Sunday, January 28, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

காலத்தின் களம் மாறிவிட்டது !


கெட்டதுக்கும் காலம் உண்டு,
நல்லதுக்கும் காலம் உண்டு,
எல்லோருக்கும் காலம் உண்டு !

எழுச்சியும் வீழ்ச்சியும் காலத்திலுண்டு,
துக்கமும் மகிழ்ச்சியும் காலத்திலுண்டு,
ஹிட்லரும் ஹிரோசிமாவும் காலத்திலுண்டு
அலெக்சாண்டரும் நெப்போலியனும் காலத்திலுண்டு
ஏசுபிரான் முகமது நபி காலத்திலுண்டு
புத்தபிரான் சமணமுனி காலத்திலுண்டு
கண்ணபிரான் ஆதிசங்கரர் காலத்தில் உண்டு
அன்னை தெரசாவும், சாரதா தேவியும் காலத்திலுண்டு
உயர்ந்தவர்கள் தாழ்ந்ததுவும் காலத்திலுண்டு
தாழ்த்தபட்டவர்கள் உயர்ந்ததுவும் காலத்திலுண்டு
காலம் தவிர்த்து காலத்தின் நிகழ்வுகள் காலமாவதுண்டு !

காலம் ஊடே செல்வது வெறும் நிகழ்வுகள்
நல்லவை கெட்டவை என்பது காலத்துக்கு இல்லை
அது நம் கண்களுக்கும், மனத்துக்கும் மட்டுமே !

பி.கு: திடீர் பில்ட் அப் புது ப்ளக்கர் மாற்றியதற்காக :)

Wednesday, January 24, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

பிரிவும், பரிவும் ! (கவிதை)


வார்த்தை வழுக்கலில் தடுமாறி
விழுந்தது நம் நெருக்கம்,
எவர் மீது தவறு என்று
ஆராய்ந்ததில் ஞாயங்களை
விட்டு விட்டு காரணங்களை
தேடி தன்னை சாந்தப்படுத்திக் கொண்டு
அமைதியாய் இறுகியது மனம் !

இறுகிய பாறையினுள்ளும்
வாழும் தேரையாய்
உன் நினைவுகள் !

நாட்கள் நகர,
ஈரம் காய்ந்து
நீர்த்துளிகள் எல்லாம்
ஆவியாகி மறைந்தது
என்று நினைத்திருந்த போது,
ஏதோ ஒரு பெரிய நிழல்
என் மீது மெதுவாக
வந்து விழுந்தது !
மேலே பார்த்தேன்
நீர்துளிகள் தூய்மையாக்கப்பட்டு
மேகங்களாக அவை
மாறியிருக்கின்றன
என்பதை உணர்ந்தேன் !

மழைத் துளிகளை பிரசவிக்க வேண்டி
ஈரக் காற்றுக்காக ஏங்கும்
மேகம் காற்றில் மெதுவாக
மிதந்து கொண்டிருந்த வேளையில்

வாடைக்காற்று என் இதயத்தில்
வீச உன் வாசல் தேடி
நடந்து கொண்டிருக்கும் போது,
அங்கும் மழையோ அதிசயித்தேன்,
கண்களின் ஓரத்தில் ஒரு
ஈரத் துளியுடன்
என்னை எதிர்கொண்டு
வந்துகொண்டிருக்கிறாய் நீ !

Tuesday, January 23, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

காற்றுள்ள போதே ...! (கவிதை)


உலகம் கண்களை எப்போதும்
திறந்து வைத்துதான் இருக்கிறது,

ஏன் பிறந்தோம் என்று நினைக்கும் பிறப்புகளின்
கவனம் அதன் திறந்த கண்களால்
ஈர்க்கப்படுவதில்லை !

அதன் கண்கள்,
சில சிறப்பான பிறப்புகளின் பிறப்பு நாட்களை
சிறப்பு நாட்க்கள் ஆக்கி பார்கிறது !
சில சிறப்பான பிறப்புகளின் இறப்பு நாட்களை
நினைவு நாட்கள் ஆக்கிப் பார்க்கிறது !

பல பிறப்புகளின் இறப்புகள் இறுதிநாளில்
எல்லாவற்றையும் முடித்துக்கொள்கிறது !
சில இறப்புகள் மட்டுமே நினைவு நாட்களாகின்றன !

எந்த நொடியிலும் எதோ ஒன்று செய்கிறோம்,
அதில் 'ஏன் இதைச் செய்கிறோம்?'
என்ற கேள்வியுடன் தொடங்கினால்
நொடிகள் படிகள் ஆகும் !

மூச்சுக் காற்று உள்ள போதே...
முடிந்தவரை சிறப்புகளை உருவாக்கி
உயர முயற்சிப்போம், யார் கண்டது ?
நம் பிறப்பும் இறப்பும் பொருள் பொதிந்தாக
மாறக் கூடும் !

பின்குறிப்பு : அறிவுரை சொல்லும் கவிதைகள் என்றால் எனக்கு அலர்ஜி... இதில் அப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை ! :)

Saturday, January 20, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

வேண்டுவது வரம் ...!(கவிதை)

நாமக்கல் சிபியார் (வாங்கி வந்த சாபம்!), ஆத்திக எஸ்கே ஐயா (உன்னுடன் நானும்!) அவர்களை தொடர்ந்து கருக்கலைப்புக்கு எதிராக மேலும் ஒரு குரல் ....

வேண்டுவது வரம் ...!(கவிதை)


வெப்ப மூச்சுகளின் உரசலுக்கு
விளைந்ததுதான் என் குறையா ?
வெளியுலகம் காணும்முன்
வெந்து, நான் இறப்பது முறையா ?

கருவில் எருவாகும் என் நிலை,
அது உன் படைப்புத் தொழிலால்
என்போன்றோர் மேல் செய்யும்
ஒரு வன் கொலை !

கடவுளே, கருவரை(றை)யிலும் நான்
கட்டிக்கொள்ள உடைகொடு
பெண் சிசு இதுவென்று, குறி'பார்த்து
கருவறுக்கும் நிலையறு !

கடவுள் வரமென்று காத்திருப்பவர்
பலர் இருக்க, இது
வேண்டாத கர்பம் என்று
வேரறுப்பவரிடம் தோற்றுவைக்காதே !

Thursday, January 11, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

கீ.வீரமணி ஐயாவுடன் நேரடி சந்திப்பு !

11/ஜென/2007 அன்று (நேற்று) நானும் நண்பர் குழலியும் தி.க பொதுச்செயலாளர் மானமிகு கீ.வீரமணி ஐயாவை சந்தித்தோம். கடந்த சனிக்கிழமை நடந்த சமூகவியல் நிகழ்ச்சிக்கு பிறகு நண்பர் குழலி வீரமணி ஐயாவை சந்தித்தித்து பேச இருப்பதாக சொன்னார், என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்றேன். அவருடைய நண்பர் திரு கலைச்செல்லவன் அவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

மாலை 6.30 மணிவாக்கில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி இருந்தார்கள்.அலுவலகத்தைவிட்டு கிளம்பும் போது 6 மணி ஆகியிருந்தது. நல்ல மழை. நண்பர் குழலி வாடகை காரில் சென்று கொண்டிருப்பதாக சொன்னார். போகும் போது என்னையும் பிக்-அப் செய்து கொள்ளுங்கள் என்றேன். வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் என அவர் வருவதற்குள் 6.30 மணி ஆகி இருந்தது வாடகை காரில் நானும் சேர்ந்து கொண்டேன். அதன் பிறகு மறுபடியும் போக்குவரத்து நெரிசல் ... ஒருவழியாக 7.00 மணிக்கு போய் சேர்ந்தோம்.

கி.வீரமணி ஐயா ஆடம்பர ஹோட்டலில் தங்கி இருக்கவில்லை. அப்பார்ட் மெண்ட் (அடுக்குமாடி) வீட்டில்தான் தங்கி இருந்தார். எளிமையான தோற்றம், கனிவான பார்வை, அன்பான உபசரிப்பு இவைதான் வீரமணி ஐயாவை சந்தித்தபோது உடனடியாக அவரிடம் உணர்ந்தேன். கை கூப்பி வணக்கம் செலுத்தி அருகில் இருந்த இருக்கையில் அமரச்சொன்னார்.

எந்த ஊர், எங்கு படித்தீர்கள், இங்கு எங்கே வேலை செய்கிறீர்கள், என்ன வேலை செய்கிறீர்கள் என்று இருவரிடமும் கேட்டார். சொன்னவற்றை பொறுமையாக கேட்டுக் கொண்டு. எங்கள் ஊரில் உள்ள தி.க முக்கியஸ்தர்களின் பெயரை சொன்னதும் சரியாக அவர்களைப் பற்றி மற்ற தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். நல்ல நினைவாற்றல்.

பின்பு இணையத்தில் தமிழ் புரட்சிபற்றி பேசினோம். நண்பர் குழலி பெரியாரின் புத்தகங்ளில் உள்ள செய்திகளை வெளியிட அனுமதியளிக்க வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் வைத்தார். பெரியாரின் கருத்துக்களைச் எடுத்துச் செல்ல என்ன உதவி வேண்டுமானலும் செய்கிறேன். பதிப்புரிமை சிக்கல் எதுவும் இல்லை. ஐயாவின் புத்தகங்களில் இருந்து எதைவேண்டுமானலும் இணையத்தில் போட்டுக் கொள்ளுங்கள் என்று அனுமதியளித்தார்.

இருவருக்கும் காபி கொடுத்தார்கள். பெரியாரின் அன்றைய கருத்துக்கள் தீர்கதரிசனமாக இன்றைக்கு எவ்வாறு நடைமுறையில் இருக்கிறது எனபதை விளக்கினார். பெரியார் படம் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டார். தன்னைப் பற்றி அதிகம் சொல்லவில்லை அவர் பேச்சு முழுவதும் பெரியாரே ஆக்கிரமித்து இருந்தார். அடுத்தக்கட்ட தலைவர்கள் யாரும் தன்னுடைய தலைவரை மீது இவ்வளவு ஈடுபாடு வைத்திருக்க மாட்டார்கள். கலைஞர் கூட அண்ணாவை பற்றி பேச வேண்டிய இடத்தில் தான் பேசுவார். ஆனால் வீரமணி ஐயாவின் எண்ணம் முழுதும் பெரியாரே நிறைந்திருக்கிறார் என்று பார்க்கும் போது அவர் பெரியார் மீது வைத்திருக்கும் பேரன்பும், நன்மதிப்பும் அவரின் தனிச்சிறப்பாக போற்றத்தக்கது.

பொதுவாக சிலவற்றை பேசும் போது நேரமின்மை என்று சிலர் சொல்கிறார்கள். நமக்கு இது கிடைத்தே ஆகவேண்டும் என்கிற போது எல்லோருக்கும் நேரம் கிடைக்கிறது. நாம் ஈடுபாடு காட்டதவைகளுக்குத்தான் நமக்கு நேரமில்லாமல் போவதாக சொல்கிறோம். சில செயல்களில் ஈடுபடும் போது அவற்றிற்குரிய முக்கியத்துவம் கொடுத்தால் அங்கு நேரமின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஈடுபாடு இருக்கும் போது நேரம் தன்னால் கிடைக்கும் என்றார்.
முதல் சுயமரியாதை திருமணம் எங்கே எப்போது எவ்வாறு நடந்தது என்றெல்லாம் சொன்னார். அன்றைய காலகட்டத்தில் பலதாரம் திருமணம் சமூக பழக்கமாக இருந்தது. பெரியார் நடத்திய முதல் திருமணமே இருதார திருமணம். அன்றைக்கு அதை பெரியார் செய்து வைத்தாரே என்று இன்றைய காலகட்டத்தில் யாரும் இருதார திருமணத்தை நியாப்படுத்த முடியாது. சமூகம் மாறும் போது எந்த கருத்தானலும் மாறிக் கொண்டே வரும் என்றார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினோம் உற்சாகமாக பேசினார் கொள்கைகள் என்பதை உடனடியாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் படிப்படியாகத்தான் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். 10 % முதல் 100 %வரை கொள்கை உடன்பாடு என்பதில் எவ்வளவு கருத்து சென்றுள்ளது பார்க்கும் போது இன்றைக்கு 10 % என்பது 20% ஆக மாறும் என்று நினைக்க வேண்டும் அளவைபார்க்கக் கூடாது. இதுபோல் நேர் எண்ணங்களை (பாசிடிவ் திங்கிங் ) இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

சமூகவியல் பற்றிய எங்களது வலைப்பதிவு ஆக்கங்களை அவரிடம் கொடுத்தோம்.. சிலவற்றை உடனே படித்தார் ... பின்பு புகைப்படம் எடுத்துக் கொண்டு விடைபெற்றோம். மிந்தூக்கி வரை வந்து வழியனுப்பினார். வெளியில் சென்றால் சாதாரண உடையில் (கருப்பு சட்டை இல்லாமல்) பொது போக்குவரவு வண்டிகளில் (பஸ் மற்றும் இலகு இரயிலில்) தான் செல்வாராம்.

தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஒரு கட்சி தலைவரின் எளிமையும், பண்பும், விருந்தோம்பலும் என்னை வியக்கவைத்தது

பின்குறிப்பு : இங்கும் நான் அரசியல் பற்றி எழுதவில்லை. ஒரு கட்சித் தலைவரை தமிழன் என்ற முறையில் சந்தித்துப் பேசி நெகிழ்ந்ததை பகிர்ந்து கொள்கிறேன். தயவு செய்து அரசியல் விமர்சனங்களை இங்கு கொண்டுவராதீர்கள்.

Wednesday, January 10, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

மனதின் பயணம் !(கவிதை)


பிம்பங்களை தோற்றுவித்து
திணறி போகிறது மனம் !
எது உண்மை ?
எது பொய் ?
என்ற தேடலில் எப்போதுமே ஆராயாமல்,
ஆள்மனப் பகுப்பில்
வாய்மையை புதைத்து
உண்மையைவிட நன்மை
எது என்பதை மட்டும் பார்த்து
நினைப்பதிலேயே மனம்
திருப்தியுடன் நின்றுவிடுகிறது !

நன்மை என்று நினைத்ததெல்லாம்
எந்த நன்மையும் செய்துவிடவில்லை !
தீமை என்று நினைத்ததெல்லாம்
தீண்டி விடவும் வில்லை !
என்ற கடைசி நொடி சுயதரிசனத்தில்
வாய்மை எனும் கல்
ஆழ்மனக் கண்ணாடி மீது விழ
உடனே உடைந்து போகிறது பிம்பங்கள் !
மனம் தொலைந்து போகிறது !
எல்லாவற்றையும் அங்கேயே
போட்டுவிட்டு,
தொலைந்த மனதை தேடி
மற்றுமொரு பயணத்திற்கு
தயாராகிறது நித்ய ஜீவன் !

Monday, January 08, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

உலகநாயகனின் தசவதாரம் பகுதி 4: (காமடி)

பகுதி 1*/*பகுதி 2*/*பகுதி 3*/*பகுதி 4

முதல் பகுதியில் இருந்து படித்தால் தான் புரியும் ... இது 4 ஆவது பகுதி !

படம் வெளிவருவதற்குள் கதை வரக்கூடாது என்று நீதி மன்றத்தில் பொது நலவழக்கில் தடை உத்தரவு வாங்கி இருந்ததால் கொஞ்சம் தாமதமாக இந்த பகுதி வந்திருக்கிறது :)

கமல் : ஆமாம் ரவி ... கோபி.அன்னான் மேக்கப் போடும் போது இப்ப கோபி.அன்னானுக்கு இருப்பதைவிட கொஞ்சம் நரைமுடி கம்மியாக வைத்து மேக்கப் போடனும், இது அந்த மாமிக்கு க்ளுவா அமைச்சிடுது.

ரவி : எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை ... உங்க ரேஞ்சை கற்பனைப் பண்ணவே முடியலை !

கமல் : உணர்ச்சி வசப்பாடாதிங்க ரவி..

ரவி : இன்னொரு பெக் போட்டுக்கட்டுமா ?

கமல் : போடுங்க... நீங்க தூங்காமல் இருக்கனும் அதான் முக்கியம்.. ம் அப்பறம் நம்ப மாமி அதே போல பாஞ்சாங்க ... ஆனால் இந்த தடவை அன்னான் வேசம் போட்ட தீவரவாதியின் காலை பாஞ்சி புடிச்சி கிறுகிறுன்னு சுத்தி சுவத்துல அடிக்கிறாங்க ... அவன் அப்படியே மயங்கி சரிஞ்சிடுறான்.. இங்கே ட்ரிபில் ஆக்ட்

ரவி : புரியுது கமல் சார் ... என்னையும் சிங்கீதம்.சினீவாஸ் ராவ் மாதிரி நெனெக்காதிங்க

கமல் : என்ன செய்றது பழக்க தோசம்

ரவி : அப்பறம் கதையை எப்படி வளர்க்கப் போறிங்க

கமல் : அதே போல் புஷ்தான் டெல்லி பார்க் ஷரடினில் தங்கியிருக்கிறான்னு நெனெச்சிக்கிட்டு ஹமாஸ் தீவிரவாதி ஒருத்தன் பாலஸ்தினாத்திலிருந்து அடுத்த ப்ளைட்டில் வந்து இறங்குகிறான்.

ரவி : அவனுக்கு யாரைப் போடலாம் ... ம் விருமாண்டியில் வில்லனா வர்றாரே பசுபதி அவுரப் போடலாமா ?

கமல் : நல்ல கதையைக் கெடுத்திங்க... இங்க அந்த பாலஸ்தின தீவிரவாதி வரப்போவது டோனிப் ப்ளையர் கெட்டப்பில்

ரவி : அப்ப அது உங்களுக்குத் தான் செட் ஆகும்

கமல் : இப்பதான் நான் சொல்லவந்ததை புரிஞ்சிக்கிட்டிங்க... இது 7 வது கெட்டப்

ரவி : இந்த முறை தீவிரவாதி எப்படி வருகிறான் ? சைரன் வச்ச காரா ?

கமல் : இல்லை தீவிரவாதி சாதாரண ஆளாகத்தான் வருகிறான் .. அப்பறம் ஹோட்டல் பாத்ருமில் தான் டோனிப் ப்ளையர் வேசம் போடுகிறான்

ரவி : அப்ப அங்கே இரண்டு வேசமா ?

கமல் : இல்லை .. ஒன்று தான் ... நேராக பாத்ரூமில் இருந்து வெளியே வருவதுபோல் ஷாட் வச்சிடுங்க... அவன் நேரா புஷ் தங்கியிருக்கிறதா நினைச்ச ரூமுக்குள் நுழைகிறான்

ரவி : இந்த முறை எப்படி வேசம் சரியாகப் போட்டாரா ?

கமல் : சரியாகப் போட்டார் அதிலும் ஒரு சஸ்பென்ஸ்

ரவி : ஆவலை அடக்க முடியவில்லை சொல்லுங்க ... மாமிதான் இந்த முறையும் கண்டுபிடித்தாரா ?

கமல் : இல்லை ... இந்த முறை நாடக நடிகரே கண்டுபிடித்துவிடுகிறார்

ரவி : ம் சொல்லுங்கள்

கமல் : அதாவது அந்த நாடக நடிகர் ... டோனி ப்ளையர் அருகில் சென்றதும் உடனே கண்டுபிடித்துவிடுகிறார்.. எப்படி என்றால் உயரம் .. டோனி ப்ளையர் நல்ல உயரம் ... போலி டோனி ப்ளையர் அவ்வளவு உயரம் இல்லை...! அருகில் சென்றதும் லாவகமாகப் பிடித்து ... பின்னால் தீவிரவாதியின் கைகளை மடக்குகிறார்... அப்போது மாமி சேலையில் ஒரு பகுதியை கிழித்து தீவிரவாதியின் கைகளை கட்ட உதவுகிறார்... இங்கே 4 வேசமும் ஒரே நேரத்தில் காட்டனும் .. அதாவது ஒரு நாடக நடிகர்... ஒரு ஏர்கோஸ்டஸ் மாமி.. அடிப்பட்டு கிடக்கிற போலி கோபி அன்னான் கடைசியாக ... போலி டோனி ப்ளையர்.

ரவி : நெனிச்சிப் பாக்கமுடியாத கற்பனை சார் உங்களுக்கு ... !

கமல் : இன்னும் 3 வேசம் பாக்கியிருக்கு...கிளைமாக்ஸ் பாக்கியிருக்கு

ரவி : இனி தூக்கம் வர்ராது கதை முடிவை நெருங்கிடுச்சி .. ம் சொல்லுங்க

கமல் : இதெல்லாத்தையும் டெல்லி போலிசாருக்கு போன் பண்ணி இரண்டு பேரும் சொல்லிவிடுகிறார்கள் டெல்லி பாதுகாப்பு அமைச்சர் நேரில் வருகிறார்... பாதுகாப்பு அமைச்சராக நான் .. 8 வது வேசம் !

ரவி : கெட்டது போங்கள் !

கமல் : ரவி என்ன சொல்றிங்க ...???

ரவி : மந்திரி வேசம் நெகடிவ் கேரக்டர் ஆச்சே !

கமல் : வேசம் எதுவாக இருந்தால் என்ன ... கேரக்டர் பேசப்படனும் ... அரசியல் வாதி வேசம் இதுவரை போட்டதில்லை ரவி

ரவி : ஹீரோ இசம் பேசுறவங்க இதை மறந்திடுறாங்க கமல் சார்... நீங்க ஒரு ஆள்தான் வெளிப்படையாக இருக்கிறீர்கள்

கமல் : இதுக்கு ஒரு பாட்டு வச்சிடுவோம் ... சரி கதைக்கு வருகிறேன்... தீவிரவாதிகளை மடக்கிய விசயம் எல்லா பத்திரிக்கைகளிலும் வருது.. இந்த செய்தியையும் போட்டோவையும் நாடக நடிகரோட அப்பா படித்திவிடுகிறார்... அவர் அடுத்த ட்ரைனை பிடித்து டெல்லி வருகிறார்.. அவசரத்தில் டிக்கெட் எடுக்காததால் டிக்கெட் செக்கரிடம் மாட்டுகிறார்.... டிக்கெட் செக்கரை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது... அப்பறம் விசாரித்ததில் அவர் தான் மூத்த மகன் என்று தெரிகிறது... அப்பாவும், டிக்கெட் செக்கரும் அந்த கடைசி இரண்டு வேசங்கள்.

ரவி : முடிவு எப்படி ?

கமல் : முடிவு சுபம் தான் எல்லோரும் சந்திக்கிறார்கள்... சின்ன வயசில் கொடைக்கானல் கூட்டிச் செல்லும் போது ஆற்றில் பஸ் கவிழ குழந்தைகள் பிரிந்து போனதாக சொல்கிறார்... அதில் மூவர் தீவிரவாதிகளாகவும், ஒரு பெண் ஏர்கோஸ்டஸ் மாமி, பாதுகாப்பு அமைச்சர், நாடக நடிகர், ஒரு CBI ஆபிஸர், ஒரு டிக்கட் செக்கர் (டிடிஆர்), ஒரு அப்பா என 8 வேடங்கள் சந்திக்கின்றன. தீவிரவாதிகள் எல்லோரும் தாங்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்ததும் திருந்துகிறார்கள்.

ரவி : அதோடு முடிந்ததா ?

கமல் : இல்லை ... இந்த தீவிரவாத முறியடிப்பையும், ஜார்ஜ் புஷ்ஷின் இமேஜைக் காப்பாற்றியதற்காகவும் ... அமெரிக்க அதிபர் அவர்கள் எல்லோரையும் நேரில் சந்தித்துவிருந்து கொடுக்க விரும்புகிறார்.. எல்லோரும் ஒரே ப்ளைட்டில் அமெரிக்க பறக்கிறார்கள்

ரவி : சூப்பர் கண்டிப்பாக இந்த படம் சிவாஜிக்கு நல்ல போட்டியாக முடியும்...

கமல் : எனக்கு போட்டி பிடிக்கும்...பொறமை மட்டும் பிடிக்காது

ரவி : அதை விடுங்க .. இன்னும் கதாநாயகிகளைப் பற்றி பேசவே இல்லையே

கமல் : நம்ம படத்தில் கதாநாய கிக்கா பஞ்சம் ...நாலு பேரைப் போட்டுவிடுவோம்

Sunday, January 07, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

பெரியார் கண்ட வாழ்வியல் (சிங்கப்பூர் நிகழ்ச்சி)

இனிய மாலைப் பொழுதில் பதிவர் நண்பர் குழலி அழைக்க பெரியார் கண்ட வாழ்வியல் குறித்து திராவிட கழக தலைவர் மானமிகு டாக்டர் கி.வீரமணி ஐயா அவர்களின் உரையை கேட்கும் நல்வாய்பு கிட்டியது.

பெரியாரையும், பெரியார் கொள்கைகளையும் கடவுள் மறுப்பு என்ற கால்கிலோ வெங்காயத்திலும், பார்பனீய எதிர்ப்பு என்ற வெள்ளைப் பூண்டுகளில் தினித்து அடைக்கப்பட்டதை மட்டுமே நுகர்ந்து வந்திருந்ததால் பெரியார் பற்றி வேறேதும் அறியாதவனாகவே இருந்தேன். வலைப்பதிவுகளைப் படிக்க தொடங்கியதும் பெரியார் பற்றிய மீள்வாசிப்பு அறிமுகம் ஆகியது. பெரியார் பற்றிய விமர்சனங்களை ஓரம் கட்டிவிட்டு பார்த்தபோது பெரிய அளவு பெரியாரின் கருத்துகளால் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் விளைவுகள் வியக்கத்தக்கதாகவே எனக்கு தெரிகிறது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் ... என்ற திருக்குறள் கருத்துக் கேட்ப சிலவற்றை ஆராய்ந்தால் நமது கருத்துக்களில் தெளிவு கிடைக்கும் என்ற அடிப்படையில் பெரியாரின் சிந்தனைகளை ஒருவர் ஆழ்ந்துபடித்தால் கண்டிப்பாக சமூக நீதியில் அவருடைய பெரும் பங்கு தெரியவரும்.
நிகழ்ச்சி 'காலத்தை வென்றவன்...நீ' என்ற பாடலுக்கு ஸ்ரீ வைஷ்ணவி மற்றும் ஸ்ரீ விசாலாட்சி என்ற இரண்டு மாணவிகளின் நடனத்துடன் இனிதே தொடங்கியது. நிகழ்ச்சியில் மேலும் சில மாணவிகளின் பாரதிதாசன் பாடல், திருக்குறள் வாசிப்பு என்ற சிறு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. திரு.எம் இலியாஸ் அவர்கள் சிங்கப்பூரில் பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தசெய்தியுடன் வரவேற்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து டாக்டர் சுப.திண்ணப்பன் மற்றும் கவிஞர் மா.அன்பழகன் பெரியார் கருத்துக்களில் வாழ்வியல் பற்றி அருமையாக உரையாற்றினார்கள்.

அனைவரும் எதிர்பார்புடன் இருந்த சிறப்புரையை வீரமணி ஐயா அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் ஆற்றினார்கள். ஐயாவின் வயது 74ஐ தாண்டியது என்று அறிந்தேன். தங்குதடையின்றி தண்ணீர் குடிக்காமல் ஐயா ஆற்றிய உரையை கேட்டவர்கள் மெய்மறந்தனர்.

லட்சியத்துக்கு போராடுபவர்கள் பலவித அவமானங்களைக் கடக்கவேண்டும் என்ற தந்தை பெரியாரின் செய்தியை பெரியாரின் பொதுவாழ்வில் அவருக்கு நேர்ந்த அவமான நிகழ்வுகள் (அழுகிய முட்டை வீச்சு) ஆகியவற்றை அவர் எவ்வாறு தாங்கிக் கொண்டு தொடர்ந்து முனைபாக செயலாற்றி மக்களை விழிப்புற வைத்தார் என்ற செய்தியை சொல்லி... வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் அவமானங்களைக் கண்டு துவண்டுவிடக் கூடாது என்று மிகச் சிறப்பாகப் பேசினார்.
இலவசங்களை ஏற்றுக் கொண்டு சோம்பேறிகள் ஆகிவிடக் கூடாது... சகோதரத்துவம் மலர அனைவரம் சக மனிதனை நினைக்கவேண்டும். கும்பிடுதல் பற்றி அவருக்கே உரிய பாணியில் சுவையாக சொன்னார். அதாவது 'அந்த காலத்தில் ஒருவர் ஒருவரைப் பார்த்து கும்பிட்டால் அருகில் வராமல் அங்கேயே நில்' என்பதாகவும் இருந்திருக்கிறது. கும்பிடுவதன் பெருள் இன்றைக்கு அவ்வாறு இல்லாமல் தமிழர்களின் பண்பாடு என்ற நல்நிலையை அடைந்திருக்கிறது என்பதற்காக மகிழலாம்... இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கைகுலுக்கியாவது நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

பெண்களின் முன்னேற்றம் ஒரு சமூகத்தின் முன்னேற்றமாக எவ்வாறு மாறி இருக்கிறது என்பதையும் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று மிகத்தெளிவாக எடுத்துச் சொன்னார். புத்தியுடையவரே புத்தர் என்ற பெரியாரின் புத்தர்பற்றிய கருத்தை நிகழ்வுகளுடன் சுவையாக சொன்னார்.


நிகழ்ச்சிபற்றி மேலும் விரிவாக நண்பர் குழலி எழுதுவார்.

*******

எனக்கு புரிந்தவரை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகள் முழுக்க முழுக்க வாழ்வியலுக்கானது என்பதை புரிந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக அது அமைந்தது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும்
தெய்வத்துள் வைக்கப் படும்


என்ற திருக்குறளும் பல உண்மைகளைச் சொல்கிறது. அதாவாது கிடைத்த வாழ்கையை நமக்கும் அடுத்தவருக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டாலே போதும் அவனே தெய்வமாக போற்றப்படுவான். பலனுக்காக மாட்டுத் தொழுவத்தில் மாடுடன் மாடாக அடிமைகளாக கட்டப்பட்டு... வாழ்க்கை தொலைத்த தலித்துகளுக்கு இறைவனைக் காட்டுவதால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. அவர்களுக்கு உணர்வூட்டி வாழ்வதற்கு கற்றுக் கொடுக்க வாழ்வியலே போதும். வாழ்கையில் அவர்களுக்கு சமூக நீதி கிடைத்து கல்வி கேள்விகளில் சமமாகும் போது ...அவர்கள் குடியிருக்க வீடு பெற்ற பிறகு ... அவர்களுக்கு எப்படி இறைவனை அடைந்து வீடு பேறு அடையலாம் என்பதைப் பற்றி போதிப்பது எளிது - இது என் கருத்து



பி.கு : இது பெரியார் மீதும் அவர்தம் கொள்கைகள் மீதும் மதிப்பு வைத்திருப்பவர்களுடன் பகிர்வதற்காகஏழுதப்பட்ட பதிவு. பெரியாரையோ, நிகழ்சியைப் பற்றியோ உங்கள் எதிர்வினைகள் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் என்பதற்கு இது அரசியல் பதிவு அல்ல. நடந்த ஒரு நிகழ்ச்சி அதைப்பற்றிய எனது பார்வை. புரிந்து கொள்ளுங்கள் !

Thursday, January 04, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

கத்திக் கத்தி குத்துவசனம் ... (மின் அஞ்சலில் வந்தது)



அனுப்பியவர் எனது நண்பர் JT Prabhu

சிட்டிசன்
அஜித் : அத்திப்பட்டின்னு ஒரு ஊர் இருந்துச்சே தெரியுமா ?
நீதிபதி : எருமைப்பட்டின்னு ஒரு ஊர் இருக்கு அது தெரியுமா உனக்கு ? தெரியாதுல்ல... அப்போ அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு !!!
அஜித் : ??? !!!

காக்க காக்க
ஜீவன் : அவளை தூக்குரண்டா... உனக்கு வலிக்கும்டா... அப்ப தெரியும்டா..
சூர்யா : எனக்கு வலிக்கிறது இருக்கடம்டா...உனக்கும் வலிக்கும்டா... ஏன்னா ... அவ 120 கிலோ

சந்திரமுகி
பிரபு : என்ன கொடுமை சரவணன் ?
சரவணன் : எது??? ஜோதிகாவை உனக்கு ஜோடியாகப் போட்டதா ?

ரமணா
விஜயகாந்த் : தமில்ல எனக்கு பிடிக்காத வார்த்தை 'மண்ணிப்பு'
மாணவர்கள் : சார் .. உங்க தமி(லே)ழே எல்லோரும் பிடிக்கலேங்கிறாங்க

திருமலை
விஜய் : யார்டா ... இங்கே அரசு ? நீ அரசா, நீ அரசா அல்லது நீ தான் அரசா ?
நான்காவது நபர் : இங்கெல்லாம் இல்லிங்க... குமுதம் ஆபிஸ் மவுண்ட் ரோட்டில் இருக்கு அங்கே போய் கேளுங்க

நாயகன்
கமல் : அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்
ட்ராபிக் போலிஸ் : அவன் போகும்போது பச்சை இப்போ சிவப்பு நிறுத்தலேன்னா நீதான் அடிபட்டு சாவே பரவாயில்லையா ?

முத்து ?
ரஜினி : நான் எப்ப வருவேன் ... எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது... வர வேண்டிய நேரத்தில கரெக்டா வந்துடுவேன்
கவுண்டர் : ஐஸ்வர்யாராயும் வருவாங்களாண்ணா ? நீயும் ஐஸ்வர்யா ராயை கூப்பிட்டு கூப்பிட்டு... பார்க்கிறே எப்படியும் வருவது மாதிரி தெரியல

சுள்ளான்
தனுஸ் : நான் சுள்ளான்டா ... சூடானா சுளுக்கெடுத்துடுவேன்
அடியாள் : அப்போ ஆறிப் போனா வழுக்கிவிழுந்துடுவியா ?

மாயாவி
சூர்யா : யார்ரா எனக்கு போட்டி ... எனக்கு யாரும் போட்டி இல்லே... நானும் யாருக்கும் போட்டி இல்லே
சத்யன் : அண்ணே இடுப்பில வேட்டி இல்ல ... அதப்பாருங்க மொதல்ல ...

படையப்பா
ரஜினி : அழகேசண்ணா ... பொண்ணுங்கள்ல மூணு வகை சாத்விகம், ப்ரஜோதகம், பயானகம்
செந்தில் : மொறைச்சிட்டு போனால் சாத்வீகம், செருப்பை கழட்டி காட்டினால் ப்ரஜோதகம், செருப்பால் கன்னத்தில் மாறி மாறி அறைஞ்சா பயானகம்னு சொல்றிங்களா ?

ரன்
அதுல்குல்கர்னி : எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா ?
விஜயன் : இது சாம்பார் சோறு ... ஆத்தா உப்பு போடவே மறந்துட்டு சப்புன்னு இருக்கு

வல்லவன்
சிம்பு : நீ அம்பானி பொண்ணைக் கட்டிக்கிட்டு பெரிய ஆளாகனும்னு ஆசைப்படுறே... நான் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படுகிறேன்
நண்பன் : டேய் ஓட்டவாயா... போர்ஜரி கேசுன்னு புடிச்சு உள்ள வச்சிடப்போறானுங்க ... பாத்துடா

தவசி
விஜயகாந்த் : புயல் அடிச்சி பொழைச்சவங்க கூட இருக்காங்களாம் ... ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லேடா
இளவரசு : பத்துப் பேரு செத்ததுக்கு யாரு காரணம்னு போலிஸ் அல்லாடிக்கிட்டு இருக்கு ...ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறிங்களோ ... செல்போன் வீடியோ எடுத்து எவனாவது போட்டுக் கொடுத்துட்டா ... செக்சன் 302 தாண்டி


இந்த சிரிப்பு துணுக்குக்களை எழுதியவர் நம் பதிவர் வெட்டிப்பயல், நெட், மின் அஞ்சல் என பெரிய அளவில் உலா வருது

Tuesday, January 02, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

BAD Taste ?

ஆங்கில தலைப்பு இடுகையில் வைத்தால் தமிழ் மணம் முகப்பில் தெரிய தடை என்று தமிழ்மணம் அறிவிக்குமா ? வேண்டாம் ! :) தலைப்புக்கு *வரி*ச் சலுகை தேவையில்லை !

குத்துப்பாட்டு இல்லாத படங்கள் மிக நல்ல படமாக இல்லாவிட்டால் திரையரங்கை விட்டு குத்தப்பட்டு துறத்தப்படுகின்றன. மக்கள் மன நிலை மோசமாகிவிட்டதா ?

குத்துப்பாட்டில் இரண்டுவகை இருக்கிறது. நலிந்தவர்கம் விரும்பிக் கேட்கும் *மன்மதராசா, வண்டார்குழலி* டைப் பாடல்கள். பணக்காரவர்கம் டிஸ்கோத்தே கிளப்புகளில் கேட்கும் *பொன்மேனி உருகுதே, ஆசை 100 வகை வாழ்வில் 100 சுவை வா?* டைப் பாடல்கள்.

எளியவர்களின் விருப்பம் பணக்காரவர்கத்துக்கு கீழானதாக தெரியும். எளியவர்களுக்கு பணக்காரவர்கத்தின் ஹோட்டல் நடனங்கள் கலாச்சார சீரழிவாக தெரியும்.

ஏழை எளியவர்கள் செய்யும் அலகு குத்துதல், சாமி ஆடுதல் ஆகியவற்றை சிலர் 'ஆண்டவன் வருத்திக் கொள்ளச் சொல்கிறானா ?' என்று பலர் கேள்வி எழுப்புவர். ஆனால் பணக்காரர்கள், நடுத்தர வர்கத்தினர் செய்யும் தீர்த்த யாத்திரையும், கட்டுக் கட்டாகா உண்டியலில் பணக்கட்டை போடுவதைப் பார்க்கும் ஏழை எளியவர்களும் பெருமூச்சுவிடுகின்றனர்.

டப்பாங்குத்து டான்சும், ரெக்கார்ட் டான்சும் ஏழைகளை மகிழ்விக்கிறதென்றால். ஹோட்டல்களில் நடத்தும் அரைகுறை நிர்வாண நடனமும் அதையே தானே பணக்கார வர்கத்துக்காக செய்கிறது ? ஏழைகளுக்கு மூன்று சீட்டு,பணக்காரர்களுக்கு குதிரை ரேசும். சூதாட்டமும் பொழுது போக்கு.

பீடி குடிப்பவனைப் பார்த்தால் சிகெரெட் பிடிப்பவனுக்கு இளப்பம். பாக்கெட் சாரயம் குடிப்பவனைப் பார்த்து ஓட்கா குடிப்பவனின் உளரல். கோவணம் கட்டி இருப்பவனைப் பார்த்து தொடை தெரிய அரைக்கல் டரவுசர் (shorts) போட்டிருப்பவனின் நையாண்டி. புகையிலை மெல்லுபவனைப் பார்த்து பான்பராக் மெல்பவரின் எச்சில் என ஒரு Taste மற்றொரு Tasteஐ நகைக்கிறது.

இறைவன் புகழ்பாட நேரமும் பொருளும் இருப்பவர்களுக்கு பக்தி இலக்கியம் மட்டுமே உயர்வாக தெரியும். இவற்றைப் பற்றி தெரியவாய்ப்பே இல்லாதவர்களான ஏதுமற்றவர்களின் பொழுது போக்காக சினிமாவும் கேலிக்க்கைகளும் உயர்வாக தெரியும் ! பெரும்பாலும் சினிமா ஊடகம் ஏழைகளை (சிறு துளி பெருவெள்ளம்) குறிவைத்தே பணக்காரர்களால் எடுக்கப்படுகிறது.


இது போல நிறைய சொல்லலாம் ...

இதில் ஏழைகளின் / நலிந்தவர்களின் பழக்கம் மட்டும் Bad Taste ? என்று சொல்வது சார்பு நிலைசார்ந்த ஒரு குற்றச் சாட்டு. பிட்பாக்கெட் அடிப்பவன் மட்டும் தானா திருடன் ? அன்னிய செலவானி மோசடி செய்பவனும், அரசாங்கத்தை ஏமாற்றும் ஹர்சத் மேத்தாக்களும் திருடன்கள் தான்.

கெட்ட வழக்கமாக பார்க்கப்படுவது எல்லாமே ஒரு பக்கமாக நின்று கொண்டு பார்பதால் தெரியும் ஒரு மாயத்தோற்றம். Taste பற்றிய நம் நிலைப்பாடு என்றைக்குமே நாம் சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கிறது.


அன்புடன்,

கோவி.கண்ணன்