறக்கிறவர்கள் எல்லோரும் எல்லாவித அனுபவமும் பெற்று வருவதில்லை, பிஸ்னசில் நுழைந்த பிறகே சில புதுவித அனுபவம் கிடைக்கும், முதல் போட்டால் லாபம் எடுக்கவேண்டும் என்ற உணர்வு எல்லாவற்றையும் திறம்பட செய்யதுவிடும்...!" தலையை மென்மையாக வருடியபடி சொன்னாள்

அவளுடைய பேச்சு நம்பிக்கை கொடுத்தாலும், தயங்கிய படி

"சரி, செஞ்சு பார்ப்போம் " என்றேன்

கமலா எண்டர்ப்ரைசஸ் என்று முதலில் ஆரம்பித்த நிறுவனம் சூடுபிடிக்க ஒருவருடம் ஆகியது,

"சப் காண்டரக்டரிடம் கொடுக்கும் வேலையை ஏன் நாமே, இன்னுமொரு கம்பெனி ஆரம்பித்து செய்யக் கூடாது ? நான் வேண்டுமானால் புதுக் கம்பெணியை பார்த்துகொள்கிறேன், குழந்தைகள் தான் பெரியவர்கள் ஆகிவிட்டார்களே" என்றாள்

"ம்.அதுவும் நல்ல யோசனைதான் ..."

"ஆமாங்க, நமக்கு தேவையானது மட்டும் அல்லாமல், மற்ற கம்பெனிகளுக்கும் ஆர்டர் எடுத்துச் செய்யலாமே" என்று சொன்னாள்

பிஸினஸ் விரிவடைந்தது, தொழில் அதிபர் என்ற பட்டம் பின்னால் ஒட்டிக் கொண்டது

என்னை ஆரம்பத்தில் கேலி பேசியவர்கள் என்னிடமே வேலை கேட்டு வந்தார்கள்.

இப்பொழுதெல்லாம் சக்ஸஸ்புல் பிஸ்னஸ் மேன் என்று என்னைக் கைக்காட்டுகிறார்கள்

என் மனைவி என்மீது நம்பிக்கை வைத்து படிப்படியாக என் காலடியில் அமைத்த ஏணி என்னை உயரத்தில் கொண்டு நிறுத்தியிருந்து.


மெசேஜ் : திறமையானவர்கள் முன்னுக்கு வருவது சாதாரண விசயம். ஆனால் சோம்பேறிப் பையன்களை சுறுசுறுப்பு மாமன்னர் ஆக்குவது பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களால் தான் முடியும், சோம்பேறிப் பையன்களின் திறமைகளை அடையாளம் காணுவது என்பதும் தன் சோம்பேறிக் கணவரை விட்டுக்கொடுக்காமல் உயர்த்துவதும் ஒரு மனைவியால் மட்டுமே முடியும்.

முடிவாக... உற்சாகப்படுத்தி நம்மை உயர்த்துபவர்கள் நம்மீது உண்மையான அக்கறை கொண்டவர்களாக இருந்தால் மலையும் எந்த சோம்பேறிக்கும் மடுவாகும் !

23 : கருத்துக்கள்:

said...

தேன்கூடு போட்டிக்கு கதைகளை ஆய்வு செய்கிறவர் பெயரிலேயே ஒரு கதையைப்போட்டு
அசத்திவிட்டீர்களே!

said...

நல்ல கருத்து GK. இப்படிப்பட்ட ஒரு துணைவி கிடைக்க ஆண்டவன் அருள் இருந்திருக்க வேண்டும்.

போட்டிக்கான வாழ்த்துக்கள்.

said...

// SP.VR.SUBBIAH said...
தேன்கூடு போட்டிக்கு கதைகளை ஆய்வு செய்கிறவர் பெயரிலேயே ஒரு கதையைப்போட்டு
அசத்திவிட்டீர்களே!
//

ஐயா ...!
எப்பவும் கதைக்கு கரு நம்ம பக்கத்தில் ... அதுவும் நமக்கு தெரிந்த விசயமாகத்தான் இருக்கும் !
:))

said...

// ILA(a)இளா said...
நல்ல கருத்து GK. இப்படிப்பட்ட ஒரு துணைவி கிடைக்க ஆண்டவன் அருள் இருந்திருக்க வேண்டும்.

போட்டிக்கான வாழ்த்துக்கள்.
//

இளா...!
நன்றாக எடுத்துச் சொல்லியிருக்கிறீகள். பாராட்டுக்கும் நன்றி !

said...

GK,

கலக்கிடீங்க..

சோம்பேறி பையன் படம் சூப்பர்.. எங்கே பிடிச்சீங்க...

சொல்லவந்த விசயம் நல்ல விசயம்.. நல்லா சொல்லியிருக்கீங்க

said...

கதையும் கருத்தும் அருமை. விமர்சனம் எழுதும் சோ. பையன் பற்றித்தான்னு நெனச்சேன் அப்புறந்தான் தெரிஞ்சுது இதுநம்மக் கதைன்னு..

வாழ்த்துக்கள்.

said...

//Sivabalan said...
GK,
கலக்கிடீங்க..
சோம்பேறி பையன் படம் சூப்பர்.. எங்கே பிடிச்சீங்க...
சொல்லவந்த விசயம் நல்ல விசயம்.. நல்லா சொல்லியிருக்கீங்க //

சிபா... ! பாராட்டுக்கு நன்றி !

http://www.alltheweb.com/search?cat=img&cs=utf8&rys=0&itag=crv&q=lazy+man&o=252
படம் இங்கிருந்து கிடைத்தது (image search) !

said...

நல்லா டைமிங்கா நம்ம சோம்பேறிப் பையன் பேருல பதிவைப் போட்டு அதை தமிழ் மணம் முதல் பக்கத்தில செய்யத் தெரியாத மாதிரி பண்ணி இங்க வந்தா ஒரு கதையைப் போட்டு எப்படீங்க உங்களால மட்டும் முடியுது?

said...

// குமரன் எண்ணம் said...
நல்லா டைமிங்கா நம்ம சோம்பேறிப் பையன் பேருல பதிவைப் போட்டு அதை தமிழ் மணம் முதல் பக்கத்தில செய்யத் தெரியாத மாதிரி பண்ணி இங்க வந்தா ஒரு கதையைப் போட்டு எப்படீங்க உங்களால மட்டும் முடியுது?
//
குமரன் ....!

:)))

அதெல்லாம் ஒரு டெக்னிக் இருக்கு !தனிமடலில் தெரிவிக்கிறேன் !
:)

said...

//சிறில் அலெக்ஸ் said...
கதையும் கருத்தும் அருமை. விமர்சனம் எழுதும் சோ. பையன் பற்றித்தான்னு நெனச்சேன் அப்புறந்தான் தெரிஞ்சுது இதுநம்மக் கதைன்னு..
வாழ்த்துக்கள்.//

சிறில் ...!
நானும் என்ன எழுதுறது எழுதுறதுன்னு 10 நாளாக யோசிச்சதில் எனக்கு டிப்ஸ்சாக கிடைத்தது கதையின் தலைப்பு. அப்பறம் என்ன கதையை ஜோடித்துவிட்டேன் !

:)

said...

படமும், கருத்தும் நல்லாருக்கு..வாழ்த்துக்கள்.

said...

ஆஹ்ஹா, விக்ரமன் சார்!!!

said...

//நெல்லை சிவா said...
படமும், கருத்தும் நல்லாருக்கு..வாழ்த்துக்கள்.
//

நெல்லை சிவா...!

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி !

said...

//தம்பி said...
ஆஹ்ஹா, விக்ரமன் சார்!!!
//

தம்பி...!
மாதா மாதம் போட்டி நடத்தினால் அப்பறம் கதைக்கு எங்கே போவது. விக்ரமன் அவதாரம் எடுக்க வேண்டியதுதான் !

:)

said...

//திருமணம் முடிந்து ஒரு வாரத்தில், என்னைப் பற்றி புறிந்து கொண்ட மனைவி கமலா,

"உங்களால சாதிக்க முடியுங்க..." என்றால் மென்மையாக//


அப்படி என்னங்க பண்ணினீங்க ஒருவரத்தில அவங்க புரிஞ்சுக்கற மாதிரி?!!!!!
:))

எல்லாருக்கும் இப்படிக் கிடைக்கணும்!

கிடைச்சா, அப்புறம் கீழே வேலை பாக்கறதுக்கு ஆள் வேண்டாமா?

:))

வாழ்த்துகள்!

said...

// SK said...
அப்படி என்னங்க பண்ணினீங்க ஒருவரத்தில அவங்க புரிஞ்சுக்கற மாதிரி?!!!!!
:))
எல்லாருக்கும் இப்படிக் கிடைக்கணும்!
கிடைச்சா, அப்புறம் கீழே வேலை பாக்கறதுக்கு ஆள் வேண்டாமா?
:))
வாழ்த்துகள்!
//

எஸ்கே ஐயா
ஒரு வாரத்தில் என்ன செய்யமுடியும் ?
கனவன் பொட்டிப்பாம்பாக அடங்கியிருந்தால் மத்ததெல்லாம் மனைவியர் கவனித்துக் கொள்வர். மனைவியருக்கு தேவை தான்சொல்லவருவதை காது கொடுத்துக் கேட்கும் கனவன்.

எந்த மனைவியும் தன் கனவர் சோம்பேறியாக இருப்பதை விரும்புவதில்லை. அதை பெரிதுபடுத்தாமல் மென்மையாக எடுத்துப் புரியவைத்தால் பெரிய மாற்றம் நிகழும் என்பது உண்மை என்று கருதுகிறேன்.

மேலும்... எழுத்துப் பிழையை சுட்டியதற்கும், கதையை பாராட்டியதற்கும் நன்றி ஐயா !

said...

//கையை அன்பாகப் பற்றிக் கொண்டு கேட்டாள்///

ஹூம் என்னத்த சொல்ல நல்லா இருக்கும் :)

said...

அமைதியான நீரோடை போல் எளிமையாக செல்கிறது கதை. இதுவே கதைக்கு பலம்.
வாழ்த்துக்கள் !!

***

"என் மனைவி என்மீது நம்பிக்கை
வைத்து படிப்படியாக என் காலடியில் அமைத்த ஏணி என்னை உயரத்தில் கொண்டு நிறுத்தியிருந்து" என்று முடியும்போது கதை, நிறைவு !!

***

said...

blogspot.com - வேலை செய்யவில்லை !
பின்னூட்டம் படிக்க முடியாது...!
blogger.com வேலை செய்கிறது !

said...

//மகேந்திரன்.பெ said...

ஹூம் என்னத்த சொல்ல நல்லா இருக்கும் :) //

மகி...!
அவுங்க கையை புடிக்கவில்லை என்றால் என்ன நீங்கள் பற்றிக்கொள்ளுங்கள் !
:)

said...

நிறைய பேர் இது போல பிரச்சனையில இருந்து வெளியே வர முடியாம இருக்கத்தான் செய்யராங்க

எளிமையா சொல்லியிருக்கீங்க.. இத படிச்சா தாழ்வு மனப்பான்மையில/ மனச்சோர்வுல இருக்கிறவங்க, 'அட இத்தன சுலபமா அதனை தகர்தெரிய'னு சொல்லகூடிய அளவுக்கு உங்க எளிமையான நடை

வாழ்த்துக்கள்

said...

//சோம்பேறி பையன் said...
அமைதியான நீரோடை போல் எளிமையாக செல்கிறது கதை. இதுவே கதைக்கு பலம்.
வாழ்த்துக்கள் !!
//

சோம்பேறி பையன் அவர்களே ...!
அலுக்காமல் எல்லா ஆக்கங்களையும் படித்து மதிப்பீடு செய்யும் பணி மகத்தானது.

பாராட்டுக்கள் !

said...

படிச்சுப் பார்த்தேன். நல்லா இருந்திச்சு உங்க கதை. ஒரு வரியில சொல்லணும்னா ... இங்கே பாருங்க.