எனது இடுகைகளைப் படித்தவர்கள் பலருக்கு பரவலாக ஏற்பட்டிருக்கும் எண்ணம் 'நான் ஒரு நாத்திகவாதி'. நான் பலதரப்பட்ட பதிவுகளையும் விரும்பிப் படிப்பவன் அதுபற்றி கருத்து கொண்டிருப்பவன் என்ற போதிலும், பதிவுலகில் நுழைந்த காலகாட்டங்களில் (நீண்ட நாள் ஆனது போல் கட்டமைப்பு தான்) மிக்கவையாக கவனம் ஈர்த்தவை ஆன்மிகம், சமயம் தொடர்புடைய பதிவுகளே. அதைப்பற்றிய எழுதிய நண்பர்கள் நெருக்கமானார்கள், நெருக்கமாக இருந்தார்கள்.
ஆன்மிகம் வளர்ந்திருக்கிறது என்ற கருத்து... மக்கள் அனைவரும் எதோ ஒரு மதம் அல்லது சமயம் சார்ந்தவராக இருப்பதால் தெரியும் வெறும் தோற்றம். அது அப்படி அல்ல என்றே நினைக்கிறேன். ஆன்மிகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எல்லா காலகட்டங்களிலும் போராடியே வந்து கொண்டிருக்கிறது.
ஆன்மிகம் வென்றிருக்கிறது என்பதெல்லாம் தனிமனித நிராசைகளை தீர்த்துவைத்த நம்பிக்கையின் அடிப்படையிலான தனித் தனி கதைகளேயன்றி ஒரு சமூகப் புரட்சி செய்தது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இருந்தது இல்லை. அப்படி எதாவது செய்திருந்தால் அது சமயமாக பரிணமித்து அடிப்படைக் காரணங்கள் நீர்த்துப் போய் மறைந்து உருமாறி ஒரு பெயரில் நிலைத்திருக்கும். காலவெள்ளத்தில் பின்னால் அழிந்தே போகும். அது காலத்தின் கட்டாயம் என்றால் மிகையல்ல.
உலகில் உள்ள எல்லா மதங்களிலும் ஏற்பட்டிருக்கும் உட்பிரிவுகள் இதனை தெளிவாகவே காட்டுகின்றன. எந்த ஒரு மதமும் பிரிவுகளாக இல்லை என்று எவராலும் உறுதியாக சொல்ல முடியுமா ?
அண்மையில் தெக்கிகாட்டான் அவர்களிடம் சாட்டில் உரையாடிய போது 'ஆன்மிகம்' பற்றிய உரையாடல் வந்தது
"ஒரு மனிதன் தன்குள்ளே உள்ள இரட்டைத் தன்மையை உடைத்தெரிவது ஆன்மிகத்தின் இறுதி நிலை அல்லவா ?" என்றார் நல்ல சிந்தனை.
"ஆன்மிகத்துக்கு வரையறை இல்லை, விழிஒளியற்றோர் (Blind) யானையைத் தடவிப் பார்த்து சொல்வது போல்தான். அவரவர் அனுபவம் பொறுத்தும், தன் ஆன்மிகத் தேடலில் போதும் என்று அவர் நிற்கும் இடத்தை பொறுத்தும் இருக்கிறது" என்று சொன்னேன்
"ஆன்மிகத்திற்கும், மதவாதத்திற்கும் வேறுபாடு இருக்கிறது" என்றார்
"முதலில் இரண்டையும் பிரிக்க முயற்சி நடப்பதே இல்லை, பின்பு எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது ?" என்றேன்
ஆன்மிகவாதிகள் பிறப்பிற்கும் இறப்பிற்கும் விதி, இறைவனின் லீலை, இறைச் சித்தம் இன்னும் எந்தனையோ காரணங்களைச் சொன்னாலும், ஆன்மிகத்தால் தன்னை நோக்கி 'நான் யார்....நான் ஏன் பிறந்தேன் ?' என்று ஒருவன் தன்னைத்தானே கேட்க வைக்க முடியவில்லை என்றால் ஆன்மிகவாதிகள் சொல்லும் பிறப்பு கொள்கையும், அதன்பயனென அத்தனை காரணங்களுமே பயனற்றவை. அதைக் கேட்கவைப்பதில் ஆன்மிகம் இன்னும் போராடியே வருகிறது.
மதங்களால் நன்மை ஒன்றும் இல்லை. ஒரு கோட்பாட்டில் அதில் மூட நம்பிக்கையே மிக்கவையாக இருந்தாலும் அந்த நம்பிக்கையில் அந்த மதத்தைக் கடைபிடிக்கும் மனிதனை சாகும் வரையில் வைத்திருக்கிறது அம் மதங்கள்.
மதங்களைப் தவிர்பவனே ஆன்மிகவாதி, அதைச் செய்வதில் நாத்திகனே முன்னிற்கிறான். என்பார்வையில் நாத்திகனே உன்மையான ஆன்மிகவாதி. :) மற்றவர்கள் சுய தேடலைத் மறந்து கடவுள் கோட்பாடென்னும் மதக் கொள்கைகளை தாங்கிப்பிடிப்பவர்களாகவே உள்ளனர்.
மாதவிப் பந்தல் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு எழுதத் தொடங்கி சற்று நீண்டுவிட்டது,
ரவியின் மாதவிப் பந்தல் பதிவு பற்றி சொல்ல வேண்டும்... தலைப்பு தவறிவிடக் கூடாதல்லவா ?ஏற்கனவே ஒரு தொடர்கதை மற்றும் ஒரு பதிவு பற்றிய நான் எழுதிய இருவேறு விமர்சனங்களுக்கு பிறகு என்மீதான அவதூறு விமர்சனங்களைத் தொடர்ந்து ... அதன் தொடர்புடைய (முன்னாள்) நண்பர்களிடம் நல்லுறவு இல்லை. இதையெல்லாம் சென்டிமெண்டாக எடுத்துக்கொண்டு கண்ணபிரான் ரவிசங்கர் பதிவை விமர்சனம் செய்ய கொஞ்சம் தயங்கினேன். ஒருசிலவற்றில் கடந்த காலங்களின் நிகழ்வுகளை தற்காலத்துடன் ஒப்பீடு செய்வதில் உடன்பட்டவன் அல்ல, எல்லாமும் எல்லாவற்றிற்கும் எப்போதும் பொருந்தும் என்று சொல்ல முடியாது என்பதால் எனது எண்ணத்திற்கு தடைபோட்டு
மாதவிப் பந்தலின் நிழலில் அமர்ந்து பார்க்கிறேன். குளுமையான நிழல், கூடவே பந்தலின் அடர்த்தி சற்று குறைவால் கீற்றாக தெரியும் சூரிய ஒளி... அது சுடவில்லை... தனியாகத் தெரிந்தது.இவரது ஆன்மிக சிந்தனைகளில், எழுத்தில் குறைச் சொல்ல முடியுமா ? எனக்கு அனுபவமோ அறிவோ போதாது என்றே நினைக்கிறேன். என்னளவில் அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தெரிந்து கொண்டதில், ... எழுத்து அல்லது தன்னை நிலைநிறுத்துக் கொள்ளவேண்டும் என்பதைத் தாண்டி மிகவும் சிறப்பாகவே ஒரு சேவையாகவே செய்து வருகிறார்.
பால் இனிதுதான், அதனுடன் சர்கரை ஏலம் சேர்க்கும் போது, இனிமையும் மணமும் சேர்ந்து கொள்ளும், பாலின் சுவையை மேலும் இனிமை சுவை மிக்கவையாக ஆக்கிவிடும். இரவிசங்கர் எழுத்துக்களில் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருந்ததில்லை. பிறரை கேலி செய்து அதை நகைச்சுவை என்றாக்கும் அபத்தங்களை இவர் செய்ததே இல்லை.
எவருடைய எதிர்கருத்தையும் தன்மீதான எதிர்தாக்குதல் போலவோ, தன்னை மேதாவி என்று காட்டிக் கொள்ளும் படியோ அவர்களுக்கு பதில் கருத்துக் கூறியதில்லை. எனக்கு தெரிந்து நாகரீகமற்ற கேள்விகளைக் கூட பொறுமையாகக் கேட்டுக் கொண்டு, பதில் அல்லது மறுமொழி சொல்வதன் நோக்கம் கேட்டவர்களை நாணம் கொள்ளச் செய்யவேண்டும் என்ற எண்ணமில்லாமல் இவர் சொல்லும் மறுமொழியால், நாகரீகமற்று கேட்பவரும் அடுத்தமுறை இவரிடம் அதுபோல் கேட்பதைத் தவிர்பர் அல்லது இவர் சொல்வதை ஏற்றுக் கொள்வர்.
நானும் இவரிடம் கற்றுக் கொண்டு மென்மேலும் வளர்த்துக் கொள்ள நினைப்பது பொறுமையும், மற்றவர்களை மதிக்கும் தன்மையையும் தான். அதைதாண்டி அவர் எழுதும் ஆன்மிகத்தில் எனக்கான பயன்பாடு குறைவே.
இவர் இடுகைகளில் பின்னனிகளுடன் கூடிய அரிய தகவல்களும், அரிய புகைப்படங்களும் ஒருசேர அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது. மற்றபடி அவரது ஆன்மிக எழுத்துக்களை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை என்று சொல்வதில் நான் வெட்கப்படவில்லை.
நான் இவரிடமும் இவரைப் போன்ற ஆன்மிகவாதிகளிடம் எப்போதும் வலியுறுத்துவது, உருவழிபாடு என்ற ஒன்றை மட்டும் சார்ந்திருக்கும் பக்தி இலக்கியங்களைத் தாண்டியும் கொஞ்சம் மேலே செல்லுங்கள்.
ஓரிறை (இறைவன் ஒருவர்), இறையற்ற தன்மை இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். மற்றபடி உருவழிபாடு அதைச் சார்ந்த மதக் கொள்கைகள் என்னதான் புனித முலாம் பூசப்பட்டாலும் அவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் வேற்றுமைகளை வெளிச்சம் போட்டு வெறுப்புகளை வளர்க்கின்றதேயன்றி சமுக மாற்றத்தை ஒருக்காலும் அவை ஏற்படுத்திவிடாது. இறை நம்பிக்கையுடையவர்கள் ஓரிறை என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தால் 'ஆன்மிகம்' என்று சொல்லப்படுவதன் பயனை அனைவரும் அடைவர். பல கடவுள்கள் வெறும் பக்திக் கோட்பாடுகளேயன்றி அவை ஆன்மிகம் அல்ல. அதே போல் பல மதங்கள் சொர்கம் நரகம் என்ற நம்பிக்கைச் பயமுறுத்தல் தவிர்த்து இவை தனிமனிதனுக்கு எந்த நன்மையும் செய்தது இல்லை. எந்த ஒரு மதமும் சிறந்த மதம் கிடையாது. அப்படி ஒன்று இருந்திருந்தால் எப்போதோ உலகம் முழுவதும் ஒரே மதமாக ஆகி இருக்கும்.
இந்துமதத்தில் உருவழிபாடு போற்றப்படுவதற்குக் காரணம், இல்லற வாழ்க்கைப் போலவே கடவுளுக்கும் குடும்பம் மனைவி மக்கள் அமைத்து வழிபடும் முறை இல்லறவாழ்வின் மேன்மையை புனித இடத்தில் நிறுத்திப் பார்க்கும் மன வடிவம். உருவ வழிபாடு முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் இறை நம்பிக்கை என்ற பெயரில் வெறும் சடங்குகளாகவும் அதன் தொடர்பில் 'தீண்டாமை / பார்பனீயம்' போன்ற மோசமான கட்டமைப்பை கட்டிக் காக்கும் கேடயங்களாக இருப்பதால் நான் உருவவழிபாட்டை ஆன்மிகத்தின் அடையாளமாக நினைப்பது இல்லை.
அன்பு நண்பர் கண்ணபிரான் ரவி சங்கர் அவர்களே,
வைணவம், சைவம், என்று பிரித்துப் பார்த்தல், அவை அவற்றின் சிறப்புத்தன்மைக்காக தனியாகவே பார்க்க வேண்டும், ஒன்றில் உள்ள சிறப்பு மற்றதில் இல்லாதது குறையல்ல ஒருவேளை அவை தேவையற்றதாகக் கூட இருக்கும். இன்றைய தமிழக இந்துக்களிடம் ஆழமாக பதிந்துவிட்டது திருமாலுக்கும் சிவனுக்கும் இடையே உள்ள உறவு மச்சான் (பார்வதியின் அண்ணன்) என்பதே. மோகினி - சிவன் போன்ற (கள்ள) உறவும் உண்டு. வைணவம், சைவம் என்று பிரித்துப் பேசுவது எந்தவிதத்திலும் பக்தியாளர்களுக்கு பயன்தராது. நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் என்று சொல்லவில்லை. பெரும்பாண்மை பதிவுகள் வைணவம் சார்ந்ததாகவே இருக்கிறது என்று நான் சொல்லி புரிந்து கொள்ள வேண்டுமா ? கண்ணபிரான் ரவிசங்கர் ஒரு வைணவர் என்று என்போன்ற பலருக்கு ஏற்பட்ட எண்ணத்தை உடைத்து எரியுங்கள்.
மேலும் ஒரு வேண்டுகோள்,
வலைவரை வந்து நெடிது வளர்ந்திருக்கும் தமிழை செழிக்க வைக்க வேண்டும்,
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் இறைமறுப்பாளர்களா ? இறை ஏற்பாளர்களா ? இது சிறந்த புலவர் யார் இளங்கோவா ? கம்பனா ? என்று கேட்பதற்கு ஒப்பானது. இருபக்கமும் அதை நன்றாகவே செய்துவந்திருக்கிறார்கள், வருகிறார்கள். இங்கு வலையில் எழுதுகிறோம், நமது எண்ணங்களை எழுதும் போது கூடவே தமிழார்வத்தையும் ஏற்படுத்தும் வண்ணம் எழுதிவரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செம்மொழி தகுதி கிடைத்து இருப்பதால் தமிழருக்கு என்ன நன்மை ?என்றெல்லாம் கேட்பவர்களும் தமிழர்களாக இருக்கிறார்கள். நாம் தமிழை செம்மையாக எழுத எழுத படிப்பவர்களின் எண்ணங்களிலும் தூய தமிழ்ச் சொற்கள் பதிந்துவிடும், 1900 ஆண்டு இருந்த தமிழுக்கும் தற்பொழுது எழுத்துத்துத் தமிழுக்கும் வேறுபாடுகள் மிக்கவையாகவே இருக்கிறது. தற்பொழுது 90 விழுக்காடு தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி வருகிறோம் அதை 100 விழுக்காடாக மாற்றும் முயற்சி நமது கையில் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் எளிமையான, புரியும் படியான தமிழ்ச் சொற்களை பதிவில் பயன்படுத்துவது எனக்கும் கடினம் மிக்கவையாகவே இருந்தது, தற்பொழுது வேற்று மொழிச் சொற்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு எழுதுவது எனக்கு இயல்பாகிவிட்டது.
உங்கள் இடுகைகள் அனைத்தும் பெரும்பகுதி தூயத்தமிழாகவே இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிசியில் கருங்குருணை கிடப்பது போல் வெகு சில வேற்றுச் சொற்கள் இருக்கின்றன. எழுதும் போது ஒருமுறை படித்துவிட்டு வேற்று மொழிச் சொற்களின் மாற்றுச் சொற்களை அந்த இடங்களில் சேர்க்கலாம், சங்ககாலத் தமிழில் எழுதவேண்டும் என்று சொல்ல வரவில்லை, புழக்கத்தில் இருக்கும் சொற்களையே முற்றிலுமே பயன்படுத்த முடியும். தங்கள் எழுதும் பதிவுகள் தனித்தமிழாக வரவேண்டும் என்று விரும்புகிறேன். பலமொழிகள் தெரிந்த உங்களுக்கு தமிழில் உள்ள வேற்றுமொழிச் சொற்களின் அடையாளம் நன்றாகவே தெரிந்திருக்கும். அவைகளை களைந்துவிட்டு எழுதவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு தகுதி இருப்பதாக நினைத்து மாதவிப்பந்தல் பற்றி என் எண்ணங்களைப் பகிரிந்து கொள்ளக் கேட்டு வாய்ப்பளித்த கண்ணபிரான் ரவிசங்கர் (கேஆர்எஸ்) என்றும் ரவி என்றும் அன்புடன் அழைக்கப்படும் ரவி அவர்களுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.விதிகள் (நண்பர்களுக்காகவும்) காலத்தால் (இடம்) மாறும். :):):)
--
அன்புடன்,
கோவி.கண்ணன்