Saturday, November 25, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நேரில் வந்து சந்தித்த பதிவர் !


பலநூறு (?) பதிவுகள் இதுவரையில் எழுதியிருந்தாலும்[:)))], பதிவர் யாரையும் நேரில் பார்த்து பழகிய அனுபவம் இருந்ததில்லை. தொலைபேசியில் சில பதிவர்களுடன் பேசி இருக்கிறேன்,சிலருக்கு மின் அஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.

நானும் திரு
எஸ்கே ஐயாவும் ஏப்ரல் 2006ல் தான் வலைப்பதிவுகள் ஆரம்பித்திருந்தோம். அதற்கு முன்பு அறிமுகம் கிடையாது. பதிவர் பச்சோந்தி என்கிற புனைபெயரில் எழுதும் ராம்பிரசாத் அவர்களின் நாய் கவிதைக்கு பதிலாக எஸ்கே ஒரு கவிதை எழுதி தனிப்பதிவாக இட்டார். இருவரின் கவிதையும் என்னைக் கவரவே நானும் ஒரு நாய் கவிதையை எழுதி எஸ்கே அவர்களின் ஆத்திகம் பதிவில் பின்னூட்டமாக இட்டேன். எஸ்கே பதிவுக்கு வந்தது ஆன்மிகம் பற்றி நிறைய எழுதுவதற்க்கத்தான் ஆனால் அவர் அவ்வப்போது நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு கவிதையும் எழுதிப்போடுவார்.

அவரது ஆன்மிக நம்பிக்கை குறித்து எனக்கு வேறுபட்ட கருத்துக்கள் (கருத்து வேறுபாடு அல்ல) இருந்தாலும் பின்னூட்டத்தில் பொறுமையாக பதில் சொல்லுவார். அவரது எழுத்து நடையும், தமிழ் மொழித் திறனும் வியக்கவைத்தது. அவரது எழுத்தை வைத்து வயது இருபத்து ஐந்துக்குள் இருக்கும் என்றே நினைத்திருந்தேன். அதன் பிறகு அவர் தனது முருகன் அருள் முன்னிற்கும் என்ற பதிவில் தன் வேலையைப் பற்றியும், குடும்பத்தினரைப் பற்றியும் கோடிட்டு இருந்ததை வைத்துதான் வயதில் மூத்தவர் (ஐயா) என்று அறிந்து கொண்டேன். இருந்தாலும் முருகன் அருள் முன்நிற்கும் பதிவில் அவர் சொல்லிய நம்பிக்கை சார்ந்த செய்திகள் குறித்து உடன்படவில்லை. அதுவரை பொதுவான இந்துமத செய்திகளையும், மற்ற கவிதைகளையும் மட்டுமே எழுதிவந்தார்.

என்னதான் மூடநம்பிக்கைகளை சாடுபவராக நாம் இருந்தாலும், நம்மை சமய இலக்கியங்கள், அதுவும் தமிழில் இருந்தால் அவை வெகுவாகவே நம்மை கவர்கின்றனர். அந்த வகையில் திரு எஸ்கே அவர்கள் எழுதிய அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் விளக்கம் நன்றாக இருந்தது. அதில் அவர் சிரத்தை எடுத்து தெளிவாக எல்லா பழஞ்சொற்களுக்கும் கவிதை நடையில் பொருள் விளக்கியது மிகவும் அருமையாகவும், பொருள் மிகாமலும் இருந்தது. அவரை ஊக்கப்படுத்துவதற்காக தொடர்ந்து பின்னூட்டி பாராட்டி வந்தேன். அதன் பிறகு சக பதிவர் என்பதை தாண்டி நட்பு எங்களுக்குள் வந்தது. தொலைபேசி எண்கள் அறிமுகம் ஆகியது, குரல் அறிமுகம் ஆகியது. பின்பு முகங்களை புகைப்படங்கள் அறிமுகம் செய்து வைத்தது. குடும்ப உறவுகள் அறிமுகமானது. இருவருக்கும் ஆழமான நட்பு ஏற்பட்டது. இருந்தாலும் தத்தம் பதிவில் எழுதும் எல்லாவித கருத்துக்களுக்கும் இருவருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தது. அதில் விட்டுக் கொடுப்பதும் இல்லை. கருத்தை மறுத்தல், ஏற்றுக் கொள்தல் என்பதை விடுத்து கருத்தை மதித்தல் என்ற புரிந்துணர்வு இருவருக்கும் இருந்தது.

இதற்கிடையில் வரும் ஜனவரியில் இந்தியா செல்வதாகவும், அப்படியே சிங்கை வந்து சந்திப்பதாகவும் சொல்லியிருந்தார். இடையில் எதிர்பாராத விதமாக அவருடைய அருமை அண்ணனின் திடிர் மறைவை ஒட்டி சென்னை சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். கூடவே சென்னையிலிருந்து தனிப்பட்ட பயணமாக என்னை சந்திக்க சிங்கை வந்து செல்வதாக சொன்னார். இதுவரை தொலைபேசி மூலமும், சாட் மூலமும் உரையாடி எங்களின் நட்பு நேரடி சந்திப்பு அமைய இருந்ததில் மற்றற்ற மகிழ்ச்சியாக இருந்தது. அவர் குறிப்பிட்ட தேதியில் ஜெட் ஏர்வேஸ் மூலம் சென்னையில் இருந்து டிக்கெட் (11 நவ 2006) முன் பதிவு செய்திருந்தாலும் அவருக்கு திடிரென்று சென்னையிலிருந்து மும்பை செல்ல வேண்டியிருந்த்தால் அன்று வர முடியவில்லை என தெரிவித்துவிட்டு மறுநாள் வருவதாக குறிப்பிட்டார். சொன்னபடியே மறுநாள் வந்தார். ஏற்கனவே இருவரும் சந்தித்து இருக்கவில்லை இதுவரை அவர் அனுப்பிய புகைப்படங்கள் பெரியதாக இல்லாததால் அடையாளம் காணுவதற்கு சிரமமாகவே இருந்தது. அரைமணி நேரகாத்திருத்தலுக்கு பிறகு துள்ளி உற்சாகமாக வந்த ஒருவரை தூரத்திலிருந்தே அடையாளம் கண்டு கையை அசைக்கவே அவரும் பதிலுக்கு அசைக்க அவர்தான் எஸ்கே என்று தெரிந்து கொண்டோம்.


மற்றவை நேரம் கிடைக்கும் போது தொடரும் ...

16 : கருத்துக்கள்:

said...

ஆவலுடன் அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்!

said...

//SK said...
ஆவலுடன் அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்!
//

உங்களுக்கு தெரிந்ததுதான் எல்லமும். நேரம் கிடைக்கும் போது நாள் குறிப்பு போல எழுதுகிறேன்.
:)

said...

//இருந்தாலும் தத்தம் பதிவில் எழுதும் எல்லாவித கருத்துக்களுக்கும் இருவருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தது. அதில் விட்டுக் கொடுப்பதும் இல்லை. கருத்தை மறுத்தல், ஏற்றுக் கொள்தல் என்பதை விடுத்து கருத்தை மதித்தல் என்ற புரிந்துணர்வு இருவருக்கும் இருந்தது//

நல்லா எழுதிருக்கீங்க. வேறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தாலும் அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளிக்கும் மனப்பான்மையும் பெருந்தன்மையும் இருந்துவிட்டால், நட்பு சிறக்கும் என்பது தங்கள் பதிவிலிருந்து தெளிவாகிறது. வாழ்த்துகள்.

said...

//கருத்தை மறுத்தல், ஏற்றுக் கொள்தல் என்பதை விடுத்து

கருத்தை மதித்தல் என்ற புரிந்துணர்வு இருவருக்கும் இருந்தது//

இது, இது...இதுவே நட்பு!

"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு."

ஜிகே!
மேலும் ப்ளீஸ்! அழகிய தமிழ்ப்படம் அதுவும் சிவாஜி படம் பார்ப்பது போல எழுதறீங்க!

said...

//கைப்புள்ள said...

நல்லா எழுதிருக்கீங்க. வேறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தாலும் அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளிக்கும் மனப்பான்மையும் பெருந்தன்மையும் இருந்துவிட்டால், நட்பு சிறக்கும் என்பது தங்கள் பதிவிலிருந்து தெளிவாகிறது. வாழ்த்துகள்.
//

வாங்க கைப்புள்ள,

எல்லோரையும் மகிழ்விக்கும் உங்களைப் போன்றோரைப் பார்த்துதான் நட்பு வளர்க்கிறோம். நன்றி !

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இது, இது...இதுவே நட்பு!

"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு."

ஜிகே!
மேலும் ப்ளீஸ்! அழகிய தமிழ்ப்படம் அதுவும் சிவாஜி படம் பார்ப்பது போல எழுதறீங்க!
//

கே.ஆர்.எஸ்,

உங்களைப் போல் எழுதமுடியாது, புதிரா புனிதமா ? போன்ற ஆன்மிக விசயங்களை எனக்கு எழுத தெரியாது. ஆன்மிகத்தில் உங்களைப் போன்றவர்கள் காட்டும் ஆர்வம், எழுத்து திறன் மலைக்க வைக்கிறது.

பாராட்டுக்கு நன்றி !

said...

//தெளிவாக எல்லா பழஞ்சொற்களுக்கும் கவிதை நடையில் பொருள் விளக்கியது மிகவும் அருமையாகவும், பொருள் மிகாமலும் இருந்தது//
எஸ.கேவை பார்த்த பின், இந்த அமைதியான சிறிய உருவத்திலிருந்தா குறள் விளக்கமும் குழந்தைகளுக்கான பாலியல் கல்வியும் பிராவகமெடுத்தது என்ற பிரமிப்பே இன்னும் மாறவில்லை.

//கருத்தை மறுத்தல், ஏற்றுக் கொள்தல் என்பதை விடுத்து கருத்தை மதித்தல் என்ற புரிந்துணர்வு இருவருக்கும் இருந்தது.//
நல்ல நட்பு என்பதற்கு இந்த புரிந்துணர்வுதான் வரையறை நண்பரே.

//துள்ளி உற்சாகமாக வந்த ஒருவரை தூரத்திலிருந்தே அடையாளம் கண்டு கையை அசைக்கவே//
எனக்கோ அந்த சிறிய உருவம் கையசைத்த பின்னரும் புரிய சில வினாடிகளானது.

நெஞ்சத்தகம் நக வளரும் நட்பு, வளர்ந்து தழைக்கும். வாழ்த்துக்கள்!.

said...

ஆகா...சந்திப்பு நடந்ததா! சூப்பர். உங்கள் இருவரின் கருத்துகள் எப்படி என்பதையும் அவை எப்படி வேறுபட்டவை என்பதையும் ஓரளவு நானும் அறிவேன். :-) அடுத்து என்ன நடந்தது? அதையும் சொல்லுங்கள்.

said...

சுல்தான் said...
எஸ.கேவை பார்த்த பின், இந்த அமைதியான சிறிய உருவத்திலிருந்தா குறள் விளக்கமும் குழந்தைகளுக்கான பாலியல் கல்வியும் பிராவகமெடுத்தது என்ற பிரமிப்பே இன்னும் மாறவில்லை.

நல்ல நட்பு என்பதற்கு இந்த புரிந்துணர்வுதான் வரையறை நண்பரே.

எனக்கோ அந்த சிறிய உருவம் கையசைத்த பின்னரும் புரிய சில வினாடிகளானது.

நெஞ்சத்தகம் நக வளரும் நட்பு, வளர்ந்து தழைக்கும். வாழ்த்துக்கள்!.//

சுல்தான் ஐயா,

உங்களுக்கு முன்கூட்டியே அவரது புகைப்படம் நான் அனுப்பி வைத்திருக்கவேண்டும், நினைத்துக் கொண்டிருந்தேன் மறந்துவிட்டேன்.

அமெரிக்கா திரும்பியதும் உங்கள் அக்கரையான, அன்பான கவனிப்பை பற்றியும், சென்ற பின் தொலைபேசி மூலம் கனிவாக விசாரித்ததையும் சொன்னார்.

நட்பில் உருகும், உங்களைப் போல் இனிய நண்பர்கள் கிடைப்பது தான் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.

நன்றி ஐயா !

said...

// G.Ragavan said...
ஆகா...சந்திப்பு நடந்ததா! சூப்பர். உங்கள் இருவரின் கருத்துகள் எப்படி என்பதையும் அவை எப்படி வேறுபட்டவை என்பதையும் ஓரளவு நானும் அறிவேன். :-) அடுத்து என்ன நடந்தது? அதையும் சொல்லுங்கள்.
//

ஜிரா,

எதிர் துருவங்கள் தானே ஒன்றை ஒன்று ஈர்க்கிறது !
:)
மற்ற சிறு சிறு நினைவுகளை நிச்சயம் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்வேன் !
நன்றி !

said...

முன்பின் பார்க்காமல் அரைகுறையாக அவரவர் பார்வையிலிருந்தே அடுத்தவர்கள் கருத்துகளை பதிவுகளில் படிப்பதால் நல்ல புரிதல் ஏற்படுவது இங்கே மிகக் கடினமாக இருக்கிறது. உங்கள் இருவரின் நட்பினைப் பார்த்து நான் பல நாட்கள் வியந்ததுண்டு. எதிர் கருத்தினைச் சொல்பவரை எதிரியாகவே அடியேனும் மிகச்சில நேரங்களில் பார்த்திருக்கிறேன். உங்களை எல்லாம் பார்த்து தான் அடியேன் மாற வேண்டும். :-)

said...

(1) & (0)
ம் இப்போது தான் படித்தேன்.
நல்லா இருக்கு .

said...

அடுத்தப் பகுதி சீக்கரம் போடுங்க.

said...

//குமரன் (Kumaran) said...
முன்பின் பார்க்காமல் அரைகுறையாக அவரவர் பார்வையிலிருந்தே அடுத்தவர்கள் கருத்துகளை பதிவுகளில் படிப்பதால் நல்ல புரிதல் ஏற்படுவது இங்கே மிகக் கடினமாக இருக்கிறது. உங்கள் இருவரின் நட்பினைப் பார்த்து நான் பல நாட்கள் வியந்ததுண்டு. எதிர் கருத்தினைச் சொல்பவரை எதிரியாகவே அடியேனும் மிகச்சில நேரங்களில் பார்த்திருக்கிறேன். உங்களை எல்லாம் பார்த்து தான் அடியேன் மாற வேண்டும். :-)
//

குமரன் அவர்களே,

பாராட்டுக்கு நன்றி, உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் மூலம் இது போன்று நட்பு வட்டாரத்தையும், புதிய நட்புகளையும் வளர்த்து மேலும் வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கிக் கொள்ள ஊக்கம் கிடைக்கிறது.

நன்றி !

said...

// வடுவூர் குமார் said...
(1) & (0)
ம் இப்போது தான் படித்தேன்.
நல்லா இருக்கு .

8:46 PM
//

குமார்,

உங்களை சந்தித்ததை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்வேன். நன்றி !

said...

//செந்தில் குமரன் said...
அடுத்தப் பகுதி சீக்கரம் போடுங்க.

9:07 PM
//

சின்ன குமரன்,
அடுத்த பகுதியை போட்டாச்சு !
:)