Wednesday, January 10, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

மனதின் பயணம் !(கவிதை)


பிம்பங்களை தோற்றுவித்து
திணறி போகிறது மனம் !
எது உண்மை ?
எது பொய் ?
என்ற தேடலில் எப்போதுமே ஆராயாமல்,
ஆள்மனப் பகுப்பில்
வாய்மையை புதைத்து
உண்மையைவிட நன்மை
எது என்பதை மட்டும் பார்த்து
நினைப்பதிலேயே மனம்
திருப்தியுடன் நின்றுவிடுகிறது !

நன்மை என்று நினைத்ததெல்லாம்
எந்த நன்மையும் செய்துவிடவில்லை !
தீமை என்று நினைத்ததெல்லாம்
தீண்டி விடவும் வில்லை !
என்ற கடைசி நொடி சுயதரிசனத்தில்
வாய்மை எனும் கல்
ஆழ்மனக் கண்ணாடி மீது விழ
உடனே உடைந்து போகிறது பிம்பங்கள் !
மனம் தொலைந்து போகிறது !
எல்லாவற்றையும் அங்கேயே
போட்டுவிட்டு,
தொலைந்த மனதை தேடி
மற்றுமொரு பயணத்திற்கு
தயாராகிறது நித்ய ஜீவன் !

5 : கருத்துக்கள்:

said...

வித்தியாசமான கவிதை கோவி.
///
உடனே உடைந்து போகிறது பிம்பங்கள்
///
சில சமயங்களில் இது உண்மைதான். பிம்பங்கள் உடைந்து தான் போகிறது.

said...

கண்ணன்,
நம்பிக்கை பொய்ப்பதை நான் நினைத்துக் கொண்டிருந்தேன்,
உங்கள் கவிதை கண்ணில் பட்டது.

எப்போதுமே எதிர்நீச்சல் போடும் ஸால்மன் வாழ்க்கை போலத்தான்
நாமும் என்று தோன்றுகிறது.
அயராமல் தொடர வேண்டியதுதான் பயணத்தை.

said...

GK,

நல்ல கவிதை...


நன்றி

said...

/எல்லாவற்றையும் அங்கேயே
போட்டுவிட்டு,
தொலைந்த மனதை தேடி
மற்றுமொரு பயணத்திற்கு
தயாராகிறது நித்ய ஜீவன் !/

ஆகா... அருமையா சொல்லியிருக்கீங்க கோவி... வாழ்த்துக்கள்

said...

நல்ல கவி(த)த்துவம் கண்ணன்.