அப்பாவுக்கு அப்பாவாக !

இருபதை கடந்த இளைஞனாய் இருந்த நான்
இல்லறம்கான திருமணம் செய்து வாழ்தினாய் நீ !
இனிய இல்லறம் நடத்திய உனக்கு
இன்னொரு அறுபதாம் திருமணம் செய்து வாழ்துப் பெற்றேன் நான் !
நடந்த என்கால்கள் மிதிவண்டி பழக
மிதிவண்டி வாங்கி வந்தாய் நீ !
நடந்த உன்கால்கள் தடுக்கி விழாமல் இருக்க
ஊன்றுகோல் வாங்கி வந்தேன் நான் !
தேழனாய் மாறி பாலன் என்னுடன்
பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்தாய் நீ !
தோழனாய் மாறி பழுத்த உன்னுடன்
பரமபதம், சோளி விளையாடி மகிழ்ந்தேன் நான் !
திருவிழாக்களுக்கும், கடைவீதிகளுக்கும்
அன்பாக தூக்கி சென்றாய் நீ !
திருக்கோவில்களுக்கும், கடற்கரைகளுக்கும்
அன்பாக அழைத்து சென்றேன் நான் !
அருகிலிருந்து அக்கறையாய் எனக்கு
அரிச்சுவடி சொல்லி கொடுத்தாய் நீ !
அருகிலிருந்து ஆர்வத்துடன் உனக்கு
அன்றாட செய்திகளை வாசித்தேன் நான் !
யானையாய் மாறி என்னை இடம் வலமாய்
தூக்கி சுமந்தது மகிழ்த்து, மகிழ்ந்தாய் நீ !
பூனையாய் மாறி உன்னை அங்கும் இங்கும்
தூக்கி அறைகுள் இடம் மாற்றி நெகிழ்ந்தேன் நான் !
தவழ்ந்தது போதும் என்று
தள்ளாடி தள்ளாடி எழுந்த நான்
தடுக்கி விழாமல் நடை பழக
தள்ளும் நடைவண்டி வாங்கினாய் நீ !
தளர்ந்ததால் உன் நடை
தள்ளாடி தள்ளாடி
தவழவும் நிலைக்கு வந்த போது
தள்ளும் சற்கர நாற்காலி வாங்கினேன் நான்!
எனக்கொரு குழந்தையாய் மாறினாய் நீ !
உனக்கொரு தந்தையாய் மாறிப் போனேன் நான் !
கருவறைவிட்டு வந்த என்னை,
ஆனந்த கண்ணீருடன், நெகிழ்ந்த இதயத்துடன்
கைகளில் ஏந்தி சென்றாய் நீ !
கல்லறைக்குள் விட்டு செல்ல உன்னை,
ஆ(ற்)றாத கண்ணீருடன், கனத்த இதயத்துடன்
தோள்களில் தூக்கி செல்கிறேன் நான் !
அன்புடன்
கோவி.கண்ணன்
இணைந்த கைகள் அந்திநேர தென்றல் காற்று....பாடலையும் கேட்டு மகிழுங்கள்