Friday, October 13, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

இவர்களே கோமாளிகள் !

சிறில் அலெக்ஸ் அவர்கள் கொடுத்த கோமாளிகள் தலைப்புக்காக எழுதிய ஆக்கம் !

இவர்களே கோமாளிகள் ...!

ஆடுகள் கொம்புவைத்திருக்கும்
அகம்பாவத்தில் அடித்துக் கொள்கின்றன !
பலம் உள்ளவரை மோதிப்பார்பது
என்று ஆடுகள் முடிவெடுத்து
தர்ம அதர்ம யுத்தம் நடத்துவதாக
தனக்கு தானே சொல்லிக் கொள்கின்றன !

ஆடுகள் இரத்தத்தில் விரும்பிக்
குளித்துக் கொண்டு இருப்பதைப்
பார்த்து ஆடுகள் பாவம்
என்ற சமாதான தூதுவர்களை
ஆடுகள் புரிந்து கொள்ளுமா ?
அவற்றிற்கு தான் ஆறாவது
அறிவு கிடையாதே !

ஆடுகளுக்காக தூதுபோனவர்களின்
கெதி ?

அடித்துக் கொண்டு இரத்தம் சொட்டும்
ஆடுகளை வேடிக்கைப் பார்கிறவர்கள்
மெளனமாக சிரிக்கின்றனர் ஆனால்
ஆடுகளைப் பார்த்து அல்ல !
ஆடுகளுக்காக தூதுபோனவர்களைப்
பார்த்து, ஆடு நினைவதைப் பார்த்து
அழும் ஓநாய்கள் என்று !

ஆடுகள் கோமாளிகள் அல்ல !
வேடிக்கைப் பார்பவர்களும்
கோமாளிகள் அல்ல !
ஆடுகளுக்காக தூதுபோனவர்களே
கோமாளிகள் !

10 : கருத்துக்கள்:

said...

//ஆடுகளுக்காக தூதுபோனவர்களே
கோமாளிகள் ! //

நல்லதொரு கருத்து மிஸ்டர் கண்ணன்

said...

கோமாளிக்கும் ஏமாளிக்கும்
மயிரிழைதான் வேறுபாடு

கோமாளி தான் செய்வது
இன்னதெனச் செய்கிறான்

மற்றவரை ஏமாற்றி
அவன் அடிபடுவதில்லை

ஏமாளியோ தன்னையும் வருத்தி
மற்றவரையும் வருத்துவான்

ஏமாளிக்கு கோமாளியே மேல்
என்னமோ போங்க!

ஆடுகள் மோதுவது
கொம்பெனும் திமிரால்

அவரவர்க்கு ஓர் கொம்புண்டு
அதுவும் புரியும் அவர்க்கே

கொம்பைச் சீவிவிட்டு
மோதவிடும் கூட்டம்

இருபக்கமும் உண்டு
இதுதானே உண்மை இங்கு

தனக்கா வலிக்கிறது
அடிபடுவது ஆடுதானே

இதில் இதென்ன உசத்தி
அதென்ன தாழ்த்தி

அத்தனையும் போலி
உணர்வெல்லாம் பொய்யே

உன்னையும் தாண்டி
என்னையும் தாண்டி

புரிதல் எனும் அந்தப்
பெருமையை உணர்ந்தால்

யாரும் இங்கு கோமாளியல்ல
யாரும் இங்கு ஏமாளியல்ல

புரிபவர்க்குப் புரிந்தால்
அதுவே மகிழ்ச்சி!

அவரவர் உறவே
அவரவர்க்கு சத்தியம்

எவர் என்ன நினைத்தால்
எனக்கென்ன போச்சு

உருகிடும் உனை நினைத்து
என்றும் எந்தன் மூச்சு!

said...

GK,

//ஆடுகளுக்காக தூதுபோனவர்களே
கோமாளிகள் ! //

சரியாக சொன்னீங்க..

நல்ல கவிதை

said...

// SP.VR.SUBBIAH said...
//ஆடுகளுக்காக தூதுபோனவர்களே
கோமாளிகள் ! //

நல்லதொரு கருத்து மிஸ்டர் கண்ணன்
//

ஐயா !
நன்றி !

said...

// Sivabalan said...
GK,

//ஆடுகளுக்காக தூதுபோனவர்களே
கோமாளிகள் ! //

சரியாக சொன்னீங்க..

நல்ல கவிதை
//


சிபா...!
நன்றி !

said...

//SK said... அத்தனையும் போலி
உணர்வெல்லாம் பொய்யே
//

எஸ்கே ஐயா...!
ஆடுகளின் சண்டையில் அதிகம் காயப்பட்டவர் போல் நீண்ட பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள் !

ஆடுகளா பாவம் ?
ஆடுகள் தெரிந்துதானே ஆடுகின்றன
ஆணவ ஆட்டம் !
தூண்டி விடுபவர், தட்டிக்கொடுப்பவர் என்று ஆடுகள் அறியாததால் தான் அவற்றிற்கு ஆறாவது அறிவு இருக்கிறதோ என்று ஐயம் ஏற்படுகிறது.

நான் இங்கு கோமாளிகள் என்று ஏளனம் செய்யவில்லை. தூதுபோனவர்களின் செயல் பலனின்றி போனதால் ஏமாளிகள் ஆகவும், மற்றவர்க்கு கோமாளிகளாகவும் தெரிகின்றனர் என்று சொன்னேன்!

//புரிபவர்க்குப் புரிந்தால்
அதுவே மகிழ்ச்சி!

அவரவர் உறவே
அவரவர்க்கு சத்தியம்

எவர் என்ன நினைத்தால்
எனக்கென்ன போச்சு

உருகிடும் உனை நினைத்து
என்றும் எந்தன் மூச்சு! //

மேற்கண்ட வரிகளை ஆடுகள் புரிந்துகொள்கிறதோ இல்லையோ, நான் புரிந்து கொள்கிறேன்.

நீண்ட பின்னூட்ட கவிதைக்கு நன்றி !
மற்றும் பாராட்டுக்கள் !

said...

இந்த செம்மறியாடுகளால் பாதிப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

ஒரு ஆடு நாட்டு கறுப்பு ஆடு; இன்னுமொன்று தன்னை ஜாதி வெள்ளாடு என்று நினைத்துக் கொண்டிருக்கும் கொடியாடு.

யாருக்கு வீரம் அதிகம் என்று அவை போரிட்டுக் கொண்டிருந்தாலும் உடைவதென்னவோ கொம்புகள்தான்!

இருபுறமும் இந்த கண்காட்சியை தூண்டிவிட ஏராளமான பார்வையாளர்கள். பாதிப்பு அவற்றின் கொம்புகளையும் தாண்டி பார்வையாளருக்கும் நேரும்போதுதான் நமக்கும் வலி தெரிகிறது!

ஆடுகளை தனித்து ஆளரவமற்ற மைதானத்தில் விட்டால் அவை ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு சாகும். போட்டியை நடத்துபவர்களும் தூண்டிவிடுபவர்களும் வேண்டுமானால் அங்கு சென்று ஜல்லியடித்துக் கொள்ளட்டும். பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

said...

யாரையோ குத்துவது போல் இருக்கே கவிதை ??

முன்னபின்ன தூது போன அனுபவம் இருக்கா ?

said...

//விடாதுகருப்பு said...
இந்த செம்மறியாடுகளால் பாதிப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
//

கருப்பு அவர்களே !
ஆடுமுட்டி தள்ளியதில் காயம் அடைந்தவர்களில் நீங்களும் ஒருவரா ?
ஆச்சரியம் !

நீண்ட பின்னூட்டம் இட்டு ஆடுகளை வெட்டியிருக்கிறீர்கள் !
:))

வந்துபடித்து நிதானமாக பின்னூட்டம் இட்டதற்கு நன்றி ! கருத்துக்களுக்கு பாராட்டுகள் !

said...

//செந்தழல் ரவி said...
யாரையோ குத்துவது போல் இருக்கே கவிதை ??

முன்னபின்ன தூது போன அனுபவம் இருக்கா ?
//

நான் தூதுபோகவில்லை ரவி...!
தூதூ போனவங்க பரிதாப நிலையை நினைச்சிதான் எழுதினேன் !
:)