Wednesday, March 19, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

தன்மதிப்பும் மற்றும் அடுத்தவரைப் பற்றிய மதிப்பும் !

பெரியார் சொல்லும் சுயமரியாதைப் பற்றியது அல்ல. அது வேறு தன்மானம் தாக்கப்படுவதைப் அனுமதிக்கக் கூடாது என்பது பற்றியது அது. எனக்கு பெரியார் சொல்லும் சுயமரியாதையில் அந்த அளவுக்கு ஈர்ப்பு கிடையாது. பொதுவாக நமக்கு நெருக்கமானவர்களிடம் மரியாதையை சூழல் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கும் மாறாக தெரியாத ஒருவர் நம்மைப் பற்றி மிகவும் ஆபாசமாக பேசிவிட்டால் அவருடன் எதிர்காலத்தில் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றால் சட்டை செய்யாமல் சென்று விடுவதே நல்லது. எதிர்வினை ஆற்றுவதால் பயனில்லை.

எனக்கிருக்கும் பழக்கம் நண்பர்களுடன் நெருக்கமானால் அழைப்பை ஒருமைக்கு மாற்றிக் கொள்வது, அவர்களிடம் விண்ணப்பம் வைத்துவிட்டுதான் அதைச் செய்வேன், முன்பு சென்னையில் ஒரு நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றியவர் நால்வர், அவர்கள் நால்வரும் என் வயதில் 1 அதிகம் அல்லது 1 குறைவாகவே இருந்தார்கள், அவர்களுடன் பழகிய 10 நாட்களுக்கும் அவர்களை ஒருமையில் 'வாடா..போடா' என்று அழைக்க ஆரம்பித்தேன். அவர்களும் என்னை அவ்வாறே அழைத்தார்கள். இதில் கவனிக்கதக்கது என்னவேன்றால் அந்த நால்வரும் என்னைத் தவிர அவர்களுக்குள் ஒருமை விளிப்பை செய்யவில்லை, பெயரைச் சொல்லி 'என்னங்க' 'சொல்லுங்க' என்றே இன்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் ஒத்தவயதினர். நானும் கேட்டுப்பார்த்தேன், எல்லோருமே நெருக்கமாகத்தான் உணருகிறோம், இருந்தாலும் ஒருமை விளிப்பு கூச்சமாகவே இருக்கிறது என்றார்கள்.

ஒருமை விளிப்பு மதிப்பு கொடுக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்கு நாம் இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்தே இருக்கிறது, நன்கு தெரிந்தவர்கள் நம்மை ஒருமையில் அழைக்கும் போது இருவருக்கிடையேயான உரிமை, பிணைப்பு என்று தானே அதைச் சொல்ல முடியும், தெரியாத ஒருவர் அல்லது வேண்டுமென்றே நம்மை ஒருமையில் அழைத்தால் அது அங்கே மரியாதைக் குறைவாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது, அழைக்கும் முறை ஒன்றுதான், அழைக்கப்படும் நபர்களின் நோக்கம், நெருக்கம் பொருத்தே ஒருமை விளிப்புகள் பொருள் கொள்ளப்படுகின்றன. உள்நோக்கத்தோடு அவ்வாறு அழைப்பவர்களை பெரிதுபடுத்தத் தேவையில்லை. பதிலுக்கு பதில் நாமும் அவ்வாறு செய்தால் அவர்கள் சொல்லுவதை நாம் மறைமுகமாக ஏற்கிறோம் என்றே பொருள்.

சிறுவயதில் என் பெற்றோர்கள் குறிப்பாக அம்மா என்னை வா போ என்று தான் அழைப்பார்கள், பிறகு 'வாப்பா' 'போப்பா' என்று மாற்றிக் கொண்டார்கள், பிடிக்கவில்லை, வா போ என்றே அழையுங்கள் என்று சொன்னேன். எங்கள் இல்லத்தில் அம்மா அப்பா தவிர அனைவரையும் எங்களுக்குள் உடன்பிறந்தோரை பெயர் சொல்லி ஒருமையில் அழைப்பதுதான் வழக்கம், அண்ணன் என்றால் வா போ ஆனால் வாடா போடா வுக்கு பழகிக் கொள்ளவில்லை, இளைய உடன்பிறப்புகளிடம் கூடவே வாடா போடா என்ற டாவும் இருக்கும், சகோதரிகளை வா போ என்று அழைப்போம் ஆனால் அவள் இவள் வாடி போடி என்று சொன்னது கிடையாது, பெண் குழந்தைகளை எங்களின் உறவினர்களில் அப்பாக்கள் கூட அவள் இவள் டி போட்டு என்று அழைக்க தயக்கம் காட்டுவார்கள், பெண் குழந்தைகளை வாம்மா போம்மா என்பார்கள், மகன்களுக்கு வாடா போடா உண்டு. நான் என் மகளை அழைக்கும் போது வாடி போடி என்று சொல்வதுண்டு, வா போ என்று அஃறிணையில் பெண்குழந்தையை சொல்வதைவிட 'டி' போட்டு அழைப்பது சரியென்றே படுகிறது.

இல்ல உறவுகளைத் தாண்டி நண்பர் வட்டத்தில் மிகவும் நெருக்கமானவர்களை உறவின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்துவிடுவேன். அப்பா வயதுடைய நண்பர்களின் அப்பாக்களை அப்பா என்று தான் அழைத்தே வந்திருக்கிறேன். தமிழ் சமூகத்தில் அம்மா வயதுடைய எந்த பெண்ணையும் அம்மா என்று தயங்காமல் அழைப்பது போன்று அப்பாக்களுக்கு அந்த மரியாதைக் கிடைப்பதில்லை. காரணம் எவருடைய குழந்தைக்கும் பால் சுரக்கும் அம்மாவால் பாலுட்ட முடியும், அந்த ஒரு உணர்வு பூர்வ அடிப்படை தகுதி அப்பாக்களுக்கு கிடையாது, அப்படியும் நெருங்கிய ஒருவரை அப்பாவென்று அழைக்க முடியாமல் போவதற்கு காரணம், தனது தாயுடன் தொடர்பு படுத்திக் கொண்டு பார்க்கும் கிழான மனநிலையே காரணம். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பர்கள் அனைவருமே அடுத்தவரின் அப்பாவை அப்பா என்றே தயங்காமல் அழைத்தனர். அம்மா அப்பாவின் வயதை ஒத்தவர்களை தாரளமாக அதே உறவின் பெயரில் அழைக்கலாம், நம் அம்மாவின் வயது ஒத்த பெண்களை அம்மா என்று அழைப்பதற்குத் தயக்கம் காட்டாத பலரும், நம் தந்தையின் வயதுடைய ஆண்களை அப்படி அழைப்பதற்கு ஏனோ தயங்குகிறார்கள், ஆண்களை அவ்வாறு 'அப்பா' என்று அழைக்கத் தயங்குவதற்கு, யார் வேண்டுமானாலும் அம்மாவாக இருக்காலாம், ஆனால் அப்பா என்று அழைத்தால் அது பிறப்புடன் தொடர்புடையர் மட்டுமே என்று நினைப்பது ஆண்களை உயர்வுபடுத்துவதாக பொருளா ? பிறரால் அம்மா என்று அழைக்கப்படும் போது எந்த பெண்ணும் அதை உயர்வாகவே நினைக்கிறாள், சமூக பொதுச் சிந்தனையால் ஆண்களுக்கு அத்தகைய உயர்வு கிடைக்காமல் போனது இல்லாதது குறைதான். அவ்வாறில்லாமல் பிறரால் அப்பா என்று அழைக்கப்படும் ஆண்கள் அதை தனது குணநலனுக்கு கிடைத்த உயர்வாக நினைத்து மகிழ்கிறார்கள் என்பது பலருக்கு தெரியவில்லை

வலைப்பதிவு நண்பர்களிடம் நட்பு என்பதைத் தாண்டிய நெருக்கமாக நினைத்து ஒரு சில பதிவர்களை உறவின் பெயராலே அழைக்கிறேன். எனது பின்னூட்டங்களைப் படிக்கும் பதிவர்கள், நான் யார் யாரை அவ்வாறு அழைக்கிறேன் என்று தெரிந்திருக்கும். அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுபோல் வேறு சிலர் அவர்களாகவே உறவின் பெயர் சொல்லி அழைத்தார்கள், பிறகு விலக்கிக் கொண்டார்கள், நான் அவ்வாறு செய்யச் சொல்லிக் கேட்கவில்லை என்பதால் அவர்கள் முறை மாற்றும் போது 'தன்னால் வந்தது தன்னால் போனது' நட்டமில்லை என்றே நினைத்துக் கொண்டேன்.

நண்பரின் மனைவி நம்மைவிட 10 வயது குறைவாக இருந்தாலும் நண்பரை அழைப்பது போல் நண்பரின் மனைவியையும் ஒருமையில் அழைக்கும் உரிமையை நாமாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே நினைக்கிறேன். நான் இதுவரை எந்த நண்பரின் மனைவியையும் அவர் எவ்வளவு இளையராக இருந்தாலும் 'ங்கள்' விகுதி இன்றி அழைத்தது இல்லை.

மதிப்பு குறித்து எழுதத் தொடங்கி நட்பு உறவென்று நீண்டுவிட்டது.

தலைப்பின் மையக் கருத்து இதுதான்,

நீங்கள் நன்கு தெரிந்த ஒருவரை, உங்களுக்கு நெருக்கமான ஒருவரை பொதுவில் திடிரென்று எதோ காரணங்களுக்காக ஒருமையில் தூற்றுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது 'எதிர்காலத்தில் இது தனக்கும் நடக்கலாம்' என்றே உங்களுக்கு நெருக்கமான பிறர் உங்கள் மதிப்பை உடனடியாக குறைத்துவிடுவார்கள். அது தவிர்க்கவும் முடியாது. மீறியும் நமக்கு நெருக்கமான ஒருவர் தூற்றிவிட்டால் கொஞ்சம் பொறுமையாக அவர்களுக்கு விளக்கலாம், அவர்கள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால் அவர்களை விட்டு விலகலாம். அப்படி இல்லாமல் நாமும் எதிர்வினை ஆற்றினால் நாம் அவர்கள் மீது இதுநாள் வரை கோபமாக இருந்ததாக அது வெளிக்காட்டிவிடும், பொது இடத்தில் மரியாதைக் குறைவாக நடப்பவர்களிடம் எதிர்வினை ஆற்றாது நடந்து கொள்வது கோழைத்தனம் அல்ல.
தெரியாத ஒருவர் அல்லது எதிரியாக 'நினைத்துக்' கொண்ட ஒருவர் நம்மைச் சீண்டுவதற்காகவே தாயைத் தரம் தாழ்த்தித் தூற்றுகிறார் என்றால்,அவர் இழிசொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைப்பார்க்கலாம். இதில் இரண்டு அம்மாக்களின் கண்ணியம் காக்கப்படுகிறது


பிறரிடம் நாம் மரியாதையாக நடந்து கொள்வது, நம்மைப் பற்றிய மதிப்பை மறைமுகமாக அவர்களுக்கு உணர்த்துவதுதான். 'இவர் நம்மை மதிப்பதால் இவர் நம் மரியாதைக்குரியவர்' என்றே நினைக்க வைக்கும் அதாவது பிறருக்கு நாம் செய்யும் மரியாதையில் சம அளவு தன் மரியாதையை தற்காத்துக் கொள்வதற்காக அமைந்துவிடுகிறது. மதிப்பு மரியாதை என்பது கொடுத்து (பின்)வாங்குவதல்ல, 'மரியாதை செய்வது' என்பது பிறர்குறித்த மரியாதை தொடர்புடையது மட்டுமல்ல, தன்மரியாதையும் சேர்த்தே அதில் அடங்கி இருக்கிறது.

தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை காத்துக் கொள்வதில் பெரும்பங்கு நம்மிடையே தான் இருக்கிறது

அன்புடன்,
கோவி.கண்ணன்

19 : கருத்துக்கள்:

said...

ஒரு தடவை படிச்சி முடிக்கிறதுக்குள்ளே மூச்சு வாங்குது...

ஒரு சுத்து சுத்திட்டிங்க...

இரண்டு பதிவை ஒன்னா இனைச்சிட்டிங்களோ...

***
நான் சிறு வயது நண்பர்கள் தவிர யாரிடமும் வாடா போடா சொல்லுவதில்லை..

வலையுலகில் அதிகபட்சம், யோவ் தான்..அதுவும் ஒத்த வயது, அல்லது சிறியவர்களிடம் தான்.

அம்மா, அப்பா, மற்ற உறவினர்கள் எல்லாம் ங்க விகுதியோட அழைக்க வேண்டும் என்று சிறுவயதினிலே புகட்டிவிட்டாங்க

திட்டுவதுக் எனக்குச் சரளமாக வராது என்பது உபரித் தகவல்... :)

***

புத்தர் சொன்னது தான் இதுவும்..

ஒருத்தர் 5 ரூ கொடுக்கும் போது வேண்டாம் என்றால், 5 ரூ கொடுத்தவரிடமே போய் சேரும்..

அதுப் போலவே வசவுகளும். தவறூ செய்திருப்பின், குற்றயுணர்ச்சியில், வசவை ஏற்போம்..இல்லாவிட்டால், திட்டியவனுக்குத் தான் அது..

சிறு வயதில் திட்டும் போது கையயைக் காட்டி, தடுத்தி நிறுத்தி, அப்படியே திருப்பி விடுவதாக விளையாடுவோம்..

அதை பெரியவர்களான பின் மறந்து விடுகிறோம் என்று நினைக்கிறேன்..

said...

சரி இதிலே ”எனக்கு” மெசேஜ் இல்லை.
:-)

said...

//வடுவூர் குமார் said...
சரி இதிலே ”எனக்கு” மெசேஜ் இல்லை.
:-)
//

குமார்,

இதுல யாருக்கும் மெசேஜ் இல்லை. மதிப்பு மரியாதைப் பற்றி கோர்வையாக எழுதியதாக நினைக்கிறேன்.

said...

ஒத்த வயதை உடையவர்கள்
உரிமையோடு நெருங்கி
பழக வேண்டுமெனில்
வா! போ! என்று விளித்துக்கொள்ளலாம்

வாடா! போடா! என்பதெல்லாம்
நண்பருக்கு ஏற்றுக்கொள்ளும்
மனநிலை இருந்தால் தான்

வாங்க! போங்க! என்பது
யாரையும் பாதிக்காது
அந்நியப்படுத்துவதாக நினைக்கத் தோன்றவில்லை.
நிலையானது!!!

மற்றபடி நாம் கொடுப்பது 99 சதம் நமக்குத் திருப்பிக் கிடைக்கும்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

ஒரு கருத்து முரண்பாடு காரணமாக கொஞ்ச காலம் உங்க பதிவு பக்கம் வராமல் இருந்தேன் (நான் இப்ப கொஞ்ச நாளாத்தான் பதிவுக்கே வந்தேன் அதிலும் சிலகாலம்)பிறகு கே.ஆர்.எஸ் எழுதின பதிவிறுக்குப்பின் மீண்டும் உங்கள் பதிவை என் ரீடரில் இணத்துக்கொண்டேன், இணைத்தது வீண் போகவில்லை நல்ல பதிவு தான். பலரும் இந்த வேளையில் உணர்ந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான உணர்வு, வாழ்த்துக்கள்.

said...

//கிருத்திகா said...
ஒரு கருத்து முரண்பாடு காரணமாக கொஞ்ச காலம் உங்க பதிவு பக்கம் வராமல் இருந்தேன் (நான் இப்ப கொஞ்ச நாளாத்தான் பதிவுக்கே வந்தேன் அதிலும் சிலகாலம்)பிறகு கே.ஆர்.எஸ் எழுதின பதிவிறுக்குப்பின் மீண்டும் உங்கள் பதிவை என் ரீடரில் இணத்துக்கொண்டேன், இணைத்தது வீண் போகவில்லை நல்ல பதிவு தான். பலரும் இந்த வேளையில் உணர்ந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான உணர்வு, வாழ்த்துக்கள்.

11:27 PM
//

கிருத்திகா அவர்களே,

அது என்ன கருத்து முரண்பாடு என்று விளக்கினால், நான் எதும் தவறாக சொல்லி இருந்ததால் திருத்திக் கொள்கிறேன். அதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா ?

குற்றவாளியாக ஒருவரை நினைத்தால் அதற்கான காரணத்தை அவரிடம் சொன்னால் அவர் அதற்கான விளக்கம் கொடுப்பார் இல்லையா ? அதன் பிறகு தானே அவர் சொல்வது பற்றி முடிவு எடுக்க முடியும்.

பலப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் அப்படியே இருப்பதற்கு காரணம் அவற்றைப் பற்றி பேசப்படாததால் தான்.

பாராட்டியதற்கு(ம்) மிக்க நன்றி !

said...

பொதுவாக நான் என்னில் இருந்து முரண்படும் கருத்துக்களுக்கு "மற்றவர்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிடல் வேண்டாம் என்ற எண்ணத்தில் " வெறும் வாசகியாய் மட்டுமே வந்து செல்வதுண்டு. ஆனால் தங்களின் ஒரு பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்களை அனுமதித்தது என்னுள் ஒரு எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிட்டது. மீண்டும் இப்போது அதைப்பற்றி பேசுவதன் மூலம் ஒரு தேவையற்ற நாம் விரும்பத்தகாத விளம்பரத்தை தருவது போல் இருக்கும் (தனி மடல் அனுப்பும் மின்னஞ்சல் இருந்திருந்தால் கண்டிப்பாய் கூறியிருந்திருப்பேன்). வாழ்த்துக்கள்.

said...

//கிருத்திகா said...
பொதுவாக நான் என்னில் இருந்து முரண்படும் கருத்துக்களுக்கு "மற்றவர்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிடல் வேண்டாம் என்ற எண்ணத்தில் " வெறும் வாசகியாய் மட்டுமே வந்து செல்வதுண்டு. ஆனால் தங்களின் ஒரு பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்களை அனுமதித்தது என்னுள் ஒரு எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிட்டது. மீண்டும் இப்போது அதைப்பற்றி பேசுவதன் மூலம் ஒரு தேவையற்ற நாம் விரும்பத்தகாத விளம்பரத்தை தருவது போல் இருக்கும் (தனி மடல் அனுப்பும் மின்னஞ்சல் இருந்திருந்தால் கண்டிப்பாய் கூறியிருந்திருப்பேன்). வாழ்த்துக்கள்.
//

கிருத்திகா மேடம்,

மிக்க நன்றி !

உங்கள் பதிவில் பின்னூட்டமாக எனது மின் அஞ்சல் முகவரியை தெரிவித்து இருக்கிறேன்.

said...

//bala has left a new comment on your post "தன்மதிப்பும் மற்றும் அடுத்தவரைப் பற்றிய மதிப்பும் ...":

//தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை காத்துக் கொள்வதில் பெரும்பங்கு நம்மிடையே தான் இருக்கிறது//

கோவி.மு.கண்ணன் அய்யா,

ஏற்றுக் கொள்ளவேண்டிய கருத்து.ஆனால் இதை எழுதிய நீங்கள் இந்த அறிவுரையைப் பின்பற்றி உங்க மதிப்பைக் காப்பாற்றத் தவறி விட்டீங்களே?உங்க அறிவுரை மற்றவர்களுக்கே, உங்களுக்கு அல்ல என்று நினைத்து நீங்கள் நடந்து கொல்ளும் விதம் உங்களுக்கு சான்றோர்கள் மத்தியில் மதிப்பைப் பெற்றுத் தராது;இருக்கிற கொஞ்ச நஞ்ச மதிப்பையும் காப்பாற்றாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.********அவ்வளவு தான்.

பாலா //

தொடர்பு அற்று பல்வேறு பதிவுகளிலும் பின்னூட்டம் போடும் உங்கள் மீதும் மதிப்பு வைத்தே பின்னூட்டம் பதிவு தொடர்பில் இல்லாவிட்டாலும் உங்கள் பின்னூட்டம் அனுமதிக்கிறேன். இங்கு பிறரைக் அவமரியாதை செய்திருப்பதை மட்டுறுத்தி இருக்கிறேன்.

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது

"என்னய்யா அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, தேவையே இல்லாமல் என்னை மரியாதை குறைவாக பேசிகிறாரே ..." என்று கேட்டேன்

"அவனெல்லாம் உங்களுக்கு மரியாதை கொடுத்தால் அது அவமரியாதை செய்வதுபோல் தான், பிறரை பாராட்டுவதற்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும், அது அவனிடம் இல்லை, அதையும் மீறி அவன் பாராட்டினால் அதற்க்காக நீங்கள் வருத்தப்படலாம்"

என்றார்

said...

கலக்கல்.....

இப்படி உங்களிடம் சொன்ன நண்பர் வாழ்க வாழ்க....

இதை விட அந்த பாலாவிற்கு தனி மரியாதை செய்ய முடியாது...

:))))))

///
நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது

"என்னய்யா அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, தேவையே இல்லாமல் என்னை மரியாதை குறைவாக பேசிகிறாரே ..." என்று கேட்டேன்

"அவனெல்லாம் உங்களுக்கு மரியாதை கொடுத்தால் அது அவமரியாதை செய்வதுபோல் தான், பிறரை பாராட்டுவதற்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும், அது அவனிடம் இல்லை, அதையும் மீறி அவன் பாராட்டினால் அதற்க்காக நீங்கள் வருத்தப்படலாம்"

என்றார்
///

said...

//TBCD said...
கலக்கல்.....

இப்படி உங்களிடம் சொன்ன நண்பர் வாழ்க வாழ்க....

இதை விட அந்த பாலாவிற்கு தனி மரியாதை செய்ய முடியாது...

:))))))
//

DCBT ஐயா,

அந்த பொன்மொழியை உதிர்த்தவர் யார் என்று சொல்லிவிடுவேன். அப்பறம் இலக்கு அவர் பக்கம் திரும்பிவிடும் அதனால் வேண்டாம், விட்டுடுவோம். பயம் இருக்கா ?
:)

பதில் பாலாவுக்கு தான் என்றாலும் அது பாலா குறித்து பேசிக் கொண்டதல்ல என்ற அந்த நண்பருக்கு தெரியும்.
:)

said...

//ஜோதிபாரதி said...
ஒத்த வயதை உடையவர்கள்
உரிமையோடு நெருங்கி
பழக வேண்டுமெனில்
வா! போ! என்று விளித்துக்கொள்ளலாம்

வாடா! போடா! என்பதெல்லாம்
நண்பருக்கு ஏற்றுக்கொள்ளும்
மனநிலை இருந்தால் தான்

வாங்க! போங்க! என்பது
யாரையும் பாதிக்காது
அந்நியப்படுத்துவதாக நினைக்கத் தோன்றவில்லை.
நிலையானது!!!

மற்றபடி நாம் கொடுப்பது 99 சதம் நமக்குத் திருப்பிக் கிடைக்கும்.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதிபாரதி ஐயா,

பதிவை ஒட்டிய நல்ல கருத்து தந்ததற்கு பாராட்டுக்கள் ! நன்றி !

said...

//
TBCD said...
ஒரு தடவை படிச்சி முடிக்கிறதுக்குள்ளே மூச்சு வாங்குது...

ஒரு சுத்து சுத்திட்டிங்க...

இரண்டு பதிவை ஒன்னா இனைச்சிட்டிங்களோ...

***
நான் சிறு வயது நண்பர்கள் தவிர யாரிடமும் வாடா போடா சொல்லுவதில்லை..

வலையுலகில் அதிகபட்சம், யோவ் தான்..அதுவும் ஒத்த வயது, அல்லது சிறியவர்களிடம் தான்.

அம்மா, அப்பா, மற்ற உறவினர்கள் எல்லாம் ங்க விகுதியோட அழைக்க வேண்டும் என்று சிறுவயதினிலே புகட்டிவிட்டாங்க

திட்டுவதுக் எனக்குச் சரளமாக வராது என்பது உபரித் தகவல்... :)

***

புத்தர் சொன்னது தான் இதுவும்..

ஒருத்தர் 5 ரூ கொடுக்கும் போது வேண்டாம் என்றால், 5 ரூ கொடுத்தவரிடமே போய் சேரும்..

அதுப் போலவே வசவுகளும். தவறூ செய்திருப்பின், குற்றயுணர்ச்சியில், வசவை ஏற்போம்..இல்லாவிட்டால், திட்டியவனுக்குத் தான் அது..

சிறு வயதில் திட்டும் போது கையயைக் காட்டி, தடுத்தி நிறுத்தி, அப்படியே திருப்பி விடுவதாக விளையாடுவோம்..

அதை பெரியவர்களான பின் மறந்து விடுகிறோம் என்று நினைக்கிறேன்..

9:10 PM
//

டிபிசிடி ஐயா,

பதிவின் மையக் கருத்தை வைத்து எழுதும் போது எழும் எண்ணங்கள் அப்படியே அங்கும் இங்கும் சென்று நீண்டுவிட்டது. பொறுத்தருள்க... பொருள்தருக !

உன்னையை கூடத்தான் நான் உன் பாலிசியில் வாடா போடா என்கிறேன்.

எங்கள் இல்லத்திலும் பெற்றவர்களுக்கு 'ங்கள்' விகுதிதான். ஆனால் என் பொண்ணு பிறரிடம் சொல்லும் போது என்னை 'ங்கள்' போட்டு சொல்லும், என்னிடம் பேசும் போது ஒருமைதான்.

மறுபடியும் புத்த துணுக்கா ?

நீ எனக்கு 5000 வெள்ளி கொடு வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொள்கிறேன்.

said...

என்னவென்று தெரியவில்லை, டிபிசிடி கொஞ்ச நாளா புத்தர் கதையா சொல்லிட்டிருக்கார். (மலேஷியாவில் பௌத்தமதத்தைச் சேர்ந்த யாரையும் . . .)

நல்ல சுவையான பொங்கலில், கல் போல் இரண்டு இடங்கள் பதிவில் இடறுகின்றன. பதிவின் சுவைத் தரத்தையே கொஞ்சம் இறக்குகின்றன. ( "உங்கள் அம்மாவைத் தவிர மற்றவரை" என்று ஆரம்பிக்கும் வரிகளும், "தெரியாத ஒருவர் அல்லது எதிரியாக மாறிய ஒருவர்" என்று ஆரம்பிக்கும் வரிகளும்)

அந்தப் பகுதிகள் இல்லாமலேயே கூட, பதிவில் தாங்கள் சொல்ல வரும் நல்ல கருத்து, ஏற்கும் மனமுடையோரை அழகாகச் சேர்கிறது.

said...

//RATHNESH said...
என்னவென்று தெரியவில்லை, டிபிசிடி கொஞ்ச நாளா புத்தர் கதையா சொல்லிட்டிருக்கார். (மலேஷியாவில் பௌத்தமதத்தைச் சேர்ந்த யாரையும் . . .)

நல்ல சுவையான பொங்கலில், கல் போல் இரண்டு இடங்கள் பதிவில் இடறுகின்றன. பதிவின் சுவைத் தரத்தையே கொஞ்சம் இறக்குகின்றன. ( )

அந்தப் பகுதிகள் இல்லாமலேயே "உங்கள் அம்மாவைத் தவிர மற்றவரை" என்று ஆரம்பிக்கும் வரிகளும், "தெரியாத ஒருவர் அல்லது எதிரியாக மாறிய ஒருவர்" என்று ஆரம்பிக்கும் வரிகளும்கூட, பதிவில் தாங்கள் சொல்ல வரும் நல்ல கருத்து, ஏற்கும் மனமுடையோரை அழகாகச் சேர்கிறது.
//

"உங்கள் அம்மாவைத் தவிர மற்றவரை" என்று ஆரம்பிக்கும் வரிகளும், "தெரியாத ஒருவர் அல்லது எதிரியாக மாறிய ஒருவர்" என்று ஆரம்பிக்கும் வரிகளும் -

இதற்கு பதிலாக

"'நம்' அம்மாவைத் தவிர மற்றவரை" என்று ஆரம்பிக்கும் வரிகளும், "தெரியாத ஒருவர் அல்லது எதிரியாக 'நினைத்துக்' கொண்ட ஒருவர்" என்று இருந்திருக்க வேண்டும்.

டிபிசிடி புத்தரா ?

அவர் பிள்ளையார்.
:)

said...

பதிவில் கொஞ்சம் 'பாலீஷ்' ஏறியிருக்கிறது; ஜொலிக்கிறது.

//டிபிசிடி புத்தரா ?

அவர் பிள்ளையார்.//

பாவம் பெண்கள். (மலேஷியாவில் எத்தனை அரசமரத்தடிகளும், குளக்கரைகளும் ஆற்றங்கரைகளும் இருக்கின்றனவோ!)

இதை விட என்ன பெரிய விருது அவருக்கு வேண்டுமாம்?

said...

//RATHNESH said...
பதிவில் கொஞ்சம் 'பாலீஷ்' ஏறியிருக்கிறது; ஜொலிக்கிறது.//

சரி செய்து கொள்ள கண்ணாடி இருந்தால் பாலிஷ் ஏற்றலாமே ஏறுமே.
:)


//டிபிசிடி புத்தரா ?

அவர் பிள்ளையார்.//

பாவம் பெண்கள். (மலேஷியாவில் எத்தனை அரசமரத்தடிகளும், குளக்கரைகளும் ஆற்றங்கரைகளும் இருக்கின்றனவோ!)

இதை விட என்ன பெரிய விருது அவருக்கு வேண்டுமாம்?
//


குளம் இல்லை,
ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் இருக்கிறதே, ஆனா ஒண்ணு, இவரை சுற்றி வருவதுதான் ரொம்ப கஷ்டம். கொஞ்சம் பெரிய சுற்று !

said...

//பிறரால் அப்பா என்று அழைக்கப்படும் ஆண்கள் அதை தனது குணநலனுக்கு கிடைத்த உயர்வாக நினைத்து மகிழ்கிறார்கள் என்பது பலருக்கு தெரியவில்லை//

திருச்சி, த‌ஞ்சை ப‌குதிக‌ளில் த‌ன்னைவிட‌ வ‌ய‌து முதிந்தோரை அவரவர் வயதிற்கேற்ப, அண்ணே என‌வோ, மாமா என‌வோ ( also UNCLE in certain groups ), ஐயா எனவோ, மிக‌வும் வயதான‌ வ‌ராக‌த்தோற்ற‌ம‌ளிப்ப‌வ‌ரைத் தாத்தா என்றோ சில் இட‌ங்க்ளில் "பெரிசு" என‌வும் கூப்பிடுவ‌தைத் தான் பார்த்திருக்கிறேன்.

சென்னைக்கு வ‌ந்த‌பின்பு தான் இங்குள்ள‌வ‌ர் த‌ம்மைவிட‌ மூத்த‌வ‌ரை,அதுவும்
ஒரு 30 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் மூத்த‌வ‌ராக‌ இருப்பின், அப்பா எனவும் அழைக்கின்ற‌ன‌ர் என்ப‌தைப் புரிந்துகொண்டேன்.

பெற்ற குழந்தைகள் வெளி நாடுகளில் இருக்க, முதுமையில், தனிமையில் வெறுமையுடன் பலருக்கு இங்கு வாழ் நாட்கள் ஓடுகின்றன். அப்போது ஏதோ ஒரு குரல் 'அப்பா ! ' எனக் கேட்கும்போது, அதில் உள்ள இன்பமும் சுகமும் எத்தனை என்று விவரிக்க இயலாது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

said...

//sury said...
பெற்ற குழந்தைகள் வெளி நாடுகளில் இருக்க, முதுமையில், தனிமையில் வெறுமையுடன் பலருக்கு இங்கு வாழ் நாட்கள் ஓடுகின்றன். அப்போது ஏதோ ஒரு குரல் 'அப்பா ! ' எனக் கேட்கும்போது, அதில் உள்ள இன்பமும் சுகமும் எத்தனை என்று விவரிக்க இயலாது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.//

சூரி ஐயா,

மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கா, என்னால் அப்பா என்று அழைக்கப்படும் நண்பர்களின் அப்பாக்கள் உணர்வு பூர்வமாக அதை ஏற்றுக் கொள்வதை அறிந்திருக்கிறேன். அதனால் அதை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளேன்.

தாய்மை மட்டுமல்ல, தந்தை என்ற உறவின் பெயரும் போற்றப்படவேண்டியவை. புரிந்து கொண்டால் ஆண்களும் மென்மையானவர்களாகவும், மேன்மையானவர்களாகவும் மாறுவார்கள்.