Thursday, July 27, 2006
கழுதையும் கற்பூர வாசனையும் !
கழுதைகளை எனக்கு பிடிக்கும் !
கழுதை ஒன்றிடம் சென்று
கழுத்தை தடவி கொடுத்து கேட்டேன் !
கழுதையே ! ஏச்சுக்கும், பேச்சுக்கும்
கோபப்படாமல் எப்படி இருக்கிறாய் ?
சிறிது நேர மவுனத்திற்கு பிறகு
கனைப்புடன் சொல்லியது,
காதுகள் விடைத்து விட்டால்
காரியம் கெட்டு, உடம்பு பழுத்துவிடும் !
காதுகள் நீளமாக இருப்பதால்
இந்த காதில் வாங்கியதை
அந்த காதில் விடுகிறேன் ! என்று
விடை சொன்னது !
அவலெட்சணம் என்று திருஷ்டிக்காக
உன் படம் !
எப்படிப் பொருத்துக் கொள்கிறாய் ?
அலட்சியம் செய்துவிடுவேன் !
என் குட்டிக் கழுதைகளை பார்.
கொள்ளை அழகு ! அழகுக்கு அவையன்றி
வேறொன்று இருக்கிறதா ?
அழகு என்பது காலத்தின் தரிசனம்,
ஒரு பரிணாமம் !
மாறும் ஒன்றை அழுகு என்பது மடமையன்றோ !
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
இழித்துக் கூறும் பழமொழிக்கு
உன் மறுமொழி என்ன ?
கற்பூர வாசனை கண்டுகொண்டால்
உப்பையும், உம் அழுக்கையும்
உதறித் தள்ளிவிட மாட்டேனா ?
எனக்கு வாசனை தெரிவது வரைதான்
என் முதுகில் உன் சுமைகள் இருக்க முடியும் !
பழமொழிகளில் பழிக்கும்மொழி விட்டுவிடுவேன்,
பலிக்கும் மொழியாக நான் கத்துவதும்
நல்ல சகுனம் என்கிறார்களே !
உன் குரல் நாரசமாக இருக்கிறது !
என்பவர்களுக்கு உன் பதில் ஏது ?
நவரசம் அறியாதவர்களின் நா விசம் அது !
ஏழு சுவரங்களில் இசை அடக்கம் என்றால்
என் கனைக்கும் குரலும்
அதில் ஒரு காம்போதி தானே !
கழுதைக் கெட்டால் குடிச்சுவரா ?
கட்டிய வீட்டைக் குட்டிச் சுவர்
ஆக்கியவர் தன் குறை மறைக்க
எம்மீது பழிசுமத்திய பழியது !
கட்டைச் சுவரோ, குட்டிச் சுவரோ
ஆதரவாக அணைத்து அங்கு
கழுதை நான் நின்றால்
கவனம் பெரும் சுவர் அது !
கழுதையே நீ சொல்வது
கதையல்ல, நான் கண்டுகொண்ட உண்மை !
இதைத் தான் 'கழுதையாகக் கத்தியும்
காது கொடுத்து கேட்பாரில்லை' என்கிறார்களோ !
உப்பிட்ட உன்னை எவரும் இனி
தப்பாக பேசினால், எனக்கும்
பின்னங்கால் இருக்கிறது
அது உனக்காக செயல்படும் என்று
உள்ளன்போடு உனக்கு
உறுதி கூறுகிறேன் !
இது ஒரு மீள் கவிதை, முதல் வடிவம் இங்கே இருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
7 : கருத்துக்கள்:
//கற்பூர வாசனை கண்டுகொண்டால்
உப்பையும், உம் அழுக்கையும்
உதறித் தள்ளிவிட மாட்டேனா ?
எனக்கு வாசனை தெரிவது வரைதான்
என் முதுகில் உன் சுமைகள் இருக்க முடியும் !//
வியக்க வைத்த சிந்தனை.
ரசிக்க வைத்த வரிகள்.
கலக்கல் கண்ணா கலக்கல்
//வியக்க வைத்த சிந்தனை.
ரசிக்க வைத்த வரிகள்.
கலக்கல் கண்ணா கலக்கல் //
தேவ் ... வாங்க ! கவிதை எல்லாம் படிப்பீர்களா ?
அருமையான கவிதை வரிகள் கோவி.கண்ணன் ஐயா. பிரதி எடுத்து வீட்டிலும் அலுவலகத்திலும் நம் கண் முன்னே ஒட்டிவைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் பயன்படும். :-)
//அழகு என்பது காலத்தின் தரிசனம்,
ஒரு பரிணாமம் !
மாறும் ஒன்றை அழுகு என்பது மடமையன்றோ !//
உண்மை...
//உப்பிட்ட உன்னை எவரும் இனி
தப்பாக பேசினால், எனக்கும்
பின்னங்கால் இருக்கிறது
அது உனக்காக செயல்படும் என்று
உள்ளன்போடு உனக்கு
உறுதி கூறுகிறேன்//
மனிதனின் சுயநலம், அடாவடித்தனம், பொருப்பின்மை,வாயில்லா ஜீவன்களை granted ஆக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் எல்லாம் வெளிப்பட்டிருக்கிறது உங்கள் கவிதையில்
வாழ்த்துக்கள்
எழுத்துப் பிழையாய் விழும் சொற்கள் கூட
பொருள் பொதிந்ததாய்ப் போயிருப்பதே இக்கவிதையின் மாண்பு!
இந்த இடத்தில் 'அழுகு' என்பது கூட நல்ல பொருள் தந்திருக்கிறது!
அதுவே மாறி, அழுகிக்கொண்டிருக்கிறது, காலத்தின் கட்டயத்தினால்!
அதைப் போய் அழுகு என்று சொல்வது மடமைதானே!:)
பலனை எதிர்பாராமல், சொல்லடி வாங்கியும், இறைபணி செய்து வாழு[டு]ம் பல வலையுலகக் "கழுதைகள்" இங்குண்டு!
[பி.கு.: உடனே எம்மைக் கழுதை எனச் சொல்லலாமா எனப் போர்க்கொடி தூக்க வேண்டாம்! கோவியார் கழுதைகளை உயர்த்தி எழுதியிருக்கும் அதே நோக்கிலேயே சொல்லியிருக்கிறேன்.
என் பின்னங்காலும் வரும், துணைக்கு!!]
தங்களது,
கழுதைக்கான ஆக்கம் அருமை!
அதுவே ஊக்கம் என்பது பெருமை!!
அன்புடன்,
ஜோதிபாரதி.
//ஜோதிபாரதி said...
தங்களது,
கழுதைக்கான ஆக்கம் அருமை!
அதுவே ஊக்கம் என்பது பெருமை!!
அன்புடன்,
ஜோதிபாரதி.
//
ஜோதிபாரதி,
உடனடியாக பார்த்து பாராட்டியதற்கு நன்றி !
Post a Comment